மராட்டிய உள்ளாட்சி தேர்தல் பா.ஜனதா வெற்றி – பிரதமர் மோடி நன்றி

ekuruvi-aiya8-X3

Modi-450x285மராட்டிய மாநிலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, புனே, நாசிக், நாக்பூர், உல்லாஸ்நகர், பிம்ரி- சிஞ்ச்வாட், சோலாப்பூர், அகோலா, அமராவதி ஆகிய 10 மாநகராட்சிகளுக்கும், 25 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும், 283 பஞ்சாயத்து சமிதிகளுக்கும் இரண்டு கட்டமாக முறையே கடந்த 16 மற்றும் 21-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் சிவசேனா, பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தனித்து நின்று களம் இறங்கின. மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை நாட்டின் பணக்கார மாநகராட்சியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன் முடிவில், பெரும்பாலான இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது.

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சி கடந்த 20 ஆண்டு காலமாக சிவசேனாவின் கோட்டையாக திகழ்ந்து வந்தது. இந்த தேர்தலில் அக்கட்சி 84 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த தேர்தலில் 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜனதா, இந்த தடவை 82 இடங்களை கைப்பற்றி திடீர் எழுச்சியை கண்டது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களிலும், மராட்டிய நவநிர்மாண் சேனா 7 இடங்களிலும் மட்டுமே வெற்றி கண்டன.

இதேபோல புனே, நாக்பூர், நாசிக், உல்லாஸ்நகர், அமராவதி, அகோலா, பிம்ரி-சிஞ்ச்வாட் ஆகிய மாநகராட்சிகளையும் பா.ஜனதா தனதாக்கி கொண்டது. மற்ற மாநகராட்சிகளிலும் முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

இதேபோல 25 மாவட்ட பஞ்சாயத்துகளில், 18 மாவட்ட பஞ்சாயத்துகளில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜனதா 9 மாவட்ட பஞ்சாயத்துகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வெற்றியை ருசிக்க முடிந்தது.

பிரதமர் மோடியின் உயர் மதிப்பு கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் மராட்டியத்தில் நடைபெற்ற இந்த தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்து இருப்பதாக பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் தங்களது கட்சிக்கு ஆதரவு அளித்த மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

மும்பை மாநகராட்சி தேர்தலில் 2 தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தாராவியில் உள்ள 187-வது வார்டில் சிவசேனா வேட்பாளராக மாரியம்மாள் போட்டியிட்டார். இவர் தாராவி தாலுகா சிவசேனா துணை தலைவர் பி.எஸ்.கே. முத்துராமலிங்கத்தின் மனைவி ஆவார். மாரியம்மாள் 6,846 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதேபோல சயான் கோலிவாடா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 176-வது வார்டில் தமிழ்வேட்பாளர்கள் ரவிராஜா (காங்கிரஸ்), கராத்தே முருகன் (பா.ஜனதா), எஸ்.ஏ.சுந்தர் (அ.தி.மு.க.) உள்பட மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ரவிராஜா 3 ஆயிரத்து 814 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். ரவிராஜா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.

Share This Post

Post Comment