ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா

Facebook Cover V02

Mehbooba-Mufti-resigns87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 2014-ம் ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் – தேசியமாநாட்டு காங்கிரஸ் கூட்டணி பிரிந்தது, தனித்தனியாக போட்டியிட்டது. தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை அமைந்தது. 28 தொகுதிகளை பிடித்து மக்கள் ஜனநாயக கட்சி முதலிடம் பிடித்தது. ஆட்சியமைக்க போதிய பலமான 44 உறுப்பினர்கள் எந்த கட்சியிடமும் கிடையாது. மோடி அலை மற்றும் ஆளும்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு காரணமாக ஜம்மு பிராந்தியத்தில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது.

பா.ஜனதா எதிர்பார்க்காத வகையில் 25 தொகுதிகளில் வெற்றிபெற்று இரண்டாவது இடம் பிடித்தது. இதனையடுத்து கொள்கையின் அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும் 2015-ல்பா.ஜனதா – மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அமைந்தது. முப்தி முகமது செயத் முதல்-மந்திரியாக பதவியேற்றார். முதல் முறையாக ஆட்சியில் பா.ஜனதாவும் பங்கு பெற்றது, அமைச்சரவையிலும் இடம்பெற்றது. அப்போதே கூட்டணிக்கான அடிப்படை என்ன? என்ற கேள்வி எதிர்க்கட்சிகள் வரிசையில் எழுப்பட்டது. முப்தி முகமது செயத் மரணம் அடைந்ததும் அவருடைய மகளான மெகபூபா முப்தி முதல் மந்திரியாக பதவியேற்றார். கூட்டணி ஆட்சி சென்ற நிலையில் 2016-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதும் மோசமான நிலை வெடித்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதம், உள்ளூர் பயங்கரவாதம், இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் சேர்தல், பிரிவினைவாதிகள் தூண்டிவிடுதல், பாதுகாப்பு படைகளுக்கு எதிரான கல் வீச்சு சம்பவம் மற்றும் பிற வன்முறை சம்பவங்களால் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்தது.

பாதுகாப்பு படைகள் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடர்ந்தது. இந்நிலையில் ரமலான் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தையொட்டி பாதுகாப்பு படைகள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இருப்பினும் பொதுமக்களை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பயங்கரவாதிகள் தரப்பில் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

ரமலான் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சண்டை நிறுத்தம் தொடருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் முடிந்தது, பாதுகாப்பு படைகள் நடவடிக்கைகளை தொடங்கும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படைகள் ஆப்ரேஷன்களை மேற்கொள்ளக்கூடாது என மே 17-ம் தேதி அரசு முடிவு எடுத்தது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை விரும்பும் மக்களின் நலனுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டது, அவர்களுக்கு ரமலான் பண்டிகையை கொண்டாட அமைதியான சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுப்பதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் வன்முறையற்ற சூழலை உருவாக்குவதற்கான முயற்சியை அரசு தொடரும் என மத்திய அரசு தெரிவித்தது.

பயங்கரவாதிகள் விவகாரத்தில் பா.ஜனதா அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் சண்டை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் தொடங்குகிறது என அறிவித்தது. இவ்விவகாரத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தையென்பதில் மத்திய அரசு மாற்று கருத்தை கொண்டிருந்தது. ஆனால் அவர்களை மத்திய அரசு நாடவேண்டும் என்ற கோரிக்கையை மெகபூபா முப்தி முன்வைத்தார். ஆனால் பிரிவினைவாதிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை இழந்துவிட்டார்கள், அவர்களை ஒருதரப்பாக ஏற்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து கூட்டணி முறிவு தொடர்பான தகவல் வெளியாகியது.

ஜம்மு காஷ்மீரில் கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக பா.ஜனதா தலைவர் ராம் மாதவ் விளக்கமளித்து பேசினார். அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் கூட்டணியை தொடர ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளோம், நாங்கள் எங்களுடைய ஆதரவை திரும்ப பெற்றுள்ளோம்.

பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் பயங்கரவாதமாதல் ஆகியவை உயர்ந்துள்ளது, மக்களின் அடிப்படை உரிமையானது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்டது இதற்கு உதாரணம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் நன்மையை மனதில் கொண்டு, மாநிலத்தில் இப்போது எழுந்து உள்ள நிலையை கட்டுக்குள்கொண்டுவர ஆட்சியை ஆளுநர் கையில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம்.

பள்ளத்தாக்கு பகுதியில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் மத்திய அரசு பொறுப்பு கிடையாது. பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

மக்கள் ஜனநாயக கட்சி அதனுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜம்மு மற்றும் லாடக் பகுதியில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள மக்கள் ஜனநாயக கட்சியுடன் எங்களுடைய தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொள்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய நடவடிக்கை தொடரும். நாங்கள் மக்களுடைய தீர்ப்புக்கு மதிப்பளிகிக்றோம். நாங்கள் அப்போது ஆட்சியை அமைக்கவில்லை என்றாலும் கவர்னர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கும். மக்களுடைய தீர்ப்புக்காகதான் நாங்கள் கூட்டணியை வைத்தோம் என கூறிஉள்ளார்.

87 உறுப்பினர்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மெகபூபா முப்தி ஆட்சி தப்புவதற்கு 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவையாகும்.

தொங்கு சட்டசபை அமைந்ததால் பா.ஜனதா – மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி 2015-ல் அமைந்தது. மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதாவிற்கு 25 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் உள்ளனர். பிற கட்சிகளுக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தாலும் ஆட்சியமைக்க முடியாது. தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லாத நிலையே உள்ளது. பிற 7 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றாலும் ஆட்சிக்கு வரும் நாட்களில் இடையூறு ஏற்படும்.

மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராபி அகமது மிர் பேசுகையில், “பாரதீய ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியை கொண்டு செல்லவே விரும்பினோம். ஆனால் விரிசல் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்கள் முடிவு இப்படியிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதுமே மெகபூபா முப்தி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். இதனையடுத்து மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி வருகிறது. மாலை 5 மணிக்கு மக்கள் ஜனநாயக கட்சி விரிவான விளக்கம் அளிக்கிறது.

Share This Post

Post Comment