கவலைகளை தீர்த்து வைக்கும் கோவில்

ekuruvi-aiya8-X3

chinna_Tirupathiமக்கள் அனைவரும் வழிபடும் முக்கியமான கோவில்களில் ஒன்று திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம். ஆனால் தமிழக மக்கள் பலராலும் இந்த ஆலயத்திற்கு சென்றுவர முடியாத நிலை இருக்கலாம். அவர்களுக்காகவே தமிழகத்திலும் பெருமாள் அருள்பாலிக்கிறார். அந்த திருத்தலம் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காருவள்ளி ஊராட்சியில் உள்ள பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோவில் தான், ‘சின்ன திருப்பதி’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு சுமார் 30 அடி உயர குன்றின் மீது வீற்றிருந்து பிரசன்ன வெங்கட்ட ரமண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால், திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பேறை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் இந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார பக்தர்கள், சின்ன திருப்பதி கோவிலுக்கு வந்து உத்தரவு பெற்ற பின்னரே திருமலை யாத்திரை மேற்கொள்வார்கள். அங்கு சென்று திரும்ப வரும் பக்தர்கள் மீண்டும் சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமியை வணங்கிய பின்னரே தங்கள் ஊர்களுக்கு செல்கிறார்கள்.

வைகுண்டத்தில் வீற்றிருக்கும் வைகுண்டநாதரை தரிசிக்க வாயு தேவன் விரைந்து வந்தார். திருத்தல காவலர் ஆதிசேஷன் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் ‘யார் பலசாலி?’ என்ற போட்டி எழுந்தது. ஆதிசேஷனோ மேருமலையின் குமாரரான ஆனந்த பர்வதத்தை சுற்றிக்கொண்டு நின்றார். வாயு பகவான், பலமாக காற்றை வீசி அந்த மலையை பெயர்த்திட முயன்றார்.

சுற்றிச் சுழன்றடிக்கும் கடும் சூறாவளியை கண்டு, அனைத்து உயிர்களும் அஞ்சி நடுங்கின. தேவர்கள் ஓடிச்சென்று இருவரையும் சமாதானம் செய்து கொள்ளும்படி வேண்டினர். தேவர்கள் வேண்டுகோளை ஏற்று செவிமடுத்த ஆதிசேஷன், தன் ஆயிரம் தலைகளில் ஒன்றை மட்டும் சற்றே நகர்த்தினார். அப்போது காற்றின் வேகத்தால் ஆனந்த பர்வதத்தின் ஒரு பகுதி பிளந்து வீசி எறியப்பட்டது. அது இரு துண்டுகளாகி பூமியில் விழுந்தது. அதில் ஒன்றே தொண்டை நாட்டு பெரிய திருப்பதி. மற்றொன்று கொங்கு நாட்டில் விழுந்த சின்ன திருப்பதி மலையாகும். இவ்வாறு தோன்றிய மலையில் ஒரு புற்றில் மகாவிஷ்ணு தங்கி இருந்தார்.

புற்றில் இருந்த திருமாலுக்கு அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக் கூட்டங்களில் இருந்து பிரிந்து வந்த பசு ஒன்று, தினமும் பாலை சொரிந்தது. தனித்து செல்லும் பசுவின் மீது சந்தேகம் கொண்ட பசு மேய்ப்பவன், அந்தப் பசுவை பின்தொடர்ந்து, அது செய்து வந்த செயலைக் கண்டான். மேலும் அங்கிருந்த குன்றின் மீது ஒரு சிறிய அழகிய கோவில் உருவாகி இருந்ததையும் கண்டு அதிசயப்பட்டான். அதனால் அவனுக்கு மலைக்கண்டான் என்னும் பெயர் வந்தது. அந்த வம்சத்தினரே சுவாமி காரியங்களை செய்து வந்தனர். தான் கண்ட காட்சியை மலைக்கண்டான், அந்த ஊர் மக்களிடம் அறிவித்தான். திரண்டு வந்த மக்கள், அவதார மூர்த்தியாகிய வெங்கட்டரமண சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக் கண்டு பேரானந்தம் கொண்டனர். குன்றெடுத்து பசுக்கூட்டங்களை குளிர்மழையில் இருந்து காத்த தெய்வம், பசுவாலே அடையாளம் காட்டப்பட்டு அன்பர்களுக்கு தரிசனம் தரும் தலம் இந்த புனித தலமாகிய சின்ன திருப்பதியே ஆகும்.

இங்குள்ள அலர்மேலு மங்கை அம்மன், வெங்கட்டரமண சுவாமியுடன் இணைந்ததற்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது. அதைப் பார்க்கலாம். ராவண வதம் முடிந்த பிறகு சீதையை ராமர் தீக்குளிக்கச் செய்தார். அப்போது சீதாதேவி இரு உருவமாக தீயில் இருந்து வெளியே வந்தார். ஓர் உருவம் சீதை, மற்றொரு உருவம் வேதவதி. ராவணன் மாயா சீதையை தான் இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்திருந்தான். அந்த மாயா சீதையே வேதவதி. கற்பு தெய்வத்தை காக்க வேண்டி சீதையாக உருவெடுத்து துன்பப்பட்ட வேதவதியை, அவர் விருப்பப்படி ராமர் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். ஆனால் ராமர் இருமாதரை சிந்தையாலும் தொடாத ஏகதார நோன்பினர். எனவே கலியுகத்தில் வேதவதியை, பத்மாவதியாக பிறக்க வைத்து தான் வெங்கடேசனாக மணப்பதாக உறுதி கூறினார்.

இதையடுத்து வேதவதி தீயில் மறைந்தார். அதன்பிறகு சின்ன திருப்பதியில் பத்மாவதி தாயாருடன் வெங்கட்டரமணராக சுவாமி அருள் பாலிப்பதே இந்த கோவிலின் தல வரலாறு ஆகும். திருமாலின் திருமார்பில் வீற்றிருந்த திருமகள், கருத்து வேறுபாட்டால் பெருமாளை பிரிந்திருந்தார். பத்மாவதி தாயார் தனக்கு வாழ்வு கொடுத்த லட்சுமி அம்மையை மறக்காது, தம்முடன் சேர்ந்திருக்க அழைத்து வரச்சொன்னார். கபில மாமுனிவர் சென்று அன்னை ஸ்ரீதேவியை அழைத்து வந்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இந்த ஆலயத்தில் இருபக்கமும் தேவியர் நிற்க வெங்கட்டரமண சுவாமி நடுவே நின்று அருள்காட்சி வழங்குகிறார்.

வெங்கட்டரமண சுவாமி ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக நின்று, இரு புறங்களிலும் அலர்மேலுமங்கையுடனும், லட்சுமியுடனும் காட்சி அளித்து அருளாட்சி புரிந்து வருகிறார். கோவிலின் உள் பிரகாரத்தில் ராம பக்தராகிய ஆஞ்சநேயரை தரிசித்து அவருடைய அனுக்கிரகத்தை பெற்று உள்ளே நுழையலாம். கோவில் வளாகத்தில் தனிச் சன்னிதியில் பத்மாவதி தாயார், வீரலட்சுமியாக வீற்றிருக்கிறார். திருமண தடை, புத்திரப்பேறு, செல்வம், பருவத்தில் மழை போன்ற வரங்களைப் பெற, ஆண்டாள் வழங்கிய திருப்பாவை பத்மாவதி தாயார் முன் மண்டபத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும். கோவிலின் வடபுறத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமும், ராம காரியமாக இலங்கை புறப்படும் முன்பு தன் விஸ்வரூபத்தை காட்டிய திருக்கோலத்தோடும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலில் காலை 7 மணிக்கு திருவாராதனம் சாற்றுமுறை, மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை நடை அடைப்பு. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 6 மணி முதல் சாயரட்சை, திருவாராதனம் முடிந்து 6.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. திருவிழா காலங்களிலும், சனிக்கிழமை, அமாவாசை நாட்களிலும் இந்த கால அட்டவணை மாறுபடும்.

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா காருவள்ளி ஊராட்சி அருகே அமைந்துள்ளது, சின்ன திருப்பதி கோவில். ரெயில் மூலமாக சென்றால் சேலம் சந்திப்பில் இருந்து பெங்களூரு மார்க்கத்தில் காருவள்ளி ரெயில் நிலையத்தில் இறங்கி கோவிலை அடையலாம். ஓமலூரில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு டவுன் பஸ்சும் உள்ளது.

Share This Post

Post Comment