டெல்லி விமான நிலையத்தில் நடந்த கைகலப்பு தொடர்பாக எம்.பி.க்களிடம் கட்சி மேலிடம் விசாரணை

ekuruvi-aiya8-X3

2-37கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில், அ.தி.மு.க.வை சேர்ந்த சசிகலா புஷ்பா எம்.பி.யும், தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி.யும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இரு தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வெளியான படமும் ‘மார்பிங்’ செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக, டெல்லி விமான நிலையம் வந்த அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவும் எதிரும் புதிருமாக சந்தித்தபோது கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது, சசிகலா புஷ்பா, திருச்சி சிவா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழக எம்.பி.க்கள் 2 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைகலப்பில் ஈடுபட்டது, விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த திருச்சி சிவா எம்.பி., “சசிகலா புஷ்பா காரணம் இன்றி திடீரென சட்டையை பிடித்து இழுத்து என்னை தாக்கினார்” என்றார்.

சசிகலா புஷ்பா எம்.பி. கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சி பற்றியும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றியும் திருச்சி சிவா தவறாக விமர்சித்ததால் அவரது கன்னத்தில் அறைந்தேன்” என்றார்.

இந்த நிலையில், அ.தி.மு.க – தி.மு.க. எம்.பி.க்கள் இருவரையும் நேற்று அவர்களது கட்சி தலைமை அழைத்து விசாரணை நடத்தியது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மதியம் 2.30 மணிக்கு சசிகலா புஷ்பா எம்.பி. சந்தித்தார்.

அப்போது, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடன் இருந்தார். மாலை 5.15 மணி வரை அங்கிருந்த சசிகலா புஷ்பா, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அப்போது, ஜெயலலிதா அவரை கண்டித்ததாக தெரிகிறது. பின்னர், சசிகலா புஷ்பா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் திருச்சி சிவா எம்.பி. நேற்று மதியம் 1 மணிக்கு சந்தித்து பேசினார். அப்போது, டெல்லி விமான நிலையத்தில் நடந்த பிரச்சினையை முழுமையாக அவர் கருணாநிதியிடம் விளக்கினார். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு திருச்சி சிவாவும் புறப்பட்டு சென்றார்.

கைகலப்பில் ஈடுபட்ட 2 எம்.பி.க்களையும் அழைத்து நேற்று கட்சி மேலிடம் விசாரணை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Post

Post Comment