கனடா தொழிலதிபரின் ஊக்கம் – சென்னை மாணவிகள் சாதனை

ekuruvi-aiya8-X3

kai2கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிஹரன் கீர்த்திவாசன் நன்கொடையில் குறைந்த விலையில், குறைவான எடையில், விரல்களை எளிதாக அசைக்கும் வகையில் செயற்கை கையை சென்னை மாணவிகள் 4 பேர் உருவாக்கியுள்ளனர்.

சென்னையில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவிகள், உயிருள்ள அங்கம் போலவே இயங்கும் செயற்கை கையை உருவாக்கியுள்ளனர். தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள செயற்கை கைகளில், விரல்களை விருப்பத்துக்கு ஏற்ற வகையில் அசைக்க முடியாது. இந்தப் பிரச்சினையை தங்களின் வடிவமைப்பில் இந்த மாணவிகள் சரிசெய்துள்ளனர். இதனை சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி உயிரி மருத்துவ பொறியியல் துறை கடைசி ஆண்டு மாணவிகள் ரதி ஆதர்ஷி, சந்தான லக்ஷ்மி, ஸ்ருதி ஸ்ரீ என்னும் மூவரும், மருத்துவ மின்னியல் முடித்துவிட்டு பெங்களூருவில் பணியாற்றும் வைஷாலினி வெங்கட்ராமன் என்பவரும் இணைந்து வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர்.

இது குறித்து, ஊடகவியலாளர்களுடன் பேசிய, எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி உயிரி மருத்துவ பொறியியல் துறைத் தலைவரும் இந்த செயல்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான கவிதா, “முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கைகளை இலவசமாக வழங்கி வரும் தன்னார்வ அமைப்புகளை அணுகிப் பேசினோம். அவர்கள் வழக்கமான கையைப் போல் இயங்கி, பொருட்களை எளிதான வகையில் எடுக்க முடிகிற செயற்கை கைகளையே பயனாளிகள் விரும்புவதாகக் கூறினர்.

இதைத் தொடர்ந்து மாணவிகள் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான செயற்கை கை தொழில்நுட்பங்களைப் படித்தனர். 3டி பிரிண்டிங் நுட்பம் குறித்து அறிந்துகொண்டனர். அதையடுத்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்த முடிகிற, பேட்டரி மூலம் இயங்கக்கூடிய செயற்கை கை குறித்து ஆய்வு செய்தனர்.

தற்போதைய செயற்கைக் கைகள் அதிக எடை கொண்டதாகவும், எளிதில் அசைக்க முடியாததாகவும் இருக்கின்றன. இதனால் எடை குறைவான செயற்கை கைகளை உருவாக்க முடிவு செய்து தயாரிப்பில் இறங்கினோம்.

செயற்கை கைகளின் உள்ளங்கையில், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் 7 சிறிய ரக மோட்டார்களை பொருத்தி கைவிரல்களை இலகுவாக அசைக்க வைக்கிறோம். சர்வதேச பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கையின் எடை சுமார் 800 கிராம் மட்டுமே.

இத்தகைய நவீன அம்சங்கள் கொண்ட செயற்கை கைகள் வெளிநாடுகளில் கிடைக்கின்றன. ஆனால், அவற்றின் விலை மிக அதிகம். இந்திய மதிப்பில் சுமார் 64 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய். இதனால், அதே சிறப்பம்சங்களோடு கூடிய செயற்கை கைகளை தற்போது 64 ஆயிரம் ரூபாய்க்கு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த செயல்திட்டத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை கிடைத்தது. கனடாவில் இந்த வடிவமைப்புக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டது.

இந்த உருவாக்கத்துக்கு என்னுடைய முன்னாள் மாணவரும் கனடா நிறுவனம் ஒன்றின் தலைவருமான ஹரிஹரன் கீர்த்திவாசன் நன்கொடை அளித்தார். தற்போது மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

வருங்காலத்தில் இன்னும் சில நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு மாணவிகளின் உருவாக்கத்தை மேம்படுத்துவோம் என்று கூறினார்.

Share This Post

Post Comment