மல்லாகம் இராணுவச் சிப்பாய் கொலை வழக்கில் எதிரி ஆனந்தராஜா விடுதலை – யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ekuruvi-aiya8-X3

saddamமல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் எதிரி இரத்தினம் ஆனந்தராஜாவை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி மல்லாகம் இராணுவ முகாமில் பணியாற்றிய குமாரதாசகே சமீர பிரசாத் குமார என்ற இராணு வீரரைக் கொலை செய்ததுடன். தன்னியக்கத் துப்பாக்கி ஒன்றையும் உயிருள்ள ரவைகளையும் உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, சட்டமா அதிபரினால், யாழ் மேல் நீதிமன்றத்தில் இரத்தினம் ஆனந்தராஜா என்பவருக்கு எதிராக குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது,

இந்த விசாரணையின்போது, வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சிகளாக மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர்கள் சாட்சியமளித்தனர்.

மல்லாகம் இராணுவ முகாமில் கடமையாற்றிய குமாரதாசகே சமீர பிரசாத் குமார என்ற இராணுவ சிப்பாய் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலின்போது, எதிரியைக் கைது செய்ததாகவும், அவருடைய உடைமையில் தன்னியக்கத் துப்பாக்கியும் உயிருள்ள ரவைகளும் இருந்ததாகவும் சாட்சிகள் தமது சாட்சியத்தில் தெரிவித்தனர்.

அரச தரப்பு சாட்சியங்களையடுத்து, இந்த வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த இரத்தினம் ஆனந்தராஜா நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

இந்த வழக்கில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்களுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.

மல்லாகம் இராணுவ முகாமுக்கு அருகிலேயே எனது வீடு இருக்கின்றது. வீட்டில் இருந்த எனக்கு, இராணுவ முகாம் பக்கம் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. சூட்டுச் சத்தம் கேட்ட சில நிமிடங்களில் இராணுவத்தினர் வந்து என்னைக் கைது செய்தனர். கொல்லப்பட்ட இராணுவ சிப்பாயினுடைய மரணத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என இரத்தினம் ஆனந்தராஜா தனது சாட்சியத்தில் கூறினார்.

இரு தரப்பு சாட்சியங்களையும் செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன், இந்த வழக்கில் எதிரி மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அரச தரப்பினரால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்து, எதிரியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Share This Post

Post Comment