மாயமான விமானத்தில் நீருக்கடியில் இருப்பிடத்தை காட்டும் கருவி இல்லை

ekuruvi-aiya8-X3

vimanam_24மாயமான விமானத்தில் நீருக்கடியில் இருப்பிடத்தை காட்டும் கருவி இல்லை
சென்னையில் மாயமான விமானத்தில் நீருக்கடியில் இருப்பிடத்தை காட்டும் கருவி இல்லை என்பது உள்பட சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திர வனப்பகுதியிலும் தேடும் பணி நடக்கிறது.

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட்பிளேருக்கு புறப்பட்ட ஏ.என்.32 விமானம் ஜூலை 22-ந்தேதி மாயமானது. விமானத்தில் விமானப்படை வீரர்கள், சிப்பந்திகள் உள்பட 29 பேர் பயணித்தனர். அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருப்பதாக தெரியவந்தாலும், அதன் இருப்பிடத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

விமானத்தை தேடும் பணி 11-வது நாளாக நேற்றும் நடந்தது. அந்த விமானத்தில் இருந்து இறுதியாக தகவல் கிடைத்த இடம், நேரம், விமானம் புறப்பட்ட நேரம் ஆகியவற்றை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தேடும் பணிகள் நடந்து வருகிறது. அந்த விமானத்தை கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து டெல்லி விமானப்படை வட்டாரத்தில் விசாரித்ததில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

அந்த ஏ.என்.32 விமானம் ராணுவ வீரர்கள் மற்றும் கருவிகளுடன் பலமுறை வங்காள விரிகுடா கடல் மீது பறந்துள்ளது. பொதுவாக ராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நவீன விமானங்களான சி130ஜெ, சி17 போன்ற விமானங்களில் நீருக்கடியில் அந்த விமானத்தின் இருப்பிடத்தை காட்டும் கருவிகள் இருக்கும்.

ஆனால் ஏ.என்.32 விமானங்கள் எதிலும் அதுபோன்ற நீருக்கடியில் இருப்பிடத்தை காட்டும் கருவிகள் இல்லை. இதுவே மீட்பு படையினருக்கு அந்த விமானம் கடலுக்கு அடியில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

நாங்கள் நீர்மூழ்கி கப்பலின் சோனார் என்ற கண்டுபிடிக்கும் நவீன கருவி, இதர கப்பல்கள் மற்றும் கப்பற்படை கருவிகளை கொண்டும் விமானத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். ஆனால் மாயமான விமானத்தில் இருந்து எந்த சிக்னல்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடி வருகிறோம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த விமானத்தில் இ.எல்.டி. என்ற அவசரகால இருப்பிடத்தை காட்டும் பொதுவான கருவிகள் இரண்டு உள்ளன. அதில் ஒன்று அமெரிக்காவிலும், மற்றொன்று பிரான்சிலும் தயாரானது. அவசரகாலத்தில் விமானி தான் அந்த கருவிகளை இயக்க வேண்டும். அப்போது தான் அந்த கருவியில் இருந்து சிக்னல்கள் ஒலிபரப்பாகும். அந்த கருவிகள் தானாக இயங்காது என்பது தான் ரேடியோ அலைகள் அதில் இருந்து நீரில் வெளிப்படாததற்கு காரணம்.

எனவே நீருக்கடியில் அவசரகால இருப்பிடத்தை காட்டும் கருவிகள் (அண்டர் வாட்டர் எ.எல்.டி.) கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அவசரகாலத்தை கருதி தண்ணீருக்கு மேல் பறக்கக்கூடிய சில விமானங்களுக்கு முதலில் அந்த கருவியை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

அதேபோல ஏ.என்.32 விமானத்தில் தானியங்கி கண்காணிப்பு-ஒலிபரப்பு கருவியும் இல்லை. இந்த கருவி விமானத்தின் பயணம், நேரம் போன்ற தகவல்களை கடற்பயண செயற்கைகோளுக்கு தாமாகவே அனுப்பும் வசதி கொண்டது. ஆனால் மாயமான விமானத்தில் உள்ள கருவி தேவைக்கு ஏற்ப விமானியால் அதன் சுவிட்ச்சை போடுவது, அணைப்பதன் அடிப்படையில் இயங்கக்கூடியது என்பதும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களே மாயமான விமானத்தை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

விமானத்தை தேடும் பணிகள் குறித்து ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறும்போது, “சென்னை கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தில் இருந்து 12.25 மணிக்கு ஏ.என்.32 விமானம் தொடர்பில் இல்லை என்ற தகவல் கிடைத்தது. விமானத்தை தேடும் பணிகள் உரிய வழக்கமான நடவடிக்கைகளின்படி 12.30 மணிக்கு தொடங்கியது. விமானம் மாயமானபோது பருவநிலை பல அடுக்கு மேகங்கள் சூழ்ந்தும், கெட்டியான வெப்பச்சலனமுமாக இருந்தது. மாயமாவதற்கு முன்னதாக விமானி பலத்த மழையை தவிர்ப்பதற்காக வலது பக்கம் விலகிச்செல்ல அனுமதி கேட்டுள்ளார்” என்றார்.

இதற்கிடையே, ஆந்திர மாநில வனப்பகுதியில் விமானம் போன்ற ஏதோ ஒரு பொருள் வெடித்து விழுந்ததாக சில பழங்குடியினர் வனத்துறையிடம் தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ஆந்திர மாநில வனப்பகுதியிலும் விமானத்தை தீவிரமாக தேடி வருகிறோம். பழங்குடியினர் கூறும் பகுதி சத்தீஷ்கார் மற்றும் ஒடிசா மாநில எல்லையையொட்டிய விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியாகும். இது மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ள பகுதி. இங்கு கடந்த சில நாட்களாக மோசமான பருவநிலை காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் பெரிய அளவில் எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து விமானத்தை தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.

Share This Post

Post Comment