ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெறும்படி மியான்மருக்கு அழுத்தம் கொடுக்கிறது இந்தியா

Facebook Cover V02

India-pushing-Myanmar-to-take-back-Rohingya-refugeesமியான்மர் நாட்டில் ரக்கினே மாகாணத்தில் கடந்த மாதம் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், போலீசாரை தாக்கிய விவகாரம் பூதாகரமாகி விட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதுவரையில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி வங்காளதேசம் வந்து உள்ளனர். வங்காளதேசம் எல்லை வந்து உள்ள ரோஹிங்யா அகதிகள் அடிப்படை தேவைகள் இன்றியும், மருத்துவ வசதியின்றியும் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளனர். வங்காளதேச அரசும் இவ்வளவு பெரிய அளவில் அகதிகளை ஏற்று பெரும் நெருக்கடியில் உள்ளது.

பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடாக இந்தியாவை பார்க்கும் வங்காளதேசம், மியான்மரில் இருந்து அகதிகள் வெளியேற்றத்தை தடுக்கவும், ஏற்கனவே வெளியேறிய மக்களை ரக்கினேவில் மீண்டும் குடியமர்த்த மியான்மரை உறுதியளிக்க செய்யவும் இந்தியா மிகப்பெரிய பணியை ஆற்றவேண்டும் என பார்க்கிறது.

இந்நிலையில் ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெற வேண்டும் என மியான்மருக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நேற்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிடம் பேசி உள்ளார். ரோஹிங்யா விவகாரத்தில் இந்தியா வங்காளதேசத்திற்கு முழு ஆதரவையும் தெரிவிக்கும் என சுஷ்மா சுவராஜ் உறுதியளித்து உள்ளார் என பிரதமர் ஹசினாவின் ஊடகத்துறை துணை செயலாளர் நஸ்ருல் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளார். ரோஹிங்யா விவகாரத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் நிலைபாடு ஒன்றே என சுவராஜ், ஹசினாவிடம் கூறியதாக இஸ்லாம் கூறி உள்ளார்.

“ரோஹிங்யா அகதிகளை திரும்பபெற இரு தரப்பு மற்றும் பலதரப்பட்ட நிலையில் மியான்மருக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ரோஹிங்யா மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை மியான்மர் நிறுத்த வேண்டுமென இந்தியா கூறியிருப்பதாகவும் சுஷ்மா தெரிவித்தார்” என இஸ்லாம் கூறி உள்ளார்.

மியான்மர் ரோஹிங்யா அகதிகளுக்கு நாங்கள் தற்காலிகமாக இருக்க இடம் கொடுத்து உள்ளோம், அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு தங்கினால், இது வங்காளதேசத்திற்கு பெரும் பிரச்சனையாகும் என ஹசினா கூறி உள்ளார். இம்மாத இறுதியில் நடைபெறும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் ரோஹிங்யா விவகாரங்களை பேச உள்ளதாகவும் ஹசினா கூறி உள்ளார்.

Share This Post

Post Comment