மனவெளி அரங்காடல் 2018- ஒரு பொம்மையின் வீடு மைதிலி தயாநிதி

ekuruvi-aiya8-X3

MAM-0693-1 copy ஒரு சனி முற்பகல். மேகமூட்டத்துடன் வானம். பொத்தானிடப்படாத ஜக்கட்டின் கழுத்துப் பகுதியினூடாகக் குளிர்ந்த காற்று உடலை ஊடுருவ முயற்சிக்கின்றது.   ’பொட்டுப் பொட்டென்று’  மழைத்துளிகள் விழுகின்றன.  ஜக்கட்டின் மேற்பகுதியை எடுத்துத் தலையை மூட நினைப்பினும், அரங்காடல் நாடக ஒத்திகை பார்க்கப்போகின்றேன் என்ற பரபரப்பில் எதுவுமே பொருட்டாகத் தெரியவில்லை. ஒத்திகை நடைபெறும் மண்டப வாயிலை  ஐந்து நிமிடங்கள் தேடியலைந்து கண்டு பிடித்து உள்ளே நுழைந்து, நாற்காலியில் உட்கார்ந்து நாடகத்தைப் பார்த்தபோது, காலம் அசைவற்று, நிச்சலனமாக நின்றது.  இரண்டு மணித்தியாலத்திற்கும் சற்றுக் கூடுதலான நேரம் எப்படிக் கழிந்தது என்றே தெரியவில்லை.  நாடகம் என்னை ஒரு தவசியின் ஏகாக்கிரக சிந்தையுடன் உள்வாங்கியிருந்தது.  இராக சொரூபத்தினைப் படிப்படியாகக் காட்டி, ஆலாபனையினை உச்சஸ்தாயியில்  சஞ்சாரம் செய்து நிறைவு செய்யும் பாடகர்  போன்று, நாடகம் சிறிது சிறிதாக உத்வேகம் (momentum) பெற்று இறுதிக் காட்சியில் உச்சத்தினைத் தொட்டது. ஒட்டுமொத்தமான நாடக அளிக்கையின் தாக்கம் நெஞ்சைப் பிசைந்தது.  நாடகம் முடிவுற்ற பின்னரும்  சில கணங்கள்  ஆசனத்தில் உறைந்திருந்தேன். பின்னர் எழுந்து பிரதான பாத்திரங்களேற்று நடித்த அரசி விக்னேஸ்வரனையும்,ஜெயப்பிரகாஷையும் பாராட்டச்சென்றபொழுது வார்த்தைகள் என்னைக் கைவிட்டுவிட்டன. கண்ணீரையே அவர்களுக்கு என் வெகுமதியாக்கினேன்.

மனவெளி கலையாற்றுக் குழுவின் பத்தொன்பதாவது அரங்காடலில் மேடையேறுவது மூன்று அங்கங்களைக் கொண்ட ஒரு பொம்மையின் வீடு  எனும் நோர்வேஜிய எழுத்தாளர் இப்சனின் நாடகம் ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாடொன்றின் வீட்டுக்கூடத்தை (living room) மாத்திரமே களமாகக்  கொண்டு குடும்ப உறவுச் சிக்கல்களை இது பேசுகின்றது.  வருடத்தின் இறுதிக் காலமாகிய கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் சம்பவங்கள் நிகழ்கின்றன.  களம், காலம், நாடகம் பேசும் விடயங்கள் என்பவற்றுக்கிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மென்மையான நகைச்சுவை இழையோடும் முற்பகுதியைக் கொண்ட நாடகம், பிற்பகுதியில் தீவிரநிலை அடைகின்றது.

ஒரு பொம்மையின் வீடு யதார்த்த வகையைச் சார்ந்த நவீன நாடகம். ஆதலால் பார்வையாளர்க்கு நாடகத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை.  உரையாடல்கள் அனைவரும்MAM-0381 copy புரியும் வகையில் எளிமையான மொழியில் அமைந்துள்ளமையால், தடங்கல்கள் ஏதுமின்றி நாடகத்துடன் ஒன்றிப் போகக் கூடியதாக இருக்கின்றது. இந்நாடகத்தினை அழகாக மொழிபெயர்த்து, நெறியாள்கை செய்துள்ள பி. விக்னேஸ்வரன் அவர்கள் பாராட்டிற்குரியவர்.

குடும்பத்தில் நிலவும் சமத்துவமற்ற உறவையும், அதனால் எழும் பிரச்சினைகளையும் இந்நாடகம் பிரதிபலிக்கின்றது. நாடகத்தின் மையக் கருத்தாக்கமான சமத்துவமற்ற உறவினை கணவன் -மனைவிக்கு இடையில் மட்டுமன்றி வாழ்க்கையின் வேறு உறவுகளிலும்   பொருத்திப் பார்க்கக்கூடியதாக இருப்பதால்,  இந்நாடகத்தின்  சமூக வீச்சு காத்திரமானது என்று நினைக்கின்றேன். நாடகத்தின் பிற்கூறு ”விழித்துக் கொண்ட” பெண்மையின் முழுத்தரிசனத்தையும் காட்டுகின்றது. அதேசமயம் நாடகம் திருமண பந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை. காலம் முழுவதும் தந்தை, கணவன் என்று அவர்களாலே தீர்மானிக்கப்பட்ட வாழ்வை வாழுகின்ற, தன்னைக் குறித்த ‘சுயதரிசனம்” அற்ற  ஒரு பெண் ஒரு கட்டத்தில் விழித்துக் கொள்ளும் அதே வேளை,  வாழ்க்கை அனுபவங்களால் புடமிடப்பட்ட, சுய புரிதல் கொண்ட  இன்னொரு பெண் தான் முன்னர் நேசித்தவனுடன் தன் வாழ்வை இணைத்துக் கொள்கிறாள்.  கடிதங்களே நாடக பாத்திரங்களின் வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. ஏறத்தாழ 150 வருடங்களுக்கு முதல் எழுதப்பட்டதாக இருப்பினும், பிரதியின் சமகாலப் பொருத்தப்பாடு குறிப்பிடத்தக்கது.  அதிகாரமற்ற, சமமான உறவிற்றான் அன்பு நிலை கொள்ள முடியும் என்பதைத் துல்லியமாக உணர்த்தும் நாடகம் இது.

20180528-Arangadal19-newspaper-9.5x6இப்சனின் புகழ் பெற்ற இந்நாடகத்திற்கு தமது நடிப்பு மூலம் உயிர் கொடுக்கின்றனர்  நடிகர்கள்.  நாடகத்தின் பிரதான பாத்திரத்தினை ஏற்று நடிக்கும் அரசி விக்கினேஸ்வரனை இங்கு விசேடமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டு மணித்தியாலத்திற்குக் குறையாத நாடகமொன்றில் ஆரம்பம் முதல்  இறுதி வரை தனது சக்தியை  தக்க வைத்துக் கொண்டார் என்பதை விட, நாடகத்தின் தீவிரத்துவம் அதிகரித்தற்கேற்ப அவரின் சக்தியும் அதிகரித்துக் கொண்டே சென்றது  என்று கூறுவதே பொருத்தமானது.  இவ்வளவு உரையாடல்களையும் மனப்பாடம் பண்ணி,  எவ்வாறு  அனாயாசமாக வெகு இயல்பாக நடிக்கின்றார்? என்று என்னால் வியக்கத்தான் முடிந்தது.  இந்நாடகத்தில் இடம் பெறும் முக்கிய பாத்திரங்கள் எல்லாமே சிக்கலான பாத்திரங்கள் (complex characters).  அப் பாத்திரங்களின் பண்புணர்ந்து நடிக்கும் ஜெயப்பிரகாஷ், பவானி  சத்தியசீலன்,  குரும்பசிட்டி இராஜரத்தினம் என்பவர்களின் நடிப்பு நாடகத்திற்கு வலுவளிக்கின்றது.

19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய உடையலங்காரங்கள், பின்னணி இசை, ஒளி என்பனவற்றுடன்,  ஜூன் 30 அன்று   Flato மார்க்கம் தியேட்டரில் பிற்பகல் 1:30 மணிக்கும் மாலை 6:30 மணிக்கும் மேடையேறும் இந்நாடகம் கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்லதொரு விருந்தாய் அமையும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. தனிமனிதரில் சமூகத்தின் பாதிப்புகள், அவற்றால் எழும் சிக்கல்கள் முதலியவற்றைப் புரிந்து கொள்ள விழையும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நாடகம் இது. கதை, வசனம், நடிப்பு எனுமிம் மூன்றாலும் சிறப்புறும் இந் நாடகத்தில் மனம் நம்மை அறியாமலேயே தோய்ந்தெழும்.

Share This Post

Post Comment