ஆவா குழுவை காட்டி யாழ். மாணவர்களின் கொலை வழக்கை திசைதிருப்ப முயற்சியா? – சிவாஜிலிங்கம் கேள்வி

Facebook Cover V02

shivaji6265ஆவா குழுவை காரணம் காட்டி, குமாரபுரம் படுகொலை வழக்கைப் போன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கையும் வட மாகாணத்திற்கு வெளியே அநுராதபுரம் போன்ற பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுகின்றதா என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் இராணுவ தளபதி ஒருவருமே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாக அமைச்சர் ராஜித நேற்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சிவாஜிலிங்கம் மேற்குறித்தவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆவா குழுவிற்கு அரசியல் பின்னணி உள்ளது என்றால், அரசியல் காரணங்களை வைத்து இதற்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதிலே தாமதம் காட்டுவதை இலங்கை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தற்போது அதற்கு அவசியம் இல்லையென்றும் அமைச்சர் ராஜித கூறியுள்ள நிலையில், அப்படியாயின் போர்க்காலத்தில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஆயுதக் குழுக்களுடன் இணைந்து இலங்கை படையினர் படுகொலைகளை நடத்தியதை அவர் ஒப்புக்கொள்கின்றாரா என்றும் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, யாழில் அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் கூறி வருகின்றதை சுட்டிக்காட்டிய சிவாஜிலிங்கம், அவ்வாறு சிங்கள மக்களுக்கு யாழில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென்றும், அவ்வாறு ஏற்படுமாயின் அதனைத் தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நிற்போம் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தமது கடமையை சரியாக செய்யவேண்டும் என சிவாஜிலிங்கம் இதன்போது கேட்டுக்கொண்டார்.

Share This Post

Post Comment