11 மாடி கட்டிடம் இன்று வெடிவைத்து தகர்க்கப்படுகிறது

mouliwakkam_buildingசென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் அருகருகே தனியார் நிறுவனம் சார்பில் 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 28–ந்தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 61 தொழிலாளர்கள் இறந்தனர்.

இதை தொடர்ந்து கட்டிட உரிமையாளர், வடிவமைப்பாளர், என்ஜினீயர் என பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து மற்றொரு அடுக்குமாடி கட்டிடமும் உறுதி தன்மை இல்லை என தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையை ஏற்று அப்போதைய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆபத்தான மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து கட்டிட உரிமையாளர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றார். இதனால் தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து அந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். அதன் பேரில் சென்னை வந்த நிபுணர் குழுவினர் 11 மாடி கட்டிடத்தை ஆய்வு செய்து உறுதி தன்மை இல்லை என அறிக்கை அளித்தனர். இதனால் ஆபத்தான அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.) அதிகாரிகள் அந்த கட்டிடத்தை நவீன முறையில் வெடிகுண்டு வைத்து தகர்க்க முடிவு செய்தனர். இதற்காக திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் அந்த கட்டிடத்தை வெடிவைத்து தகர்க்கும் ஒப்பந்தத்தை கொடுத்தனர்.

கட்டிடத்தை தகர்ப்பதற்கு முன்பு கட்டிடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிவடைந்தவுடன் தரைதளம், தரைதளத்திற்கு கீழ்ப்பகுதியில் உள்ள மற்றொரு தளம், 5–வது மாடியில் உள்ள தூண்கள் ஆகியவற்றில் வெடிபொருட்கள் நிரப்ப துளைபோடும் பணி நடந்தது. அப்போது கட்டிடத்தின் பாகங்கள் சிதறாமல் இருக்க சுற்றிலும் வலைபோன்ற வடிவில் உள்ள கம்பிகள் போட்டு கட்டப்பட்டது.

அடுத்தகட்டமாக, கட்டிடத்தை இடிக்கும் போது அதனை சுற்றி 100 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்யும் பணியில் சி.எம்.டி.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஆபத்தான அடுக்குமாடி கட்டிடத்தை சுற்றிலும் 124 வீடுகள், கடைகள் மற்றும் சிறு நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. அந்த வீடுகள் எந்த நிலையில் உள்ளன என ஆய்வு செய்தனர். வீடுகளில் உள்ள விரிசல்களை வீடியோ, புகைப்படங்கள் எடுத்தனர்.

இந்த பணிகள் முடிந்த பிறகு செப்டம்பர் 25–ந்தேதி அடுக்குமாடி கட்டிடத்தை தகர்க்க முடிவு செய்தனர். இதற்காக 24–ந்தேதியே 2 வாகனங்களில் வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டிடம் தகர்க்கும் பணி அப்போது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அடுக்குமாடி கட்டிடம் நவம்பர் 2–ந்தேதி (இன்று) தகர்க்கப்படும் என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் விஜயராஜ்குமார், காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி, தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர், வீட்டு வசதி வாரிய செயலர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கட்டிடம் உள்ள இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

2 வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் அனைத்தும் கட்டிடத்தின் உள்பகுதியில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

செல்போன் கதிர்வீச்சால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் கட்டிட வளாகத்திற்குள் செல்போன் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்திற்குள் செல்பவர்களின் செல்போன்களை நுழைவு வாயில் அருகே ‘சுவிட்ச் ஆப்’ செய்து போலீசார் வாங்கி கொண்டு அனுமதிக்கின்றனர்.

கட்டிடம் இடிக்கும் பணி குறித்து பொதுப்பணி துறை மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:–

ஒரு தளத்தில் 54 தூண்கள் உள்ளன. 3 தளத்திலும் சேர்த்து மொத்தம் 162 தூண்கள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு தூணிலும் 5 துளைகள் போடப்பட்டுள்ளன. 14 அங்குலம் ஆழமும், 1 அங்குலம் அகலத்திலும் இந்த துளை போட்டு வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு அதன் மீது களிமண் பூசப்படும். பின் அது வெடிக்க வைக்கப்படும்,

முதலில் 5–வது மாடியில் உள்ள தூண்களில் வைக்கப்பட்டு உள்ள வெடிமருந்து 150 மீட்டர் தொலைவில் இருந்து தானியங்கி கருவி மூலம் வெடிக்க செய்யப்படும்.

இதனால் 11–வது மாடி முதல் 5–வது மாடி வரை உள்ள கட்டிடம் உள்பக்கமாக இடிந்து விழும்.

அடுத்த சில வினாடிகளில் தரைதள தூண்களில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்து வெடிக்க செய்யப்படும். அப்போது 5–வது மாடியில் இருந்து தரைதளம் வரை உள்ள கட்டிடம் இடிந்து விடும். கட்டிடத்தை சுற்றி வலைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக ரூ.50 லட்சம் வரை செலவிடப்பட்டு உள்ளது. கட்டிடத்தை சுற்றி 50 மீட்டரை தாண்டி இடிபாடுகள் வர வாய்ப்பு இல்லை.

தற்போது இந்த பகுதியில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலையில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும்.

அதன் பிறகு துளையிடப்பட்ட தூண்களில் வெடிமருந்துகள் நிரப்பும் பணி நடைபெறும். பிற்பகல் 2 மணியில் இருந்து 4 மணிக்குள் கட்டிடம் தகர்க்கப்படும். சுமார் 10 வினாடிகளில் இந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி விடும்.

அப்போது வெளிவரும் தூசி, துகள்கள் மீது தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் மூலம் புகை மண்டலம் குறையும். கட்டிடத்தை சுற்றிலும் 10 தீயணைப்பு வாகனங்கள், 10 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். எனவே யாரும் பீதியடைய தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட்டிடம் இடிக்கும் பணியை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் கஜலட்சுமி கூறுகையில், இந்த கட்டிடம் உள்நோக்கி இடிந்து விழும் வகையில் நவீன உள்வெடிப்பு தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பான முறையில் தகர்க்கப்பட உள்ளது. இதற்காக மருத்துவர்கள், பொதுப்பணித்துறை, வருவாய்துறை என அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். கட்டிடம் இடிக்கும் பணி முடிவடைந்த பிறகு அவர்கள் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றார்.


Related News

 • தமிழகம், கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
 • சபரிமலையில் 200 பேர் மீது வழக்கு – போலீசார் குவிப்பு
 • ராம் லீலாவில் ராவணன் வேடம் அணிந்தவரும் ரெயில் விபத்து பலி
 • விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
 • சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு
 • சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா – போலீஸ் மீது அரசு காட்டம்
 • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் சபரிமலை பயணம் – அய்யப்ப பக்தர்கள் முழக்கம்
 • இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்- இலங்கை அமைச்சர் சாமிநாதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *