‘தமிழர் தாயகமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும் – நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்’ இரண்டாவது சர்வதேச மாநாடு

ekuruvi-aiya8-X3

conference 2வருகின்ற மே மாதம் ஓட்டாவாவில் நடைபெறவிருக்கின்ற தமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலை, நீதிக்கான தேடல் மற்றும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் – ஓட்டாவா 2018 என்னும் தலைப்புடனான இரண்டாவது சர்வதேச மாநாடு தொடர்பில் ஊடகவியலாளர் மாநாடு மார்ச் 16ம் ஆம் திகதி வெள்ளிக் கிழமை Scarborough வில் நடைபெற்றது. இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் மாநாட்டை கூட்டாக முன்னெடுக்கும் ஏழு கனடிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.
இரண்டாவது சர்வதேச மாநாட்டிற்கான அமைப்புக் குழுவின் தலைவர் பெனற் மரியநாயகம் (Benat Mariyanayakam) அகவணக்கத்துடன் ஊடகவியலாளர் சந்திப்பை ஆரம்பித்து வைத்தார். கூட்டாக மாநாட்டை முன்னெடுக்கும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது சர்வதேச மாநாட்டின் கருப்பொருள், நோக்கங்கள், பங்கு கொள்ளும் அறிவியலாளர்கள் மற்றும் மாநாடு நடைபெறவுள்ள இடம், காலம் என்பனவற்றை சுருக்கமாக தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.

மேலும், ஓட்டாவாவில் 1999ல் நடைபெற்ற முதலாவது மாநாடு பற்றியும் அதன் பின்னரான காலங்களில் தமிழ் மக்கள் மிகவும் கொடுமையான வரலாற்றைக் கடக்க வேண்டியிருந்தது என்றும், தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இன்றைய நிலையிலிருந்து அடுத்த பத்தாண்டு காலத்துக்கான விடயங்களை சர்வதேச ரீதியில் அறிவியல் தளத்தில் நிறுவி வலுப்படுத்த வேண்டியமையும், இளைய சமூகத்தை இணைத்தவாறு இம்மாநாட்டின் தொகுப்புக்களை அடுத்த சந்ததியினருக்கு கிடைக்க வழி செய்வதுமாகவே இம் மாநாடு முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்டார். அத்துடன் இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஸ்ரீலங்கா மீதான முன்னெடுப்புக்களுக்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் இம்மாநாட்டில் கருத்தமர்வுகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார். மேலும், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் அமைப்பு மாற்ற விடயங்கள் உட்பட கடந்த இருபது வருட கால ஈழத் தமிழர் நிலைமைகளை ஆராய்வதாக, தொகுப்பதாகவும் மற்றும் அடுத்த பத்தாண்டுகளுக்கான வேலைத் திட்டங்களை உருவாக்க வல்ல பெறுபேறுகளை எதிர்பார்த்தும் இம் மாநாடு திட்டமிடப்பட்டள்ளது எனவும் தெரிவித்தார்.

Conference 1இவ்வாறான இம்மாநட்டின் முக்கியத்துவத்தை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வதினூடாக மாநாட்டை வெற்றிபெறச் செய்வதில் ஊடகங்களையும் பங்காளர்களாக இணைந்து பங்காற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மற்றய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இம் மாநாட்டில் பங்கெடுப்பதில் தமது கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்தனர்.

கனடியத் தமிழர் தேசிய அவையின் பிரதிநிதி பாமிலா (Pamela) கேதீஸ்வரன் தனது உரையில், தொடர்ச்சியான தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இளையோர்களை இணைக்க வேண்டியதன் முக்கியத்தவம், தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்பட்டுதல் மற்றும் தமிழ் மக்களது உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார். இவை தொடர்பில் அறவியல் தளத்தில் முன்னெடுக்ப்படும் இம்மாநாடு முக்கியமனதொன்றக அமைகின்றதெனவும், இம்மாநாட்டை கூட்டாக நடாத்துவதில் கனடியத் தமிழர் தேசிய அவை பங்கு பெறுவதானது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் தெரிவித்தார்.

மிசிசாகா தமிழ் சங்கத்தின் பிரதிநிதியான ருஹ்சா (Ruksah) சிவானந்தன் கருத்துத் தெரிவிக்கையில், பல கனடிய அமைப்புக்கள் கூட்டாக முன்னெடுக்கும் இம் மாநாட்டில் உலகில் பல நாடுகளில் இருந்து அறிவியலாளர்கள், புலமையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்திற்கு உரித்துடைய மக்கள் என்கின்ற விடயங்களில் தமது நிலைப்பாடுகளை ஆய்வுகள் ஆதாரங்களுடன் முன்வைக்கவுள்ளனர் எனக் கூறினார். இப் புலமைசார், அறிவியல் ஆய்வானது தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் கனடிய சிவில் சமூக மன்றத்தின் சார்பில் கலந்துகொண்ட திரு. பிரணவசிறி ஐயாத்துரை கூறுகையில், பங்கேற்கும் அனைத்து அமைப்புகளும் கூட்டாக இந்த மாநாட்டை முன்னெடுப்பது ஒரு சிறப்பான முன்னுதாரணம் என தெரிவித்தார். அத்துடன் இன்றைய அரசியற் சூழலில் தமிழ் மக்களுக்கான உரிமை சர்வதேச சட்டச் சூழலில் சட்டபூர்வ நியாயத்தை பெறும் வகையில் பலப்படுத்த வேண்டிய அவசியத்திலும் இம் மாநாடு முக்கியத்துவத்துவம் பெறுவதாகவும் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி திரு. நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில், கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலான காலத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள் மீதான இன்படுகொலை மற்றும் தமிழ் மக்களது உரிமைகள் விடயங்களில் அறிவியலாளர்கள், புலமையாளர்கள் தமது கருத்துக்களை சுயாதீனமாக முன்வைக்கும் மாநாடாக அமையும் எனத் தெரிவித்தார். போராட்ட வரலாற்றில் மாறிவரும் சூழலுக்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பு வடிவங்களும் மாற்றம் பெறுகின்றன. அவ்வாறன பின்னணியில் 2009ன் பின்னராக தேற்றம் பெற்ற அமைப்புக்கள் பல கூட்டாக இம் முயற்சியை முன்னெடுப்பது முக்கியமானதெனக் குறிப்பிட்டார். அத்துடன் மிகப் பெரும் பொருட்செலவில் நடைபெறும இம்மாநாடு மக்களின் பங்குபற்றுதலோடு முழுமையாக நடைபெற ஊடகங்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஒட்டவா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற திரு. சத்தி நன்னிதம்பி, 1999 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாநாட்டில் பங்கெடுத்தவர். மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இணைந்து எவ்வாறு முதலாவது சர்வதேச மாநாட்டை முன்னெடுத்தனர் என்றும், அந்த மாநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆய்வுரைகள் எவ்வாறு அரசியல்வாதிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், கல்வித் தேவைகளுக்கும் மற்றும் செயற்பாட்டுத் தளத்தில் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை வலுப்படுத்தவும் பயன்பட்டு வருவதாக தெரிவித்ததோடு, இவ் ஆய்வுரைகளின் தொகுப்பு உலகெங்கிலும் பல நூலகங்களில் இன்னும் கிடைக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் பின்னணியில், இன்று முன்னெடுக்கப்படும் இரண்டாவது சர்வதேச மாநாட்டின் பெறுபேறுகள் எவ்வாறு தமிழர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால தலைமுறையினர் தமிழர்களின் தேசிய உரிமைப் போராட்டத்தையும் புரிந்து கொள்ளுதல் என்பவற்றில் உதவும் எனவும் சுட்டிக் காட்டினார்.

கியூபெக் தமிழ் அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதி நித்தியா சுப்ரமணியம் காணொளிப் பதிவொன்றினூடாக தமது கருத்துக்களை வழங்யிருந்தார். இம் மாநாடு இனப்படுகொலையின் தன்மை, காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி அறியவும், தமிழ்த் தாயகத்தின் தற்போதைய சூழ்நிலையைப் பகுப்பாய்வு செய்து ஆவணப்படுத்தவும், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கவும், தமிழ் இனப்படுகொலையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தில் நிலங்கள், கலை, கலாச்சார மற்றும் பொருளாதார அழிவு ஆகியவற்றை வெளிப்படுத்தவும் உதவும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் 1999 மாநாட்டில் பங்கேற்று, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்கள் நடைபெறவிருக்கும் இரண்டாவது மாநாட்டில் பேராளர்களை உள்வாங்கும்; குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டின் கருப்பொருள்கள், தலைப்புகள் மற்றும் கட்டமைப்பின் மீதான ஒரு பார்வை எனும் தலைப்பில் தமது உரையை வழங்கினார்.

உலகெங்கிலும் இருந்து பிரபலமான அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்று இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, மற்றும் இனப்டுகொலை பற்றி தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முன்வந்துள்ளார்கள் எனவும், மேலும், குழு கலந்துரையாடல்கள் மற்றும் அமர்வுகள் திட்டமிடப்பட்டு மூன்றாம் நாள் மாநாட்டின் முடிவை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி சமர்ப்பிக்கவும் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இம்மாநாடு நடைபெறவிருக்கும் இடம் போக்குவரத்து தங்குமிட வசதிகள் என்பன பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் இம் மாநாடு பற்றிய விபரங்களை சுருக்கமாக உள்ளடக்கிய துண்டுப் பிரசுரமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பின்னர், ஊடகவியலாளர்களுக்கான கேள்வி நேரம் வழங்கப்பட்டது. முதலாவது மாநாட்டு காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையில் உருவாகியிருக்கும் காலச்சூழல் மாற்றத்தில் கூட்டாக முன்னெடுக்கப்படும் இம் முயற்சியின் தன்மை தொடர்பான கேள்விகள், மக்கள் மாநாட்டில் பங்கு கொள்வதற்கான ஒழுங்கமைப்புகள், தாயக அரசியலாளர்களின் பங்குபெற்றல் மற்றும் இம்மாநாட்டு நோக்கங்கள் விரிவு பெறுவதில் எதிர்காலத் திட்டங்கள் என்பனவற்றில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஏற்பாட்டுக் குழு பிரதிநிதிகள் கேள்விகளுக்கான தகுந்த விளக்கங்களை அளித்திருந்தனர். அத்துடன் மேலதிக விபரங்களையும், தரவுகளையும் மாநாட்டு இணையத் தளத்தில் பெற முடியும் எனவும் தெரிவித்தனர்.

கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அனைவருக்குமான நன்றி தெரிவித்தலுடன் இச்சந்திப்பு நிறைவுற்றது.

மாநாட்டு இணையத்தளம் (Website): www.tamilconferences.org

சமூக வலைத்தளம் (Social Media): https://www.facebook.com/tamilconferences/

தொலைபேசி: (647) 243 9396
மின்னஞ்சல்: admin@tamilconferences.org

நிதிப் பங்களிப்புக்களை வழங்க:
இணையம் ஊடான நிதிப்பங்களிப்புக்கான “GoFundMe” பக்கத்திற்கு செல்ல:https://www.gofundme.com/OttawaTamilConference

Share This Post

Post Comment