NAFTA உடன்பாடு செயலிழக்குமாயின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்

ekuruvi-aiya8-X3

naftaNAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு செயலிழக்குமாக இருந்தால், கனடாவின் பொருளாதாரம் 0.5 சதவீத வீழ்ச்சியைக் காணும் என கனடாவின் சிந்தனையாளர் சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான குறித்த வர்த்தக உடன்பாடு, எதிர்வரும் கிழமைகளில் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையினை எட்டவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், கனடாவின் சிந்தனையாளர் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஏறக்குறைய 85,000 பேர் ஒரு ஆண்டுக்குள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். அத்துடன் NAFTA ஒப்பந்தத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கனடாவின் பொருளாதாரத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்ற போதிலும், புதிதாக அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் வரியற்ற வியாபாரங்கள் என்பவற்றுக்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் செயலிழக்குமாக இருந்தால், கனடாவின் ஏற்றுமதிகளில் 8.9 பில்லியன் வீழ்ச்சி ஏற்படும் எனவும், இது ஆண்டுக்கு 1.8 சதவீத வீழ்ச்சி எனவும், அதிகபட்சமாக வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் ஏற்றுமதியில் 6 பில்லியன் டொலர்கள் வீழச்சியடையும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கனடாவில் ஏற்படக்கூடிய பணவீக்க அதிகரிப்பு மற்றும் கனேடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சி என்பன, அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கான இறக்குமதியின் பெறுமதியையும் அதிகரிக்கச் செய்யும். அதிகரித்த இறக்குமதி விலைகள், அதனால் ஏற்படும் உள்ளூர் நுகர்வின் அளவு வீழ்ச்சி, ஏற்றுமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் என்பன, முதல் ஆண்டில் கனடாவின் வியாபாரத்தில் 3.3 பில்லியன் டொலர்கள் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment