மரபியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தை மரணம்!

Charlie-Gard-parents-announce-death-oலண்டனில் மரபியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய 11 மாத குழந்தையின் செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதால் குழந்தை உயிரிழந்தது. பிரதமர் தெரசா மே மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லண்டனை சேர்ந்த கிரிஸ் கார்ட், கொன்னி யேட்ஸ் தம்பதியருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. ‘சார்லி கார்ட்’ என்று பெயரிடப்பட்ட இந்த குழந்தை பிறவியிலேயே ஓர் அபூர்வமான மரபியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, குழந்தையின் மூளை மற்றும் தசைகள் இயங்கவில்லை. கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு, உயிர் காக்கும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

குழந்தை உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதேசமயம் இந்த இதற்கான சிகிச்சை அமெரிக்காவில் இருப்பதாக அறிந்த பெற்றோர், மருத்துவ செலவுக்கான பணத்தை ஏற்பாடு செய்ததுடன், குழந்தையை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர்.

ஆனால், மருத்துவமனை அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், குழந்தையை வெளிநாட்டுக்கு கொண்டு சென்றாலும் பயனில்லை என்பதால், உயிர் காக்கும் கருவிகளை அகற்றிவிடலாம் என தீர்ப்பளித்தனர். எனினும், குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் இருந்த பெற்றோர் தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க முன்வந்த நரம்பியல் நிபுணர் மிச்சியோ ஹிரனோ, சிகிச்சைக்கான காலம் கடந்துவிட்டது என்றும் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். எனவே, பெற்றோர் கடந்த திங்கட்கிழமை தங்கள் சட்டப் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து சாவின் விளிம்பில் இருந்த குழந்தைக்கு பொருத்தப்பட்ட உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டன. செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதால் நேற்று மாலை குழந்தையின் உயிர் பிரிந்தது. 11 மாதமாக போராடியும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போன பெற்றோர் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

‘எங்கள் அழகான சின்னஞ்சிறு பாலகன் எங்களை விட்டு போய்விட்டான். சார்லி, நாங்கள் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்’ என கொன்னி யேட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளார்.

குழந்தை சார்லியின் மரணம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே, போப் பிரான்சிஸ், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment