குமரிஅனந்தன் உண்ணாவிரதத்தை திருநாவுக்கரசர் முடித்து வைத்தார்

ekuruvi-aiya8-X3

kumari_anandanதமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான குமரி அனந்தன் பாரதமாதா கோவில் அமைத்தல், பூரண மதுவிலக்கு, நதிநீர் இணைப்பு ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2–ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு இருந்து, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். நேற்றுமுன்தினம் பாப்பாரப்பட்டியை சென்றடைந்தார்.

அதை தொடர்ந்து 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்குள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். அவரை போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்து ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் விட்டனர்.

பின்னர் அவர் நேற்று 2–வது நாளாக தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார். அவரை சந்தித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ‘‘குமரி அனந்தனின் கோரிக்கையை ஏற்று பாரதமாத ஆலயம் அமைய இன்று(நேற்று) இரவுக்குள் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

நேற்று மாலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கட்சி நிர்வாகிகள் குமரி அனந்தனின் இல்லத்துக்கு வந்தனர். அதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் அங்கு வந்தார்.

திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் ஆகியோர் குமரி அனந்தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, குமரி அனந்தனுக்கு, திருநாவுக்கரசர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

உண்ணாவிரதத்தை முடித்த பின்னர் குமரி அனந்தன் பேசும்போது, ‘‘திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் ஆகியோரின் கட்டளைக்கு இணங்க உண்ணாவிரதத்தை முடித்து உள்ளேன். இன்னும் சில காலங்களில் எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், நீங்கள் மீண்டும் எனக்கு கட்டளையிட வேண்டும். இப்போது போராட்டத்தை விடு என்று கூறிய நீங்கள் அப்போது மீண்டும் போராட்டத்தை எடு என்று கூற வேண்டும்’’ என்றார்.

Share This Post

Post Comment