12 துறை செயலர் பதவி காலி – ராமதாஸ்

ekuruvi-aiya8-X3

Ramadoss01பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒரு மாநில நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் அரசுத் துறை செயலர்கள் தான். ஆனால், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கப் போவதாக கூறி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான நிர்வாகத்தில் 12 முக்கியத் துறைகளின் செயலாளர் பதவிகள் காலியாகக் கிடக்கின்றன. அவற்றை நிரப்ப எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிப்பவை தொழில்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவை தான். முக்கியத்துவம் வாய்ந்த இந்த 3 துறைகளின் செயலாளர் பணியிடங்களுமே பல மாதங்களாக காலியாக கிடக்கின்றன. தொழில் துறை மற்றும் போக்குவரத்துத் செயலாளராக இருந்த சி.வி. சங்கர் கடந்த மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பின் அந்த துறைகளுக்கு புதிய செயலர் நியமிக்கப்படவில்லை.

நெடுஞ்சாலைகள் துறை செயலாளராக உள்ள ராஜிவ் ரஞ்சன் இந்த இரு துறைகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார். மாநிலத்தின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பெரும் பொறுப்பு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு உள்ளது. அத்துறையின் பணிகளை கவனிப்பதே அதன் செயலருக்கு கடினமாக இருக்கும் நிலையில், அதைவிட அதிக பணிச்சுமை கொண்ட தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகளை அவர் வசம் ஆட்சியாளர்கள் ஒப்படைத்திருப்பது எந்த வகையான நிர்வாகத் திறமை என்பதை உணர முடியவில்லை.

தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 10ஆவது இடத்தில் உள்ளது. இந்நேரத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேபோல், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளும் ஏராளமாக உள்ளன. இத்தகைய சூழலில் இந்த 2 துறைகளும் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருப்பதால் இத்துறைகளின் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

மின்சாரத்துறை செயலராக இருந்த என்.எஸ்.பழனியப்பன் 30.06.2016 அன்று ஓய்வு பெற்ற நிலையில், இரு மாதங்களாக அத்துறையின் செயலாளர் பதவி காலியாக கிடக்கிறது. அப்பணியை கூடுதலாக யார் கவனித்து வருகிறார்கள்? என்பது கூட முறைப்படி அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் 17,400 மெகாவாட் திறன் கொண்ட மின்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடக்கும் நிலையில், அவற்றுக்கு புதிய உத்வேகம் அளிக்க துடிப்பான செயலாளர் தேவை. ஆனால், செயலாளரையே நியமிக்காமல் ஒரு அரசு செயல்படுகிறது என்றால் தமிழக அரசின் நிர்வாகத் திறனை அறிந்து கொள்ளலாம்.

உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த அபூர்வா கடந்த 18.06.2016 அன்று இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு அப்பணியிடம் காலியாக உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் தான் இந்த பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார். தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்படவில்லை; உயர்கல்வித்துறை சார்ந்த முக்கிய முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. ஒருநாள் கூட காலியாக இருக்கக் கூடாத உயர்கல்வித் துறை செயலாளர் பதவி சுமார் 3 மாதங்களாக காலியாகக் கிடக்கிறது. வணிக வரித்துறை செயலாளர் பதவியும் 3 மாதங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் வணிக வரித்துறை ஆணையரிடம் கூடுதல் பொறுப்பாகவே வழங்கப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட பொதுத்துறை செயலாளர் பதவி காலியாக உள்ளது. முதலில் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மாவிடமும், பின்னர் முதலமைச்சரின் செயலாளர் சிவதாஸ் மீனாவிடமும் இப்பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இ.ஆ.ப. அதிகாரி ஜதீந்திரநாத் ஸ்வைன் இன்று வரை மாற்றுப்பணி வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பணியாளர் நலத்துறையின் பயிற்சிப் பிரிவு செயலாளர் பதவியிலிருந்து சந்திர மவுலியும், அண்ணா மேலாண்மை நிறுவன இயக்குனர் பணியிலிருந்து டேவிதாரும் மாற்றப்பட்டு 75 நாட்கள் ஆகும் நிலையில், அந்த பணியிடங்கள் நிரப்படவில்லை. பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா இந்த இரு பதவிகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, சமூக சீர்திருத்தத்துறை, சுற்றுலா கலாச்சாரம் மற்றும் அறநிலையங்கள் துறை, சட்டத்துறை, சிறப்பு முயற்சிகள் துறை ஆகியவற்றின் செயலாளர் பணிகளும் காலியாக உள்ளன. மேற்குறிப்பிட்ட 12 துறைகளின் மானியக் கோரிக்கைகளும் அவற்றுக்கு முழுநேர செயலாளர் இல்லாமல் தான் தயாரிக்கப்பட்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செயலாளர்கள் இல்லாததால் அத்துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை. அத்துறைகளுக்காக அறிவிக்கப்பட்ட பணிகளை செயல்படுத்துவதற்குக் கூட முயற்சி நடக்கவில்லை.

செயலர்கள் நியமிக்கப்படாத நிலை இனியும் தொடர்ந்தால் எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்பே எல்லாத் துறைகளிலும் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment