போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பே வழங்கக்கூடாது!

ekuruvi-aiya8-X3

disappeared-people-in-jaffnaஎமது பிள்ளைகளின் அவலச் சாவுக்கு நீங்கள் இழப்பீடு கொடுக்கவேண்டுமானால், அந்த இழப்பீடு என்பது எமது பிள்ளைகளை படுகொலை செய்த இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குவதாகவே இருக்கவேண்டுமென போர்க்குற்றம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு முன் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பிள்ளைகள் காணாமல் போவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ, அவர்களுக்கு மன்னிப்பே வழங்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணி மனோகரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய செயலணியினரால்நல்லிணக்கப் பொறிமுறை அமைப்பது தொடர்பான மக்களுடைய கருத்துக்களைக்கேட்டறியும் அமர்வுகள் வடக்கில் நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாந்தை கிழக்கு மக்கள் மேலும் கருத்துக்களைப் பதிவுசெய்யும்போது,

என்னுடைய கணவனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். அவரை விடுதலை செய்யாவிட்டால், என்னுடைய கண்ணீரைத் தினமும் பார்க்கும்பிள்ளைகள் நாளை ஆயுதம் எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.

புனர்வாழ்வுகொடுப்பது மனதில் உள்ள நினைவுகள் அழிந்து நல்ல சிந்தனைகளை உருவாக்கி, நல்லநிலைமைக்கு வரவேண்டும் என்கின்ற காரணத்துக்குத்தான். இங்கே இது நடக்கவில்லை.

தந்தையை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காகவே நாளை எனது பிள்ளைகள் வன்முறையில் ஈடுபடக்கூடும். எனது கணவன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் பாண்டியன்குளம் கிராமத்தில்வசிக்கும் பெண்மணி கண்ணீருடன் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

எமது பிள்ளைகள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் அவர்களாலேயே காணாமல் ஆக்கப்பட்டார்கள். கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

நாங்கள் விடும் கண்ணீர் சும்மாயில்லை. குற்றம் செய்தவர்கள் எவராயிருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும். தண்டனை கட்டாயம் கிடைக்க வேண்டும்.

எமது பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தாய் தந்தையர்களுக்கு எல்லாம் இழப்பீடுகொடுப்பதாக கூறுகின்றார்கள்.எமது பிள்ளைகளின் உயிரை திருப்பிக் கொடுக்க முடியுமா? இயலாது.

எனவே, எங்களுக்கு இழப்பீடு கொடுப்பதாக இருந்தால், கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்குங்கள். அதுவே எங்களுக்கான இழப்பீடாக அமையும்.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் அமைக்க போவதாக அரசு தெரிவித்துள்ளது. அந்த அலுவலகங்கள் தமிழ் மக்கள் செறிந்து வாழும்பகுதிகளில் அமைக்கப்படவேண்டும்.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் அமைவது பொருத்தமானது. இந்த அலுவலகங்களில் நியமிக்கப்படும்அதிகாரிகள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தெளிவாக அறிந்த தமிழ்பேசுபவர்களாகவும் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.

அப்போதுதான் எமது நியாயமான கோரிக்கைகள் அவர்களிடம் உள்ளவாறே சென்றடையும் என்றும் மக்கள்தெரிவித்தனர்.

இந்த அமர்வில் மாந்தை கிழக்கை சேர்ந்த 60 பேர் தங்களுடைய கருத்துக்களைதெரிவித்தனர். அவர்களில் பெரும்பான்மையாக காணாமற்போனவர்களின் உறவுகளாவர்.

Share This Post

Post Comment