மாணவர்களே கட்டிய கழிப்பறை! – மலைக்க வைத்த மனிதநேயம்

ekuruvi-aiya8-X3

t2பள்ளிக்கே வராமல் நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர் நாகப்பட்டினம் மாணவர்கள். ‘ கழிப்பறை இல்லாததே நோய் வருவதற்குக் காரணம் என்பதை உணர்ந்ததால், சக மாணவர்களிடம் வசூல் செய்து கழிப்பறை கட்டும் பணியை முடித்தோம்’ என உற்சாகமாகப் பேசுகின்றனர் மாணவர்கள்.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், தேசத்தின் தூய்மை பற்றிய பிரசாரத்தை முன்னெடுக்கிறது மத்திய அரசு. ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறையின் தேவை பற்றிய விழிப்பு உணர்வு பிரசாரங்கள் வேகமெடுத்துள்ளன. ‘ கழிப்பறை இல்லாததால் மணமகனை மணக்காத மணப்பெண்’ என்பன போன்ற செய்திகள் எல்லாம் வடஇந்தியாவில் சாதாரணம். தமிழ்நாட்டிலும், ஏழை எளிய மாணவனின் வீட்டிற்கு கழிப்பறைக் கட்டிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மாணவர்கள். மாணவர்களின் அசாதாரண முன்னெடுப்பை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் நாகப்பட்டினம் மக்கள்.

t1

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் உள்ள எஸ்.கே.அரசு உயர் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவர் அகத்தியன். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த அகத்தியன், அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். சக நண்பர்களான வசீகரன், ராகுல், நவீன்ராஜ், ஹரிஷ் ஆகியோர், ‘ ஏன் பள்ளிக்கு வருவதில்லை?’ என விசாரித்துள்ளனர்.

அவர்களிடம், தன் காலில் இருந்து தோல் நோயைக் காட்டி அழுதிருக்கிறார் அகத்தியன். ‘ அடிக்கடி விஷக் காய்ச்சலும் வந்துவிடுகிறது. சரியான டாய்லெட் இல்லாததுதான் காரணம்’ என அழுதிருக்கிறார். ‘ திறந்தவெளியில் மலம் கழித்ததால்தான் அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகிறார்’ என்பதை உணர்ந்த நண்பர்கள், ‘ நாமே ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, கழிப்பறை கட்டினால் என்ன?’ என்ற முடிவுக்கு வந்து, பள்ளி ஆசிரியர் வீரமணியிடம் கூறியுள்ளனர். அவரும், ‘மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இந்தத் திட்டம் அமையும். உடனே தொடங்குங்கள்’ என உற்சாகப்படுத்தினர்.

t3

இதையடுத்து, சுதந்திரதினவிழா அன்று கழிப்பறை கட்டுவது குறித்து விழிப்பு உணர்வு பேரணியை நடத்தினர். கூடவே, சக மாணவர்களிடம் கையேந்தி காசு வசூல் செய்தனர். ஒருவழியாக கழிப்பறை கட்டுவதற்கான தொகை சேர்ந்துவிட்டது. இதையடுத்து, அகத்தியனின் நண்பர்களே முன்னின்று கழிப்பறையைக் கட்டும் பணியை நிறைவு செய்தனர்.
கொளுத்தும் வெயிலில் சக மாணவனுக்காக கழிப்பறை கட்டும் பணியில் மாணவர்கள் இறங்கியதை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர் சுற்றுவட்டார பொதுமக்கள். மாணவர்களின் செயலைக் கேள்விப்பட்டு கல்வி அதிகாரிகள், அவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டினர்.

‘உயிர் காப்பான் தோழன்’ என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர் இந்த மாணவர்கள். இந்த மாணவர்களுக்கு நாமும் வைப்போம் ஒரு ராயல் சல்யூட்!

t4

Share This Post

Post Comment