ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் – தினகரன் பகிரங்கம்

Facebook Cover V02

dinakaranமதுரை மேலூரில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தல் அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் பேசியதாவது:

பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல என்பதை புரியாத மூடர்கள், எங்களை எதிர்த்து வருகின்றனர். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என அவர்கள் நினைக்கின்றனர். 30 பேர் சேர்ந்து கொண்டு
தலைமை செயலகத்தில் உட்கார்ந்து எங்களை வீழ்த்திவிட முடியாது.

ஜெயலலிதா அமல்படுத்திய திட்டங்களை மற்ற மாநிலங்களும் அமல்படுத்தி வருகின்றன. ஜெயலலிதா ராணுவ கட்டுப்பாட்டோடு நடத்திய இயக்கத்தை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. இரட்டை இலையை மீட்டு
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது.

ஜெயலலிதாவுடன் 1987ல் இருந்து கட்சியில் இருந்து வருகிறேன். கட்சியில் பெரிய பதவிகளில் உள்ள பலரை நான் அறிமுகப்படுத்தி உள்ளேன். 2000ல் எங்களை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவர அனுப்பினார் ஜெயலலிதா.

அப்போது எங்களுடன் வந்தவர்களில் பலர் இன்று எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
ஆட்சியில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் நடந்து கொள்கின்றனர். ஆட்சியினர் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கூட்டம் இருந்ததா? ஆட்சியில் உள்ளவர்களின் தலைக்கனத்தை அகற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவிருந்த 3 எம்.எல்.ஏக்களை கடத்திச் சென்றுள்ளனர். எம்.ஜி.ஆருக்காக கொண்டாடப்படும் நூற்றாண்டு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை ஒளித்து வைத்துள்ளவர்கள் விரைவில் ஒழிந்து போவார்கள். யாருடைய நிர்ப்பந்தத்தால் எனது துணை பொது செயலாளர் பதவி செல்லாது என அறிவித்தனர்?

கொல்லைப்புறம் வழியாக கட்சியை அபகரிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது. தலைமை செயலகத்தில் கதவை சாத்திக் கொண்டு ஏமாற்று வேலையில் ஈடுபடுபவர்களை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை அமைச்சர்கள் சிந்திக்க வேண்டும், மக்கள் நலனை மனதில் கொண்டு திட்டம் தீட்டுங்கள். ஆட்சியில் இருப்பவர்கள் எஜமானர்களாக இல்லாமல் தொண்டர்களாக இருக்கவேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநில அரசுக்கு தேவையான நிதியை பெறவேண்டும்.

தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள், தர்ம யுத்தம் நடத்துவதாக கூறி வருகின்றனர். நிழல் யுத்தம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில், முதலில் விசாரிக்க வேண்டியது அவர்களைத்தான்.

எங்களுக்கு மடியில் கனமில்லை. எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டால் தான் உண்மை வெளிவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Share This Post

Post Comment