எது நல்லாட்சி – இளையவன்னியன்

ekuruvi-aiya8-X3

amalraj32சிறிலங்காவின் இன்றைய ஆட்சியை எல்லோரும் நல்லாட்சி என்றே அழைக்கிறார்கள். ஐநா மனித உரிமை ஆணையாளர் உற்பட அனைத்துலக இராஜ தந்திரிகளும் அவ்வாறே அழைக்கிறார்கள். ஆளுபவர்களும் அப்படியே தம்மை சொல்லிகொள்ளுகின்றனர். தமிழர்களும் அப்படியே அழைக்க பழகிவிட்டனர். நல்லாட்சி என்று அழைப்பதில் ஆளும் தரப்பிற்கும், அனைத்துலக தரப்பிற்கும் நன்மை இருக்கிறது, அதற்கான தேவையும் இருக்கிறது.

ஆனால் தமிழர்களுக்கு என்ன இருக்கிறது?

நல்லாட்சி என்பது வெறுமனே வரைவிலக்கணத்திற்கு ஊடாக அடையாளப்படுத்தப்படுகிற ஒன்றல்ல. மாறாக அது ஆட்சியின் நடைமுறைக்கூடாக, அதன் தன்மை, பண்புகளை மதிப்பீடு செய்வதன் ஊடாக அடையாளப்படுத்தப்படுகிற ஒன்று ஆனால் சிறிலங்காவை நல்லாட்சி என்று அழைப்பது மேற்சொன்ன மதிப்பீடுகளுக்கு ஊடாக வெளித்தெரிந்த, வெளிக்கொணரப்பட்ட சொல்லாட்சி தானா?

யுத்தம் முடிந்த பிற்பாடு 2010 தேர்தல் நடைபெற்றது அப்போது பொன்சேகாவை நிறுத்தியதன் பின்னணியில் அமெரிக்காவே இருந்தது.

ஆனாலும் அன்றைய சூழலில் நல்லாட்சி என்னும் கோசத்தை முன்னிறுத்துவதற்கான உள்ளூர் மற்றும் உலக அரசியல் சமூக சூழல் அமையவில்லை.

காரணம் உள்ளூரில் வெற்றி சாரல் அப்போதும் பலமாக அடித்துக்கொண்டு இருந்தது. உலக அரங்கில் அப்போது தான் யுத்தத்தை வெற்றிகொண்டமைக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டிருந்தது.

ஐநா வின் 2009 புரட்டாதி மாத கூட்டத்தொடரில் அது நிகழ்ந்தேறி இருந்தது. அமெரிக்கா அன்று ஆளுபவரை மாற்றி அமைப்பதற்கான தனது முழுப்பலத்தையும் பிரயோகிக்கவில்லை. அதற்காக வேலை செய்யவும் இல்லை.

2015 இல் நல்லாட்சி என்னும் கோசம் மிகவும் கவர்ச்சியான முறையில் முன்வைக்கப்பட்டது, மேற்குலகத்தை இந்தியாவை பொறுத்த மட்டில் மகிந்தவை மாற்றுவது மட்டுமே நல்லாட்சி கோசத்துக்கான ஒரே ஒரு காரணமாக கொண்டார்கள்,

மிகவும் கடுமையாக தந்திரோபாய ரீதியில் அமெரிக்காவும் இந்தியாவும் வேலை செய்தது. வெறும் தெற்கை வைத்து மகிந்தவை மாற்ற முடியாது என்பது நன்கு அறியப்பட்ட விடயம் தான்.

அதனால் கிட்டத்தட்ட முப்பது வருடம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட தற்போதும் எல்லா விடயங்களிலும் இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் இரு மக்கள் கூட்டத்தின் ஒரு சந்திக்கும் புள்ளியை கண்டறிகின்றனர். அந்த ஒற்றை காரணி மகிந்தவின் மீதான வெறுப்பு.

இந்நிலையில் ஊழல், சர்வாதிகார போக்கு, தமிழ் மக்களின் கோபம், வடக்கின் ஒருவகையான இராணுவ ஆட்சி என்பவற்றை முதலீடாக கொண்டு மகிந்தவை மாற்றுவது தான் நல்லாட்சி என்னும் மிகப்பெரிய மாய தோற்றத்தை தேர்தலுக்கு முன்பும் தேர்தலின் போதும் கட்டி எழுப்பி அதில் மேற்குலகம் வெற்றி கண்டது.

2015 இல் இச்சொல்லாடல் வெறுமனே தேர்தல் நோக்கத்துக்காக பிரபல்யபடுத்த பட்ட ஒன்றல்ல. தேர்தலின் பின்பும் அந்த சொல்லை வைத்தே அரசியல் செய்ய வேண்டும் என்கிற முற்கூட்டிய தீர்க்க தரிசனத்தோடு வைக்கப்பட்ட கோசம் அது.

“நாங்கள் இதயத்தால் இணைந்திருக்கிறோம் நல்லாட்சி படகை கவிட்டு போட்டிராதையுங்கோ” என்று தமிழ் தலைவர்களும் , நல்லாட்சிக்கு ஒரு வாய்ப்பளிப்போம் என்று உலக நாடுகளும் சொல்லுவதின் தாற்பரியமும் அதுதான்.

அதாவது தனக்கு சார்பான அரசாங்கம் வந்த பின் அதனை தொடர்ந்து காப்பாற்றுவதற்கும் நல்லாட்சி என்னும் கோசமே காப்பரண் என்பது முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்.

ஆண்டவனே வந்து சொன்னாலும் அமெரிக்கா இந்த அரசாங்கத்துக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எதையும் செய்ய போவது இல்லை. பேய் ஆட்சி செய்தாலும் மேற்குலகத்திற்கு பிடித்தமான பேய் ஆட்சி செய்தால் அது நல்லாட்சி தான் இது உலகளாவிய அவர்களின் கோட்பாடு. இலங்கை தீவிலும் இதுதான் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

உண்மையில் உன்னதமான அரசியல் விழுமியங்களை உள்ளடக்கிய நல்லாட்சி என்னும் சொல்லாடல் இத்தீவை பொருத்தமட்டில் மகிந்தவை ஆட்சியை விட்டு நீக்குவதோடு, மஹிந்த ஆட்சியோடு ஒப்பிடுவதோடு மட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

நால்லாட்சி என்பது மிக முக்கியமான சில அடிப்படை உயர் பண்புகளை கொண்டது. அரசாங்கத்தின் தீர்மானம் எடுத்தல் செயற்பாடுகள் , செயற்றிட்ட அமுலாக்கங்கள் போன்றவற்றில் மக்களின் பங்கு பற்றல் இருக்கவேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை வழிவகைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். சட்ட ஆட்சி நிலவவேண்டும் , அனைவரும் சமமாக நடாத்தப்படுவதோடு எவரும் புறந்தள்ளளுக்கு உள்ளாகாமல் இருக்கவேண்டும் , எந்த செயன்முறையிலும் வெளிப்படை தன்மை இருக்கவேண்டும் மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படவேண்டும் மக்கள் தகவல்களை அறிந்துகொள்ளுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

கொடுக்கப்படுகிற வாக்குறுதிகளுக்கும் செய்கிற செயற்பாடுகளுக்கும் ஆள்பவர்கள் கணக்கு காட்டவேண்டும் கூறவேண்டும் , சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்ளவேண்டும்.

வளங்கள் உத்தம பயன்பாட்டுக்கு உற்படுத்தப்படுவதோடு வினைத்திறனான நிர்வாக இயந்திரத்தையும் கொண்டிருத்தல் வேண்டும். இப்படியான சில பண்புகள் ஒரு ஆட்சியை நல்லாட்சி என்று அழைப்பதற்கான தகுதிகளாக பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் ஆட்சி அவ்வாறான பண்புகளை உள்ளடக்கி இருக்கின்றதா ?

மைத்திரியின் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் மைத்திரியோடு நிற்கும் சிறுமியை, தாய் இக்கணம் வரை தேடிக்கொண்டு இருக்கிறார், கடத்தி செல்லப்படுபவர்கள் பின்னர் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவது என்னவகையான சட்ட ஆட்சி , அது தொடர்பாக அரசினதும் அரசாங்கத்தினதும் முப்படைத்தளபதியுமான சனாதிபதியிடம் கேள்வி எழுப்பபடுகிற போது அது தொடர்பாக இதுவரை அறியேன் என்று பதில் கூறுவது எப்படியான பொறுப்புக்கூறல், தமிழ் மக்கள் எதிர்கொண்ட எந்த அநீதிக்கு கணக்கு கூறி இருக்கிறார்கள்?

கைதின் பின்னான நிலைமைகள் தொடர்பாக என்னவிதமான வெளிப்படை தன்மை பேணப்படுகிறது. சிங்கள குடியேற்றங்களையும், முளைத்துக்கொண்டிருக்கும் புத்த பெருமான்களையும் என்ன விதமான நல்லாட்சிக்குள் உள்ளடக்குவது. மனித புதைகுழிகளின் துரித விசாரணைக்கு நீதிமன்றுக்கு இடையூறாக இருப்பது எது?

பக்கத்துக்கு ஊரில் மாணவர்கள் மரத்தின் கீழ் இருந்து படிக்க ஆட்சியாளர்கள் அதற்கு அடுத்த ஊரில் பஸ் குடுத்து பிளாட்போர்ம் அரசியல் செய்வதுதான் நல்லாட்சியா?

வெறும் சுருங்கிய சிவில் வெளியை வைத்து பேரினவாத அரசை நால்லாட்சி அரசு என்று விழிப்பது, அறியாமை மட்டுமல்ல ஆபத்தும் நிறைந்த ஒன்றாகும்.

நல்லாட்சி கோசத்துக்கு கீழ் நல்லிணக்கம் என்னும் சொல்லாடல் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது, இனப்படுகொலையை மேற்கொண்ட அரசுகள் அதனை மறுதலிப்பதற்காக கையில் எடுக்கும் மிக முக்கியமான ஆயுதம் நல்லிணக்கம் , அதனூடாக பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைப்பதை தடுப்பதோடு , குற்றத்தில் இருந்தும் தப்பித்து கொள்ள முடியும்.

இந்த நல்லாட்சியே சர்வதேச விசாரணையை உள்ளூர் விசாரணை வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது , உள்ளூர் விசாரணை நடப்பதும் ஒன்றுதான் நடக்காமல் இருப்பது ஒன்றுதான்.

நல்லாட்சி என்னும் சொல்லாட்சியின் விளைவுதான் அது.

இன்றைய ஆட்சி திடகாத்திரமான பலமான ஆட்சி என்று சொல்ல முடியாது , அவர்களால் சிங்கள பேரினவாத சிந்தனையில் இருந்து விடுபட்டு வந்து செயற்படுவதற்கான அரசியல் வலு அவர்களிடம் இல்லை.

தமிழர்களை பொருத்தவரையில் நல்லாட்சி என்பது ஒரு உரு பெருப்பிக்கப்பட்ட வெறும் மாயை . தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து இவ்வாட்சியை நல்லாட்சி என்று விழிப்பதே மிகப்பெரும் அரசியல் பிழை.

இன்றைய ஆட்சியில் ஓரிரு மாற்றங்கள் உணரப்படுகிறது ஆனால் அது நல்லாட்சி என்று விழிக்கும் அளவுக்கு போதுமானதொன்றல்ல.

உரிமைக்கான அரசியலை செய்யும் ஒரு இனமாக சாதரணமாக தோன்றும் அரசியல் சொல்லினுள் இருக்கும் நுக்கமான பலம்வாய்ந்த அரசியலை புரிந்து செயலாற்ற வேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.

“போற படகுக்கு பேர் நல்லாட்சியா”

– இளையவன்னியன் –

Share This Post

Post Comment