டெல்லியில் லாலு பிரசாத் மகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

ekuruvi-aiya8-X3

lalo_daughterடெல்லியில் போலி நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சுரேந்திர குமார் ஜெயின், விரேந்திர ஜெயின் ஆகிய சகோதரர்களை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்து உள்ளது. அவர்கள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருகிறது. இந்த சகோதரர்கள் ‘மிஷெயில் பிரிண்டர்ஸ் மற்றும் பேக்கர்ஸ்’ என்ற நிறுவனத்தை நிர்வகித்து வந்தனர்.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக, ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தனர். மிசா பாரதி ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி. ஆவார்.

இந்த நிறுவனத்தின் 1,20,000 பங்குகளை கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் தலா ரூ.100-க்கு 4 போலி நிறுவனங்கள் வாங்கியிருந்தன. பின்னர் இந்த பங்குகளை தலா ரூ.10 வீதம் மிசா பாரதி தம்பதியினர் திரும்ப வாங்கியதை அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

எனவே ஜெயின் சகோதரர்களின் நிதி மோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் மற்றும் மிஷெயில் நிறுவனத்துக்கு சொந்தமான பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். டெல்லியின் ஜிட்ரோனி, பிஜ்வசான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 பண்ணை வீடுகளில் இந்த சோதனை நடந்தது.

இவர்களுக்கு சொந்தமான மேலும் 2 இடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில் பிறகு சோதனை நடத்தப்படும் என தெரிகிறது.

ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த நிலையில் நிதி மோசடி வழக்கு தொடர்பாக லாலு பிரசாத்தின் மகள் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருப்பது ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Post

Post Comment