தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை முதல்–மந்திரிகள் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்வதாக கர்நாடகம் அறிவிப்பு

ekuruvi-aiya8-X3

cavery_2909தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது இல்லை என்றும், மத்திய அரசு கூட்டி இருக்கும் இரு மாநில முதல்–மந்திரிகள் கூட்டத்துக்கு பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கர்நாடக மந்திரிசபை கூட்டத்துக்கு பிறகு சித்தராமையா தெரிவித்தார்.

தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி நேற்று முன்தினம் கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுகுறித்து விவாதிக்க முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அனைத்துக்கட்சி தலைவர்களும், ‘‘கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நடந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு கூட்டி இருக்கும் இருமாநில முதல்–மந்திரிகள் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கக்கூடாது’’ என்று வலியுறுத்தினர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் விதான சவுதாவில் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டிற்கு 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறக்கும்படி உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் இருமாநில முதல்–மந்திரிகள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இதில் பங்கேற்குமாறு முதல்–மந்திரி உள்பட 5 பேருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூட்டத்தில் நான் உள்பட அதிகாரிகள் கலந்துகொள்கிறோம். இதற்காக நாளை (அதாவது இன்று) காலை டெல்லி செல்கிறேன். அதனால் காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து மத்திய அரசு கூட்டி இருக்கும் இருமாநில முதல்–மந்திரிகள் கூட்டத்துக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். அதுவரை தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என்று மந்திரிசபையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் நோக்கம் கர்நாடக அரசுக்கு இல்லை. காவிரி அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் கடந்த 23–ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்கள் மத்திய அரசு கூட்டியுள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பிறகு ஆலோசித்து முடிவு எடுக்குமாறு ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு கூட்டியுள்ள இருமாநில முதல்–மந்திரிகள் கூட்டத்தில் சட்டசபையின் தீர்மானம் குறித்து எடுத்துக் கூறுவோம். கர்நாடகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்தும், அதனால் தமிழகத்திற்கு காவி நீரை திறந்துவிட முடியாத நிலையில் கர்நாடகம் இருப்பதையும் விவரமாக தெரிவிப்போம். மத்திய அரசு கூட்டும் இந்த கூட்டத்தின் முடிவுகளை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.

அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றதையொட்டி விதான சவுதா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்பட மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூரு, மண்டியாவில் 144 தடை உத்தரவு 30–ந் தேதி (நாளை) வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

Share This Post

Post Comment