ஆதித்யா செயற்கை கோள் 2019–ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்

Facebook Cover V02

mayilsawmiசூரியனை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ஆதித்யா செயற்கை கோள் 2019–ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

தூத்துக்குடியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சந்திராயன்– 1 அதன் பணியை முடித்து விட்டது. சந்திராயன்–2 வருகிற 2017–ம் ஆண்டின் கடைசியில் அல்லது 2018–ம் ஆண்டின் தொடக்கத்தில் நிலவில் இறங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பிற நாடுகளின் உதவி இல்லாமல் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திராயன்–2 செயற்கை கோளை இந்தியாவே விண்ணில் செலுத்த உள்ளது.

2018–ல் சந்திராயன்–2 நிலவில் இறங்கும். அங்கு ரோபோ மூலம் நிலத்தின் மண் எடுத்து, ரோபோவில் உள்ள பரிசோதனை கூடத்தில் மணல் ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது. நிலவில் மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே சூரிய ஒளி இருக்கும். எனவே நிலவில் இறங்கும் செயற்கை கோளின் பணி 14 நாட்கள் மட்டுமே இருக்கும். நிலவை சுற்றி வருகின்ற செயற்கை கோள்களின் பணி சுமார் 1 ஆண்டு வரை நடக்கும்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த ஆகஸ்டு மாதம் வரை 10 செயற்கை கோள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மாதத்துக்கு ஒரு செயற்கை கோள் என்ற விகிதத்தில் செயற்கை கோள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் பருவ நிலை மாற்றங்கள், செய்தி பரிமாற்றம் போன்ற செயல்பட்டிற்காக இந்த செயற்கை கோள்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

சூரியனை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ‘ஆதித்யா’ என்ற செயற்கை கோள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த செயற்கை கோள், சந்திராயனை தொடர்ந்து 3 அல்லது 4 ஆண்டுகளில் தயார் செய்யப்படும்.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆதித்யா செயற்கை கோள் 2019–ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று அவர் கூறினார்.

Share This Post

Post Comment