மக்கள் போராட்டத்தால் மிரண்ட தமிழக அரசு.. வந்தது உறுதிமொழி.. நெடுவாசலுக்கு தற்காலிக வெற்றி!

ekuruvi-aiya8-X3

neduvasal-protes21-450x338ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 15 நாட்களாக தொடர்ந்து நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மக்களுக்கு மதிப்பளித்து இந்தத் திட்டத்திற்கு அனுமதி தரமாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருப்பது அந்த மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை நெடுவாசல் மக்கள் கடுமையாக எதிர்த்து கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்து தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து கொண்டே இருக்கிறது.

இரவும் பகலுமாக பெண்களும் குழந்தைகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது அரசை கதிகலங்கச் செய்துள்ளது.இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்கும் போது இந்தத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து கேட்டுக் கொண்டார்.

நேற்று 11 பேர் கொண்ட நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி நெடுவாசல் மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று உறுதிபட கூறினார்.இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்த சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியிருந்தார்.

இனியும் அனுமதி வழங்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று போராட்டக் குழுவினரிடம் உறுதியளித்தார். மேலும், நேரிடையாக வேண்டுகோளும் விடுத்தார்.

ஆனாலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்கிறோம் என்று முறையான அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தாலொழிய போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று மக்கள் உறுதியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ள நிலையில், தற்காலிக வெற்றி பெற்றுள்ள நெடுவாசல் மக்கள், நிரந்தர வெற்றியை நோக்கி 15வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

Share This Post

Post Comment