தே.மு.தி.க.வில் அடுத்தடுத்து விலகல்

ekuruvi-aiya8-X3

vijayakanth_12கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு இருந்தார்.

கடந்த காலங்களை போல தனித்து போட்டியிட்டு மக்கள் செல்வாக்கை பெறலாம் என்ற முடிவில் அவர் இருந்தார். ஆனால் தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால் அடுத்தக்கட்டமாக கட்சியின் நிலை குறித்து அறிய விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க.வில் பல மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அணி தலைவர்கள் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்தனர். தே.மு.தி.க.வில் உள்ள 52 மாவட்ட செயலாளர்களில் 24 பேர் விலகி உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் விலகியதும் அங்கு புதிய பொறுப்பாளர்களை விஜயகாந்த் நியமனம் செய்தார். பின்னர் மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார்.

இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நிலையை அறிந்து கட்சியை வலுப்படுத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதற்காக திடீரென ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் உள்ளாட்சி தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களிடம் வேட்பாளர் தேர்வு முறை, தொண்டர்களின் ஆர்வம் குறித்து கேட்டறிவார்.

இதுகுறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

தே.மு.தி.க.வில் இருந்து பலர் விலகி உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்த விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தே.மு.தி.க. தொடங்கியபோது செய்ததை போலவே மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்த உள்ளார். நவம்பர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணம் தொடங்கும். இதற்கான முன் ஏற்பாடுகளை செய்வதற்காகத்தான் மாவட்ட செயலாளர்கள் இல்லாத 18 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். இதற்கான ஆலோசனை கூட்டம் நாளை தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment