லிபரல் கட்சியால் மட்டுமே ஒன்ராறியோவில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் – கத்தலின் வின்

sdsd

cathleen_vyneலிபரல் கட்சியால் மட்டுமே ஒன்ராறியோவில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்று ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர், ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைக்கும் வகையில், தாம் பாரிய மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களின் நீட்சியாகவே அவை இருக்கும் என்ற போதிலும், அவற்றில் எதிர்காலத்தில் நீண்ட பாய்ச்சலும் வேகமும் காணப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் 28ஆம் நாள் முன்வைக்கப்படவுள்ள தமது வரவு செலவுத் திட்டத்தில், தமது திட்டங்கள் முழுமையாக விபரிக்கப்பட்டிருக்கும் எனவும், அதில் ஒன்ராறியோ மக்கள் தற்போது எதிர்நோக்கிவரும் சவால்களை எதிர்கொள்வதற்கான பல்வேறு திட்டங்கள் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்ராறியோவுக்கான சுகாதார பராமரிப்பு சேவைகளுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு தொகை முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை ஒன்ராறியோவின் சுகாதார நலத் திட்டங்கள் குறித்து புதிய சனநாயக கட்சியின் தலைவர் ஆன்ரியா ஹோர்வத் பரிந்துரைத்துள்ள சில கருத்துக்களையும் வரவேற்றுள்ளதுடன், அதுவே மக்களின் கவலைகள் குறித்து சிந்திக்கும் போக்குடையோரின் நிலைப்பாடு எனவும், டக் ஃபோர்ட் கூறியுள்ளமை மக்களின் கவலைகளைப் போக்கும் வகையில் இல்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பழமைவாதக் கட்சியின் புதிய தலைவர் டக் ஃபோர்ட் முன்வைத்துவரும் திட்டங்கள், ஒன்ராறியோவை பின்னோக்கி கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும் எனவும் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் சாடியுள்ளார்.

எதிர்வரும் யூன் மாதம் 7ஆம் திகதி ஒன்ராறியோ சட்டமன்றுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதுடன், அதில் பழமைவாதக் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, கத்தலின் வின் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment