அன்று ஆடிய ஆட்டம் என்ன? இன்று ஓடிய ஓட்டம் என்ன?

ekuruvi-aiya8-X3

ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்களை மீடியாக்கள் படம் பிடிப்பது புதிய விஷயம் அல்ல. ஆனால் ஜூன் 6 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கே.டி.பிரதர்ஸை படம் பிடிக்க முயன்ற மீடியாக்களைச் சிலர் பகிரங்கமாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

shhதயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டமான 2004 முதல் 2007 வரையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கு அது. சென்னை போட் கிளப்பில் உள்ள தயாநிதியின் வீட்டில் சட்டவிரோதமாக அதிவேக தொலைத்தொடர்பு இணைப்பகம் இருந்ததாகவும் அதனை சன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்குப் பயன்படுத்தியதாகவும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி சி.பி.ஐ மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் க்கு அதில் 1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்தது. சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளராகப் பதவி வகித்த பிரம்மநாதன், தயாநிதியின் தனிச் செயலாளர் கெளதமன் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் கலாநிதி தயாநிதி தவிர வேறு சிலரை 2015 இல் சி.பி.ஐ கைது செய்தது. இவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஜூன் 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதையொட்டி கலாநிதி, தயாநிதி உள்ளிட்டவர்கள் சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு வந்தனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றத்தின் பின்புறம் 2 ஆவது மாடியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆஜரான கலாநிதி, தயாநிதி உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல்களை நீதிபதி ஜவஹர் வழங்கினார். பிறகு அங்கிருந்து அவர்கள் கிளம்பி கீழ் தளத்திற்கு வந்தபோதுதான் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டு நடந்தது. இது குறித்துப் பேசிய உயர் நீதிமன்ற செய்தியாளர்கள் சிலர் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வீடியோ கேமரா கொண்டு செல்லத்தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் மாநில பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிவரை மொபைல் போன் மூலமாகப் படங்களை எடுத்துக்கொள்வதை மீடியாக்கள் வழக்கமாக்கி வைத்திருக்கின்றன.

அந்த வகையில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு படிக்கட்டு வழியாக இறங்கி வந்த கலாநிதியை கீழ்தளத்தில் செய்தியாளர்கள் படம் எடுத்தனர். அப்போது கலாநிதி தரப்பு வழக்கறிஞர் ஒருவர், தொலைக்காட்சி நிருபர் ஆனந்தின் மொபைல் போனை ஓடிவந்து பறித்தார். இதற்குச் செய்தியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். படம் எடுத்தபோது கலாநிதி இன்று ஓடிய ஓட்டம் என்ன? கார் மறைவில் ஓடி ஒளிந்து கொள்வதில்தான் ஆர்வம் காட்டினார். படம் எடுத்தவர்களை எடுக்காதீர்கள் என்றும் கூறவில்லை. மொபைல் போனை பறித்த வழக்கறிஞரைத் தடுக்கவும் இல்லை. பிறகு செய்தியாளர்களே வாதாடியும் போராடியும் மொபைல் போனை மீட்டனர்.

அதே நீதிமன்றத்தின் இன்னொரு வாசல் வழியாக தயாநிதி வெளியே வந்தார். அவரையும் மொபைல் போனில் மீடியாக்கள் படம் எடுத்தன. அப்போது அவருடன் வந்த பெண் வழக்கறிஞர் கையை ஓங்கியபடி ஒரு நிருபரை அடிக்கவே பாய்ந்தார். மத்திய அமைச்சராக இருந்தபோது நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் ஆஜராகும்போது மீடியா எப்படிப்படம் எடுக்காமல் இருக்க முடியும்?

ஒரு சன் மீடியாவையே நடத்துகிற இவர்களுக்கு இது தெரியாதா? எத்தனை பேரை விரட்டி விரட்டி இவர்கள் வீடியோ எடுத்து ஒளிபரப்பி அன்று ஆடிய ஆட்டம் என்ன? குடும்பப் பெண்கள் என்று கூடப்பாராமல் எத்தனை பேரைச் செய்திகளில் காண்பித்துப்பரவசம் அடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறு நியாயமா? என ஆவேசப்படுகிறார்கள் உயர் நீதிமன்றச் செய்தியாளர்கள்.

Share This Post

Post Comment