‘பணமதிப்பு நீக்கம் தொடர்பான ஆவணங்களை வெளியிடுங்கள்’ பிரதமர் மோடிக்கு மன்மோகன்சிங் கோரிக்கை

ekuruvi-aiya8-X3

manmohan_singhகுஜராத்தில் முதற்கட்ட சட்டசபை தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த கடைசி நாள் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை களமிறக்கியது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் சவுராஷ்டிரா பிராந்திய பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர், பின்னர் ராஜ்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பணமதிப்பு நீக்கம், ஊழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து மன்மோகன் சிங் கூறியதாவது:-

பணமதிப்பு நீக்க விவகாரத்தில் ராஜ்கோட் மற்றும் குஜராத் மக்கள் பிரதமர் மோடியை முழுமையாக நம்பினர். தங்கள் தியாகம் இந்தியாவுக்கு பயனுள்ளதாக அமையும் என அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் நம்பிக்கை அனைத்தும் சிதைந்து விட்டது.

ஏனெனில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கணிசமான அளவு கருப்பு பணம் சட்டப்பூர்வமாகி விட்டது. ஊழல் தழைத்தோங்கி வளர்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். பணமதிப்பு நீக்கத்தால் வேலைவாய்ப்பு நிலவரத்தில் உடனடி பின்விளைவு ஏற்பட்டது. லட்சக்கணக்கான பணி வாய்ப்புகள் இழந்ததுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. மூலம் மக்கள் துன்பப்படுவார்கள் என்பதை, குஜராத்தை சேர்ந்த ஒரு தலைவரான மோடி ஏன் அறிந்திருக்கவில்லை? என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா நேரத்திலும் எல்லாரையும் உங்களால் முட்டாளாக்க முடியாது.

இந்த நடவடிக்கையை தைரியமான முடிவு என அரசு கூறி வருகிறது. ஆனால் தைரியமான முடிவுக்கும், பேரழிவை ஏற்படுத்தும் முடிவுக்கும் இடையே வேறுபாடு உண்டு. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் பல தைரியமான முடிவுகளை மேற்கொண்டார். ஆனால் அதில் ஒன்றுகூட ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கவில்லை.

எனவே இதுபோன்ற தவறு மீண்டும் நிகழாமல் நாம் தடுக்க வேண்டும். அதற்காக பணமதிப்பு நீக்கம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பொதுவெளியிலும், ஆய்வு செய்வதற்காக பாராளுமன்றத்திலும் அரசு வெளியிட வேண்டும்.

நான் பிரதமராக இருந்த போது நர்மதை அணை திட்டம் தொடர்பாக என்னை சந்திக்க முயன்ற மோடியை தவிர்த்ததாக கூறுவது தவறு. அந்த திட்டம் தொடர்பாக என்னிடம் மோடி பேசியதாக எனக்கு நினைவு இல்லை. எப்போதெல்லாம் அவர் என்னை சந்திக்க விரும்பினாரோ, அப்போதெல்லாம் நான் மறுத்ததே இல்லை. ஒரு பிரதமராக முதல்-மந்திரிகளை சந்திக்க நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

காங்கிரசுக்கு ராகுல் காந்தி தலைவராகும் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங், ‘ராகுல் காந்தியின் இளமை வீரியமும், கருத்தியலும் தற்போது மக்கள் முன் உள்ளது. குஜராத் மக்கள் இதை உணர்ந்து விட்டார்கள். ராகுல் காந்தி நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சியும், இழந்த பெருமையை மீண்டும் பெறும்’ என்று கூறினார்.

Share This Post

Post Comment