ஒட்டாவாவில் பொலீசாருக்கு இராணுவத்தின் துப்பாக்கிகள்

Otta_gunஒட்டாவாவில் விமான நிலையப் பகுதிக்கான சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்த்துறை அதிகாரிகளுக்கு இராணுவம் பயன்படுத்தும் வகையிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு சுற்றுக் காவல் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவ்வாறு துப்பாக்கிகள் வழங்கப்பட்டு சுற்றுக்காவல் அதிகரிக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எவையும் காரணம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கு துணை புரியும் என்பதற்காகவே ஒட்டாவா அனைத்துலக விமான நிலையத்திற்கான பாதுகாப்பினை வழங்கிவரும் காவல்த்துறை அதிகாரிகளுக்கு இவ்வாறு நவீனரக துப்பாக்கிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதேவேளை யூலை முதலாம் திகதி கனடாவின் 150ஆவது பிறந்த நாள், “கனடா டே” கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் இந்த கொண்டாட்டங்களுக்கான நாட்கள் நெருங்கிவரும் நிலையில், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட தலைநகரின் முக்கிய இடங்களுக்கு 4,50,000ற்கும் அதிகமானோர் பயணிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இநத நிலையில் எதிர்வரும் யூலை முதலாம் திகதி, காவல்த்துறை உத்தியோகத்தர்கள் அனைவரும் விடுமுறைகளைத் தவிர்த்துவிட்டு கடமைக்கு சமூகளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒட்டாவா காவல்த்துறை தெரிவித்துள்ளது.

மொன்றியலைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவின் மிச்சிக்கன் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவமும் பாதுகாப்புக் கரிசனைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒட்டாவா விமான நிலையத்துக்கான இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment