2 அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் கவர்னருடன் திடீர் சந்திப்பு

ekuruvi-aiya8-X3

2ministers_governorமுதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் செப்டம்பர் 22-ந் தேதி நள்ளிரவில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
 
அவருக்கு டாக்டர் குழுவினர் மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.
அவருக்கு காய்ச்சலும், நீர்ச்சத்து குறைபாடும் இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. பின்னர் காய்ச்சல் நீங்கிவிட்டதாகவும், மற்ற நாட்களில் உண்ணும் உணவை அவர் உட்கொள்வதாகவும் தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து வருகிறது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அவர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சென்றனர். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்கள் குழுவிடம் கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறி இருந்தார். இதற்கிடையே லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். இதனால் அவரது உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாயின.
 
ஆஸ்பத்திரியில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்ந்து 16 நாட்கள் ஆன நிலையில், திடீர் திருப்பமாக நேற்று பிற்பகலில் கவர்னர் மாளிகையில் கவர்னர் வித்யாசாகர் ராவை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.
 
இந்த சந்திப்பு எதற்காக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு எழுந்திருந்த நிலையில், தலைமைச் செயலகத்துக்கு ராம மோகன ராவ் நேற்று பிற்பகலில் வந்தார். அங்கு அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி மற்றும் சில அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் ராம மோகன ராவ் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் சென்று இருந்தனர்.
 
அங்கிருந்து 3 பேரும் மாலை 6 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். எனவே, மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது பொதுவான நிர்வாகம் மற்றும் சில பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த சந்திப்பு முடிந்ததும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் மீண்டும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
இந்த நிலையில் கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று இரவு வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கவர்னர் வித்யாசாகர் கேட்டுக்கொண்டதன் பேரில், சட்டசபையின் முன்னவரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவுடன் வந்து அவரை சந்தித்து பேசினர்.
முதல்-அமைச்சரின் உடல் நிலை குறித்து அமைச்சர்களிடம் கவர்னர் கேட்டு அறிந்தார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சகம் அமைத்துள்ள உயர்மட்ட தொழில்நுட்ப குழு வரும்போது, செய்யப்படவேண்டிய ஏற்பாடுகள், அவர்களிடம் கொடுக்கவேண்டிய தகவல்கள் ஆகியவை குறித்து கவர்னர் கேட்டு அறிந்தார்.
 
அதுகுறித்தும், அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்தும் கவர்னரிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் விரிவாக எடுத்துக் கூறினார். தமிழக அரசின் பொதுவான நிர்வாகம் பற்றி கவர்னர் கேட்டு அறிந்தார். தினம் தினம் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு நிர்வாகம் குறித்தும், மற்ற பொதுவான விஷயங்கள் பற்றியும் கவர்னரிடம் தலைமைச் செயலாளர் விவரித்து கூறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Share This Post

Post Comment