முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள்

கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை அனைத்து அமைப்புக்களையும், மக்களையும் ஒருங்கமைத்து நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது அனைத்து தமிழ் மக்களுடனும் தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது.

 

மே 13, 2017 சனிக்கிழமை: காலை 10 மணியிலிருந்து 2 மணிவரை: குருதிக்கொடை நிகழ்வு: விக்டோரியா பார்க் மற்றும் எல்லெஸ்மெயர் சந்திப்பிற்கு அருகில் உள்ள பார்க்வெய் மோலில் (Parkway Mall – Victoria Park Ave & Ellesmere Rd) நடைபெறவுள்ளது. அன்று எம் மக்கள் குருதிக் கடலில் குளித்த கொடுமையின் நினைவாக இந்த குருதிக் கொடை நிகழ்வு இடம்பெறுகின்றது.

 

மே 14, 2017 ஞாயிற்றுக்கிழமை: காலை 10 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை: மரம் நடல்: எவெர்கிறீன் ப்ரிக்வேர்க் (Evergreen Brick Works, Suite #300 – 550 Bayview Ave Toronto, ON M4W 3X8) என்னும் இடத்தில் நாம் இழந்த எமது சொந்தங்களை நினைவு கூர்ந்து மரம் நடுதல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

 

மே 16, 2017 செவ்வாய்க்கிழமை: மாலை 5:30 மணி: தலைநகர் ஒட்டாவாவில் (Parliament Hill – Ottawa) தமிழின அழிப்பின் நினைவு நாள் நிகழ்வு: பாராளுமன்ற வளாக முன்றலில் நடை பெற உள்ளது. இனவழிப்பின் அடையாளங்களையும் சாட்சிகளையும் உலகுக்கு எடுத்து செல்லும் வகையான காட்சிப்படங்கள் மாற்றின சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் வகையாக இன்னிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றது.

 

மே 18, 2017 வியாழக்கிழமை: மாலை 6 மணி: தமிழின அழிப்பு நினைவு நாள்: Toronto: முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை நினைவு கூரும் கடைசி நிகழ்வாக தமிழின அழிப்பு நினைவு நாள் ஸ்கார்புரொ டவுன் சென்டறிற்கு அருகில் உள்ள ஆல்பர்ட் கம்பெல் சதுக்கத்தில் (Albert Campbell Square) ஒன்றிணைந்த கனடிய தமிழ் மக்களின் பெரு நிகழ்வாக நடைபெறவுள்ளது.

 

கனடா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் எம் இனத்தின் பேரிழப்பின் வலியை சுமந்து வாழும் தமிழினமாக ஒற்றுமையாக வரலாற்றில் தடம் பதிக்கும் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று எழுகை கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்.

 

2009 மே மாதம் தாயகத்தில் எம் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கையில் எம் மக்களைக் காக்க உலக அரங்கெங்கும் வீதி வீதியாக தமிழர்கள் உலக தேசங்களிடம் எம் மக்களை காக்க வேண்டிப் பல போராட்டங்களை செய்தார்கள். எப்படியாவது எம் மக்களை காக்க யாரேனும் உதவ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் அன்று கனடிய மண்ணில் பல்வேறு தெரு முனைகளில் நின்று எம் கனடியத் தமிழர்களும் போராடினார்கள்.

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான இனப்படுகொலை. கேட்பார் யாரும் இன்றி ஈழத் தமிழினத்தை எதேச்சை அதிகாரத்தோடு இலங்கை அரசு கொன்றொழித்த பேரவலமானது உலகத் தமிழினத்தால் என்றுமே மறக்க முடியாத ஆறாத வடு.

 

காலம் காலமாக தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட சிங்கள பேரினவாத அரசுகளின் இன அழிப்பு வரலாற்றின் உச்சக்கட்டமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சுமார் எழுபதினாயிரத்திற்கும் அதிகமான எம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காணாமல் போக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் படுகாயமுற்றார்கள்.

 

கொத்துக் குண்டு, இரசாயனக் குண்டு மற்றும் பல்குழல் பீரங்கி என தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழினத்தை முற்றாக வேரறுக்கும் வெறியோடு இலங்கை அரசு நடாத்திய தமிழினப்படுகொலையின் வலி சுமந்த நினைவுகளை உலகத் தமிழினம் நெஞ்சினில் சுமந்து வருகின்றது.

 

மறுக்கப்பட்ட எம் மக்களின் நீதிக்காக இன்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அரசியல் நகர்வுகளூடாக போராடி வருகின்றார்கள். சர்வதேசமயப்படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்தும் பயணிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.ncct

Share This Post

Post Comment