முருகனை சந்திக்க உறவினர் கோரிக்கை!

Facebook Cover V02

muruganராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகனை சந்திக்க உறவினர் அளித்த மனுவை சிறை அதிகாரி 3 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவ சமாதி அடைவதற்காக கடந்த 18-ந்திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதுகுறித்து, அவரது உறவினர் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். அதில், முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் அவரை சந்திக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, முருகனின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யும்படி 29 ஆம் திகதி உத்தரவிட்டது. இதன்படி, முருகனின் உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கையை, வேலூர் சிறை அதிகாரிகள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கும் முருகனை, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை குற்றவியல் வக்கீல் ராஜரத்தினம் ஆஜராகி, ‘முருகன் தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை 30 ஆம் திகதி முடித்துக் கொண்டார்’ என்றார். அப்போது நீதிபதிகள், உண்ணாவிரத்தை கைவிட்டதால், இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கிறோம். அதேநேரம், முருகனை சந்திக்க மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வக்கீல், ‘அவர் மனு கொடுத்தால், சிறை விதிகளின் படி பரிசீலிக்கப்படும்’ என்றார்.

இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும், மனுதாரர் தேன்மொழி, முருகனை சந்திக்க அனுமதி கேட்டு வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் புதிய மனுவை கொடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவை 3 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை கண்காணிப்பாளர் பிறப்பிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Share This Post

Post Comment