முதல்வர் விக்னேஸ்வரனின் கோரிக்கை நிராகரிப்பு: தமிழர் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது இலங்கை ராணுவம் அறிவிப்பு

ekuruvi-aiya8-X3

army_2433723bஇலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது என ராணுவம் அறிவித்து உள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போருக்குப்பின், அங்கு தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளது.

தமிழர்கள் வாழும் இந்த பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என தமிழர்களும், தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அங்கிருந்து ராணுவத்தை விலக்குமாறு பல்வேறு உலக நாடுகளும் இலங்கை அரசை நிர்ப்பந்தித்து வருகின்றன.

ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது. தமிழர்கள் வாழும் பகுதியில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்கவே அங்கு ராணுவம் தொடர்ந்து நிறுத்தப்பட்டு உள்ளது என அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண முதல்-மந்திரி சி.வி.விக்னேஸ்வரன், ‘இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து நிறுத்தப்பட்டு உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கை பராமரித்து மக்களின் பாதுகாப்பு பணிகளை போலீசாரே மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ராணுவம் அவசியமில்லை’ என்று கூறினார்.ஆனால் முதல்-மந்திரி விக்னேஸ்வரனின் இந்த கோரிக்கையை ராணுவம் நிராகரித்து விட்டது. தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியாது என கூறியுள்ளது.

இது தொடர்பாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி மகேஸ் சேனநாயகே யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘உங்களை (தமிழர்கள்) கவனித்துக்கொள்ளவே நாங்கள் இங்கு இருக்கிறோம். உங்கள் தேவைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவு செய்வோம்’ என்றார்.

ஒரு ராணுவ தளபதியாக, தமிழர்களிடம் இருந்து மீண்டும் ஒரு போர் உருவாமல் தடுப்பதே தனது பணி என்று கூறிய அவர், இலங்கையின் வடக்கு பகுதியில் இனி ஒருபோதும் பிரிவினைவாத போர் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment