தேர்தல் உள்ளே வெளியே …..

ஓன்ராறியோ மாகாணத்தில் உள்ள நகரசபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி நடைபெறவுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை  இந்த நகர சபைத் தேர்தலானது ஒக்ரோபர் மாதத்தின் நான்காவது திங்கட்கிழமைகளில் நடத்தப்படுகின்றது.
கனேடிய அரசியலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கான நுழைவுச் சீட்டாக  இந்த நகர சபைத் தேர்தல் கருதப்படுகின்றது.
வெளிப்பார்வை பெருமளவான அதிகாரங்களும் வரப்பிரசாதங்களையும் கொண்டிராத நகர சபை உறுப்பினர் மற்றும் கல்விச் சபை உறுப்பினர்களுக்கான தேர்தலாக  இது கருதப்பட்டாலும் வெளித் தெரியாத பல அனுகூலங்களை  இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

ரொரன்ரோ எதிர் ஒன்ராறியோ

இந்த வருடம் நடைபெற்ற ஒன்ராறியோ மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் டக் போர்ட் ஆட்சிபீடம் ஏறினார்.
எதிர்கால முதல்வராக வர்ணிக்கப்பட்ட பற்றிக் பிரவுண் ஒரு  இரவில் வீசிய கடும் அரசியல் புயலில் அள்ளி வீசப்பட்டு  எவரும் எதிர்பாராத திருப்பங்களுடன் கொன்சவேற்றிவ் கட்சியின் தலைவராகவும் அதனை தொடர்ந்து ஒன்ராறியோவின் முதல்வராகவும் டக் போர்ட் தெரிவானார்.
2014ம் ஆண்டு நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் 390,000 வாக்குகளை பெற்று ஜோன் ரொரி நகர முதல்வராக தெரிவானார். அவருக்கு அடுத்த  இடத்தில் 330,000 வாக்குகளுடன் டக் போர்ட்  இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
காலம் மாற காட்சிகளும் மாறின 2018ம் ஆண்டு டக் போர்ட் மாகாண முதல்வர் ஜோன் ரொரி நகர முதல்வர்.  இருவருக்கும்  இடையிலான பனிப்போர் உச்சம் தொட்டு நிற்கின்றன.
நகரசபைத் தேர்தல் திகதி அறிவிக்கபட்ட நிலையில் ரொரன்ரோ நகர சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 47 இல் இருந்து 25 ஆக குறைக்கும் தீர்மானத்தை டக் போர்ட் கொண்டு வந்தார்.
அவருடைய  இந்த நடவடிக்கைக்கு  எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்பினையும் மீறி தனக்குள்ள சிறப்பு வரப்பிரசாத உரிமையினை பயன்படுத்தி தனது தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஜோன் ரொரி அவர்களுக்கான எச்சரிக்கை மணியினை அடித்துள்ளார் டக் போர்ட்.
நகர சபைத் தேர்தலின் பின்னர் மாகாண அரசுக்கும் நகர சபைக்குமான உறவு நிலை எவ்வாறு  இருக்கும்  இதனால் ரொரன்ரோ வாசிகள் எதிர் கொள்ளப் போகும் சவால்கள் எவ்வாறானவை என்பதை எல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மறுபுறம் மாகாண முதல்வர் வாய்பினை பறிகொடுத்த பற்றிக் பிரவுண் பிரம்டன் நகர முதல்வருக்கான தேர்தல் களத்தில் குதித்துள்ளார். பற்றிக் பிரவுண் என்ற பந்தயக் குதிரையை நம்பி பணம் போட்ட தமிழ் ‘முதலாளிமார்’ எவ்வாறாயினும்  தமது முதலீட்டை  இலாபமாக்குவதற்கான எத்தனிப்புகளில் பந்தயக் குதிரையை ‘பலிக்கடவாக்கும்’  முயற்சியில் குதித்துள்ளமை தான் வேதனையளிக்கின்றது.
பற்றிக் பிரவுண் என்ற ஒரு ஆளுமையின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் தமிழ் சமூகத்தின் பங்கு குறித்து மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பகிர்ந்து கொள்கின்றோம்.

மார்க்கம் 7ம் வட்டாரம்

2006ம் ஆண்டு நடைபெற்ற  இது போன்ற ஒரு தேர்தலில் மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகன் கணபதி கனடாவில் தேர்தல் வெற்றி மூலம் தெரிவான முதலாவது தமிழர் பிரதிநிதி என்ற பெருமையினை தனதாக்கினார்.
அதனை தொடர்ந்து 2010 மற்றும் 2014ம் ஆண்டுகளிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு நகர சபைக்கு தெரிவான அவர் தனது தொகுதியில் ‘செல்வாக்கினை’ வளர்த்துக் கொண்டார்.
லிபரல் கட்சியின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த அவர் கடந்த வருடம் வீசிய கொன்சவேற்றி அலையினால் அள்ளுண்டு போய் அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர் வேட்பாளராக தெரிவானார்.
அதன் பின்னர்  இந்த ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் 18,000 ற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மாகாண சபைக்கும் தெரிவானார்.
தமிழர் ஒருவரால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட வட்டாரத்தில் மீண்டும் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற   ‘உயரிய நோக்கில்’  இந்த  தொகுதியில் 5 தமிழ் வேட்பாளர்கள்  இப்போது போட்டியிடுகின்றனர்.
அவர்களில்  ஒருவராக முன்னாள் நகர சபை உறுப்பினரும்  இன்நாள் மாகாண சபை உறுப்பினருமான லோகன் கணபதி அவர்களின் புதல்வி கீத்திகா லோகன் அவர்களும், கிள்ளி செல்லையா, மலர் வரதராஜா, சோதி செல்லா, மைக் ஸ்ரீநாதன்  இலகுபிள்ளை ஆகிய தமிழர்கள் போட்டிக் களத்தில்  இறங்கியுள்ளனர்.
2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 5,673 வாக்குகளை பெற்று லோகன் கணபதி வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு அடுத்த நிலையில் 3,539 வாக்குறை பெற்ற காலிட் உஸ்மான்  இம்முறையும் போட்டிக் களத்தில் உள்ளார்.
கடந்த முறை 1078 வாக்குகளை பெற்ற சோதி செல்லா அவர்களும் மீண்டும் போடடியிடுகின்றார்.
5,000 வாக்குகளை பெறுவதன்  மூலமாக  இந்த தேர்தலில்  இலகுவான வெற்றியை பெற முடியும். 6,000 ற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள்  இந்த தொகுதியில்  இருப்பதாக தெரிய வருகின்றது.
தமிழ் வாக்குகள் சரியான வேட்பாளருக்கு வழங்கப்படுமானால் மீண்டும் ஒரு தமிழர்  இந்த வட்டாரத்தின் நகர சபை உறுப்பினராக தெரிவாக முடியும்.
சரியான தெரிவிற்கு மாறாக ஊரில் அவர் எங்கட  இடம், நாளைக்கு மருந்தெடுக்க அங்க தானே போக வேணும், என்ற காரணங்களை கூறியவாறு வாக்குகளை சிதறவிடுவதன் மூலம் தமிழ் பிரதிநிதித்துவம்  இழக்கப்படும் வாய்ப்புகளே அதிகம்.
இந்த தொகுதியில்  இதுவரை நகர சபை உறுப்பினராக  இருந்தவர் என்ற வகையில் தனக்கு பின்னரான சரியான ஒரு நகர சபை உறுப்பினரை உருவாக்கியிருக்க வேண்டிய கடமையினை திரு. லோகன் கணபதி அவர்கள் செய்யவில்லை என்பது அந்த பகுதி மக்களின் ஆதங்கமாக அமைந்துள்ளது.
மாகாண சபைக்கு தெரிவானவுடன் தனது வட்டார மக்களின் நலன்களை பேணுவதற்கு ஏற்ற அடுத்த நகர சபை உறுப்பினரை அடையாளம் காட்ட வேண்டியது 3 பருவங்களாக நகர சபை உறுப்பினராக  இருந்த ஒருவரின் தார்மீகக் கடமை. ஆனால் அவர் அதனை சரியாக கையாளவில்லை என்பதே எமது ஆதங்கம்.
இதேவேளை தனது மகள் கீத்திகா லோகன் தான் அந்த பதவிக்கு சரியான தெரிவு என்று அவர் நம்பியிருந்தால் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அவரை போட்டிக் களத்தில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அவர் ஏன் சரியான தெரிவு என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தியிருக்க வேண்டும்  இதன் மூலமாக ‘குடும்ப அரசியல்’ குறித்த குற்றச் சாட்டுகளில்  இருந்து அவர் விடுபட்டிருக்க முடியும்.
மாறாக 6 தமிழர்கள் போட்டிக் களத்தில் குதித்திருந்த நிலையில் தனது மகளை  இறுதியாக களமிறக்கியது அவர் மீது அதிகமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விமர்சனங்கள் குறித்து அவரின் பிரதிபலிப்புகளை அறிந்து கொள்வதற்கு நாம் மேற்கொண்ட முடியற்சிகள் வெற்றியளிக்கவில்லை. நேர்காணல் ஒன்றிற்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர் உறுதியளித்திருந்த போதிலும்  இதுவரை அவர்களிடம்  இருந்து எந்த விதமான அறிவுறுத்தல்களும் கிடைக்கவில்லை. இதனால்  இந்த விடயம் குறித்து அவரின் நிலைப்பாட்டை  இணைத்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் நாம் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

ஸ்காபுரோ  ரூட்ஜ் பார்க்

2006ம் ஆண்டு மார்க்கம் 7ம் 8ம் வட்டாரங்களில்  இருந்து கல்விச் சபை உறுப்பினராக தெரிவானவர்  நீதன் ஷான் . அத்துடன் புதிய ஜனநாயக் கட்சியில்  இணைந்து அந்த கட்சியின் மாகாணத் தவிசாளர் என்ற உயர் பதவி வரை சென்றவர். தேசிய மற்றும் மாகாண ரீதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக சில தேர்தல்களை சந்தித்திருந்தார். 2016ம் ஆண்டு நடைபெற்ற நகரசைபத் தேர்தலில் ஸ்காபுரோ ரூட்ஜ் ரிவர் தொகுதியின் கல்விச் சபை உறுப்பினராகவும் பின்னர் அதே தொகுதியில் நடைபெற்ற நகர சபை உறுப்பினருக்கான  இடைத் தேர்தலில் வெற்றி பெற்று நகர சபை உறுப்பினராகவும் தெரிவாகினார்.  இம்முறை நடைபெறும் தேர்தலிலும் அதே தொகுதியில் நகர சபை உறுப்பினருக்கான போட்டியில் ஈடுபட்டுள்ள நீதன் ஷான்  வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.
நகர சபை உறுப்பினராக பதவியேற்ற சில காலங்களில் சிறப்பான சேவையினை தனது வட்டார மக்களுக்கு வழங்கியதன் மூலம் அந்த மக்களின் நன்மதிப்பினையும் ஆதரவினையும் தனதாக்கியுள்ளார்.

அதே சமயம் ரொரன்ரோ நகர சபையும் தாயகத்தில் உள்ள வடமாகாண சபையும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன் படிக்கையின் பின்னால் நீதன் ஷானின்  பங்கு முக்கிய ,இடத்தை பெற்றிருந்தமை நினைவு கூரப்பட வேண்டியது.

 

கல்விச் சபையா நகர சபையா தடுமாறும் யுனீற்றா நாதன்


2010ம் ஆண்டு நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று யோர்க் பிராந்திய கல்விச் சபை உறுப்பினராக தெரிவானவர் யுனிற்றா நாதன்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக  கல்விச் சபை உறுப்பினராக தெரிவாகி வரும் யுனிற்றா ஏனைய தேர்தல்களையும் எதிர் கொண்டு வருகின்றார்.
லிபரல் கட்சியின் சார்பில் பாராளுமன்ற  இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு  இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டமை குறித்த கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தமை சுட்டிக்காட்டதக்கது.
எனினும்  இந்த ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஒன்ராறியோ மாகாண லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட  இவர் 9000 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.
நகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான நகர சபை உறுப்பினருக்கான போட்டியில் ஈடுபடுவதாக அறிவித்து வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் வேட்பு மனுக்களை கையளிப்பதற்கான  இறுதி நாளில் நகரசைப உறுப்பினருக்கான தேர்தலில்  இருந்து தான் விலகுவதாகவும் கல்விச் சபை உறுப்பினருக்கான தேர்தலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

கவிதா செந்திலை போட்டியில்  இருந்து விலகுமாறு வலியுறுத்தினாரா லோகன் கணபதி ?

 
யுனிற்ற நாதன் கல்விச் சபை உறுப்பினராக போட்டியிடமாட்டார் என்ற நம்பிக்கையில் அந்த வட்டாரத்தில் கல்விச் சபை உறுப்பினர் நிலைக்கான போட்டியில் தன்னை ஈடுபடுத்திய கவிதா செந்தில் யுனிற்றா நாதனின்  இந்த திருப்பம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என ஆதங்கப்படுகின்றார்.
இதேவேளை கவிதா செந்திலை போட்டியில்  இருந்து விலகுமாறு முன்னாள் நகர சபை உறுப்பினரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான லோகன் கணபதி வலியுறுத்தியதாகவும் கவிதா செந்தில் ஈகுருவிக்கு வழங்கிய சிறப்பு  நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமானது அல்ல ஒருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம் மற்றவரை  இலகுவில் வெற்றி பெற வைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் திரு.லோகன் கணபதி கூறியுள்ளார்.
ஏற்கனவே கல்விச் சபை உறுப்பினராக  இருக்கும் யுனிற்றா நாதன் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றும் எனவே கவிதா செந்தில் தனது வேட்பாளர் நியமனத்தை மீளப் பெற வேண்டும் என்றும் லோகன் கணபதி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் சமூகத்தின் மீது  இவ்வளவு நம்பிக்கை கொண்டவராக  இருந்தால் ஏற்கனவே 5 தமிழ் வேட்பாளர்கள் போட்டிக் களத்தில் உள்ள 7ம் வட்டாரத்தில் தனது மகளை எதற்காக திரு.லோகன் கணபதி போட்டியில் ஈடுபடுத்தினார் என்றும் கவிதா செந்தில் சுட்டிக் காட்டுகின்றார்.
மாகாண சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் நகரசபைக்கான தேர்தல் போட்டிக் களத்தில் உள்ள ஒருவரை போட்டியில்  இருந்து விலகுமாறு கோருவது எவ்வகையில் நியாயமானது என்றும் அவர்; கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது நகர சபை உறுப்பினருக்கான போட்டியில்  இருந்த யுனிற்றா நாதன் விலகியதற்கும், லோகன் கணபதி அவர்களின் மகள் போட்டிக் களத்தில்  இறக்கப்பட்டமைக்குமான தொடர்புகள் குறித்த கேள்விகளை  இந்த உரையாடல் ஏற்படுத்தி நிற்கின்றது.

இதற்கான பதிலை திரு. லோகன் கணபதியிடம்  இருந்து பெறுவதற்கு நாம் மேற்கொண்ட முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

கல்விச் சபையில் : கணவன் மனைவி –  ?

2014ம் ஆண்டு ரொரன்ரோ கல்விச் சபைக்கு தெரிவானவர் பார்த்தி கந்தவேள். ஸ்காபுரொ தென்மேற்கு தொகுதியில்  இம்முறையும்  இவர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
தீடீரென வேறுஒரு தொகுதியான ஸ்காபுரோ ரூட்ஜ் பார்க் தொகுதியில் பார்த்தி கந்தவேலின்  மனைவியும் யோர்க் பல்கலைக் கழகத்தின் சிறுவர் மற்றும்  இளையோர் கல்வி தொடர்பிலான பேராசிரியராக பணியாற்றி வரும் அனு சீறீஸ்கந்தராக போட்டியிடுவதாக  அறிவிப்பு வெளியாகியது.
ஒரே குடும்பத்தில்  இருந்து  இரண்டு கல்விச் சபை உறுப்பினர்கள் ஒரே கல்விச் சபைக்கு , வேறு வேறு தொகுதியில் தெரிவு செய்யப்படுவது ஏற்புடையதா?

எனற  வாதங்கள் ஒரு புறம் எழுகின்றன

மறுபுறம் இளம் மாணவர்களின் கல்வி தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்ட ஒருவர் கல்விச் சபைக்கு தெரிவு செய்யப்படுவது ஆரோக்கியமானது தானே பாரத்தி கந்தவேளின் மனைவி என்பதற்காக அனு ஸ்கந்தராஜா என்ற  ஒருவர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவதை தவிர்பது சரியானதா என்று மறுவாதமும் முன்வைக்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்த தொகுதியில் வாழும் அகிலா உருத்திரசிங்கம் என்ற தமிழ் பெண் போட்டிக் களத்தில் உள்ள நிலையில் அனு ஸ்கந்தராஜா மற்றும் தர்சிகன் விஜயபாலன் ஆகிய இருவரும்  இறுதி நேரத்தில் தம்மையும்  இந்த போட்டியில்  இணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த தொகுதியில் தமிழர்களுக்கு நன்று பரீட்சயமான நீதன் ஷான்  நகர சபை உறுப்பினருக்கான தேர்தலில் ஈடுபடுகின்றார். அவருடைய தேர்தல் பிரசாரக் குழு கடுமையாக உழைத்து வருகின்றது. நீதன் ஷானுக்கு  வாக்களிக்கச் செல்பவர்கள் கல்விச் சபைக்கும் தமிழர் ஒருவரை தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலான நகர்வுகளாகவே இதனை நோக்க முடிகின்றது.

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

 


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *