இலங்கை – இந்தியா இடையே பாலம் கட்டும் திட்டம் இல்லை – சிறிசேனா

Facebook Cover V02

srisena_1108இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கடல் மேல் பாலம் கட்டப்படும் என மத்திய மந்திரி கூறியிருந்தார். இந்த விவகாரம் இலங்கையில் புயலைக் கிளப்பியது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாலம் அமைக்கப்பட்டால், அதனை தகர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சியின் மூத்த எம்.பி. ஒருவர் எச்சரிக்கை விடுத்தார். பாலம் கட்டினால் தமிழர்கள் இலங்கைக்குள் புகுந்துவிடுவார்கள் என மற்றொரு எம்.பி. கூறினார்.

இந்தியாவின் பாலம் கட்டும் திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டதாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சே ஆதரவாளர்களின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

“ராஜபக்சே ஆதரவாளர்கள் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. பாலம் அமைப்பது குறித்து இலங்கை மற்றும் இந்திய அரசுகள் எந்த விதமான பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ளவில்லை. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்தலின்போது மக்களின் வாக்குகளை பெற சில அரசியல்வாதிகள் இதுபோன்ற பாலம் கட்டப்படும் என கூறியதை இவர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் சிறிசேனா.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று பாராளுமன்றத்தில் பேசும்போதும், பாலம் கட்டுவது தொடர்பான தகவலை மறுத்தார்.

Share This Post

Post Comment