டொனால்ட் டிரம்பின் கருத்து பயனுள்ளதாக இல்லை – ஹர்ஜித் சஜ்ஜன்

Facebook Cover V02

sajjan23அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நட்பு நாடுகளுக்கு தானாக உதவி புரிய அமெரிக்கா முன்வராது என்ற டொனால்ட் டிரம்பின் கருத்து பயனுள்ளதாக இல்லை என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில நேட்டோ நாடுகள் தமது பாதுகாப்பிற்கு போதுமானதாக செலவிடுவதில்லை. மாறாக அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என்று நம்புகின்றன. அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகும் பட்சத்தில் இதனை மாற்றியமைப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன் உங்களை நீங்களே பாதுகாப்பதற்கு தயாராக வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

கனடாவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைவான சதவிகித்தையே பாதுகாப்பிற்கான செலவிட்டு வருகின்றது என்ற வகையில் டொனால்ட் டிரம்பின் கருத்து பயனுள்ளதாக அமையவில்லை என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இத குறித்து அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் மேலும் தெரிவிக்கையில், ‘ கனேடிய இராணுவத்தின் பங்களிப்பும் நேட்டோவில் இருந்தது. அதுமட்டுமின்றி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நேட்டோ படைகளை கனடா வழிநடத்தும் என்று அண்மையில் உறுதியளித்திருந்தது. இந்நிலையில் நாம் மிகப்பெரிய வழியில் முடுக்கிவிடப்பட்டுள்ளோம். இந்த விடயத்தில் தர்மசங்கடத்தில் நாம் இல்லை. உண்மையில் இந்தளவு பங்களிப்பு வழங்கியிருக்கின்றோம் என்பதில் பெருமை அடைகின்றோம்.’ என தெரிவித்துள்ளார்.

மேலும், டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கள் கூட்டணி நாடுகளின் ஒற்றுமை குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் குறிப்பாக ரஷ்யாவுடன் புதிய பனிப் போரை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் அமைதியையும் உறுதிப்பாட்டையும் கொண்டுவருவதற்கு கூட்டணி நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு உதவியாக இருந்துவரும் நிலையில் டொனால்ட் டிரம்பின் இவ்வாறான கருத்து பயனுள்ளதாக இல்லை எனினும் இதனை தேர்தல் பிரசாரம் என்ற வகையில் எடுத்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment