ரிசர்வ் வங்கி போதிய அளவு கொடுக்காததால் வங்கிகளில் பணம் தட்டுப்பாடு

atm_NO_MONEYகருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளிலும், பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களின் வாசலின் முன்பும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர்.

மக்களின் அன்றாட தேவைக்கான சில்லரை நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில், மத்திய அரசு தாமதித்து வருகிறது. புதிதாக ரூ.2,000 நோட்டுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால், அதற்கு சில்லரையாக 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

பழைய நோட்டுகளை மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, சில்லரை நோட்டுகள் கிடைக்காமல் பணப்புழக்கம் முடங்கிபோயுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையான அவதியில் உள்ளனர். சில்லரை நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் ஏ.டி.எம். மையங்களை தேடி அலைகின்றனர்.

சென்னையில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலான ஏ.டி.எம். எந்திரங்கள் தொடர்ந்து 15 நாட்களாக முடங்கியே கிடக்கின்றன. ‘பணம் இல்லை’, ‘ஏ.டி.எம். எந்திரம் பழுது’, ‘சேவையில் இல்லை’ என்ற பல்வேறு வகையான போர்டுகள் ஏ.டி.எம். மையங்களின் முகப்பில் தொங்குகின்றன.

செயல்பாட்டில் இருக்கும் சில ஏ.டி.எம். எந்திரங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. தட்டுப்பாடு காரணமாக 100 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் சில்லரை செலவுக்கு 100 ரூபாய் நோட்டுகளை எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

2,000 ரூபாய் நோட்டை எடுப்பதற்கு கூட பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் ஏறி இறங்கிய பின்புதான், ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைக்கிறது.

ரிசர்வ் வங்கியிலும் பணம்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு வினியோகம் செய்யும் பணத்தின் அளவையும் ரிசர்வ் வங்கி கணிசமாக குறைத்துள்ளது. உதாரணமாக வங்கிகள் ரூ.60 லட்சம் கேட்டால், ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரைதான் அந்த வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி கொடுத்து வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையை விடவும் வங்கிகள் மிகவும் குறைத்து வழங்குகின்றன. அதுவும் பணம் இருப்பு உள்ள வரை மட்டுமே வழங்கப்படுகின்றது. சில வங்கிகளில் டோக்கன் வழங்கி, இருப்பு உள்ள தொகை பகிர்ந்து வழங்கப்பட்டது. பணம் இல்லாத வங்கிகள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பிவருகின்றன.

இதனால் வங்கிகளுக்கு சென்று ஏமாற்றத்தைத்தான் சந்திக்கவேண்டும் என்பதற்காக பொதுமக்கள் சிலர் வங்கிகளுக்கு செல்வதையே தவிர்த்து வருகின்றனர். தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வங்கி கணக்கில் இருந்தும் பணம் கொடுக்க முடியவில்லை.

வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்றாலும், அந்த தொகையை கொடுக்கவும் பணம் இல்லாமல் வங்கிகள் திண்டாடுகின்றன. பணம்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் நேற்றும் பணப்பரிமாற்றம் அடியோடு முடங்கியது. கையிருப்பு பணம் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியாமல் வங்கிகள் திணறின.

வங்கிகள் திறந்திருந்தும் பணம் இல்லாததால், மக்கள் அங்கு செல்லவில்லை. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. காட்சி பொருளான ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று ஏமாறுவதற்கும் மக்கள் தயாராக இல்லை.

கூட்டம் இருந்தால் மட்டுமே அந்த ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க மக்கள் செல்கிறார்கள். கூட்டம் இல்லை என்றால், அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று தாங்களாக புரிந்துகொண்டு சென்றுவிடுகின்றனர்.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் பணப்பரிமாற்றம் செய்ய நேற்று குறைவான பொதுமக்களே வந்திருந்தனர். இவ்வாறு வந்தவர்களுக்கு 10 ரூபாய் நாணயங்கள் மட்டுமே பொட்டலங்களாக வழங்கப்பட்டன.

பொதுமக்களிடம் ஏற்படும் குழப்பத்தை தவிர்ப்பதற்காக, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முடிந்த பின்பு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வினியோகிக்க உள்ளன. புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகித்த பின்புதான் தற்போது நிலவும் பணம் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை – எடப்பாடி பழனிசாமி
 • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
 • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *