முள்ளிவாய்கால் நில ஆக்கிரமிப்பு; மக்கள் எதிர்ப்பிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

TNPF-LOGOமுல்லைத்தீவு முள்ளிவாய்கால் கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை வன்மையாக கண்டிப்பதுடன் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிணை அளவீடு செய்து நிரந்தரமாக கடற்படைக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

காணி அபகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமன்றி வடக்கில் உள்ள அனைத்து பொது அமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நில ஆக்கிரமிப்பு பிரச்சினையானது வெறுமனே அந்த காணி உரிமையாளர்களுக்கான பிரச்சினை அல்லவெனவும், மாறாக ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தினதும் இருப்பை கேள்விக்குறியாக்கும் விடயம் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment