பெற்றோர்களே, குழந்தைகளின் உணர்வை மதிக்க பழகுங்கள்

child_020918குழந்தைகளின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவைகளை தனிமனிதர்களாக பாவிக்கும் சில பெற்றோர்களுக்கு மத்தியில், பல பெற்றோர்கள் ஏதோ தாங்கள் உருவாக்கிய பொம்மைகள்போல் நினைத்து குழந்தைகளை அடிமைப்படுத்தவே செய்கிறார்கள். அவர்கள் அளவுக்கு மீறி அன்பும் செலுத்துகிறார்கள். எல்லைகடந்து அடக்குமுறையையும் கையாளுகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை வார்த்தைகளால் காயப்படுத்துகிறார்கள்.

தற்போது வீட்டிற்கு ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தோல்விகளை தாங்கிக்கொள்ளும் பக்குவத்திலோ, சூடான வார்த்தைகளை ஜீரணித்துக்கொள்ளும் மனநிலையிலோ இல்லை. பெற்றோரின் வார்த்தைகளால் எளிதாக காயமடைந்துவிடும் குழந்தைகள், ரொம்பவும் கவலையடைகிறார்கள். கவலை அதிகமாகும்போது, பெற்றோரிடம் இருந்து விலகி காணாமலும் போய்விடுகிறார்கள். அது பெற்றோருக்கு தீராத மனக்கவலையை உருவாக்கிவிடுகிறது.

பள்ளிக்கு செல்லும் இரண்டு சிறுவர்கள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள். யாரோ பணத்திற்காக அவர்களை கடத்திச் சென்றுவிட்டார்கள் என்ற பயத்தில் பெற்றோர் போலீசில் புகார் செய்தார்கள்.

போலீஸ் பல வழிகளில் தேடுதல் வேட்டை நடத்தியும், சிறுவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் நிம்மதியைத் தொலைத்த பெற்றோர் தங்கள் குழந்தைகள் இறந்துவிட்டார்களோ என்று அஞ்சினார்கள்.

இரண்டு வாரத்திற்கு பிறகு பக்கத்து மாநிலத்தில் அந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் ‘ஏன் வீட்டைவிட்டு வெளியேறினீர்கள்?’ என்று காரணம் கேட்டபோது, ‘பெற்றோர்கள் தங்களை திட்டியதாகவும், அவர்களை பழிவாங்குவதற்காக வீட்டைவிட்டு ஓடியதாகவும்’ சொன்னார்கள்.

வீட்டை விட்டு ஓடுவதற்கு முன்னால் இருவரும் பக்கத்தில் உள்ள மைதானத்திற்கு சென்று, தங்களுக்கு பெற்றோர் மீதிருக்கும் கோபத்தை பற்றி வெளிப்படையாக விவாதித்திருக்கிறார்கள். தங்களை காயப்படுத்தியதால் அவர்களை கவலைப்படவைக்கவேண்டும் என்று திட்டமிட்டு, அந்த காணாமல் போகும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் நினைத்துப்பார்க்கவே இல்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்றபோது அவர்கள் சமூக விரோதிகளின் கண்களில்பட்டிருந்தால் அவர்கள் நிலை என்னவாகியிருக்கும்?

இந்தியாவில், கொல்கத்தாவில் சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒன்றாக சில பள்ளிச்சிறுமிகள் காணாமல் போனார்கள். பதறிப்போன பெற்றோர் காவல் துறையின் உதவியை நாட, அவர்கள் அதிவேகமாக நகரெங்கும் தேடி, அந்த சிறுமிகளை கண்டுபிடித்து வீடு கொண்டுபோய் சேர்த்தனர்.

‘பெற்றோர் எப்போதும் எங்களை படி படி என்று மிரட்டுகிறார்கள். விளையாடச் செல்லும் நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். அதனால் எங்களால் தோழிகளுடன் சேர்ந்து விளையாட முடியவில்லை. நாங்கள் ஏதாவது தப்பு செய்தால் கடுமையாக திட்டி அடிக்கிறார்கள். எங்கள் உணர்வுகளை காயப்படுத்தும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கத்தான் எல்லோருமாய் சேர்ந்து வீட்டைவிட்டு ஓடினோம்..’ என்று காரணங்களை அடுக்கினார்கள்.

‘சரி.. இப்போது அவரவர் பெற்றோரோடு வீட்டிற்கு செல்லுங்கள்’ என்று சொன்னபோது, ‘எங்கள் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே வீட்டிற்கு செல்வோம். இல்லாவிட்டால் எங்களை அவரவர் பாட்டி வீடுகளுக்கு அனுப்பிவிடுங்கள்’ என்றார்கள்.

அவர்கள் விதித்த நிபந்தனைகள், ‘இனி அடிக்கக்கூடாது. திட்டக்கூடாது. வீட்டுவேலைகளை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது’ என்பவை. பெற்றோர் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சிறுமிகளை அவரவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்கள்.

சிறுவர்- சிறுமிகள் மனதளவில் தளர்ந்து, வீட்டை விட்டு வெளியேற, அவர்களது பெற்றோர்களுக்குள் அடிக்கடி நடக்கும் சண்டையும் ஒரு காரணம். வீட்டில் அமைதி இல்லாமல் போவதும், குடும்பப் பிரச்சினைகளும் குழந்தைகளின் மனநிலையை கெடுக்கின்றன.

பெற்றோர்களுக்கு தங்கள் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை நிறைய இருக்கும். அதே சிந்தனையை குழந்தையிடமும் எதிர்பார்க்கக்கூடாது. சாதிக்கவேண்டும் என்ற வெறியும் பெரியவர்களைப்போல் சிறுவர்களிடம் இருக்காது. அவர்களது விருப்பம் எல்லாம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில்தான் இருக்கும்.

அதற்கான சூழலை பெற்றோர் அமைத்துதரவேண்டும். மாறாக பெற்றோர் தங்கள் சுமைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. திணிப்புதான் பிரச்சினையின் தொடக்கமாக இருக்கும். எதையும் திணிக்காமல் குழந்தைகள் இனிப்பாக வளர உதவுங்கள்.


Related News

 • மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
 • எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை
 • இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்
 • மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்
 • ஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்
 • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019
 • சரும பொலிவு தரும் வாழைப்பழ தோல்
 • இரவில் வாக்கிங் போவது உடலுக்கு நல்லதா?
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *