NAFTA பேச்சுவார்த்தை : வாகன உற்பத்தி தொடர்பில் அமெரிக்கா அழுத்தம் கொடுக்காது என நம்பிக்கை

ekuruvi-aiya8-X3

nafta25NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த மூன்றாம் சுற்று பேச்சுக்கள் நேற்று ஒட்டாவில் ஆரம்பமாகியுள்ளன.

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையேயான இந்த வர்த்தக உடன்படிக்கை கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக நடப்பில் உள்ள நிலையில், அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அமெரிக்காவில் புதிதாக ஆட்சி அமைத்த அதிபர் டொலர்ட் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியது.

இதனை அடுத்து அது குறித்து கலந்தாலோசித்து தீர்மானங்களை எட்டுவதற்காக, இது குறித்த பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் முதலாம் கட்ட பேச்சுக்கள் அமெரிக்காவிலும், இரண்டாம் கட்ட பேச்சுக்கள் மெக்சிக்கோவிலும் நடைபெற்றன.

இவ்வாறான நிலையிலேயே அதன் மூன்றாகம் கட்ட பேச்சுக்கள் நேற்று ஒட்டாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த மாநாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் பேச்சுவார்த்தை குழுவினர் தலைவர், அமெரிக்கா தனது வாகன உற்பத்தித் துறை மற்றும் ஏற்றுமதிகள் தொடர்பில் புதிய முன்மொழிபுகள் எதனையும் இந்த பேச்சுக்களின்போது முன்வைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த பேச்சுக்களின் போது வாகன உற்பத்தித் துறை குறித்தும் பேசப்படவேண்டி உள்ள போதிலும், புதிதாக தீவிரமான விடயங்கள் எவையும் முன்வைக்கப்படும் என்று எண்ணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மெக்சிக்கோவை வலுவான நிலநடுக்கம் தாக்கி பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், இந்த NAFTA தொடர்பிலான அனைத்து பேச்சுக்களும் தடையின்றி நடைபெறவேண்டும் என்று மெக்சிக்கோ பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

துர்ரதிஸ்டவசமாக மெக்சிக்கோவில் ஏற்பட்டுள்ள சம்பவம் மிகவும் கவலைக்குரியது எனவும், எனினும் பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ளவர்களோ அவர்களது குடும்பத்தாரோ இந்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதி வரைக்கும் பல சுற்று பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ள நிலையில், அனைத்தும் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்பட்டு, தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment