கொத்துக்குண்டு, விஷ ஊசிக் கொலை, இன அழிப்பு! விரைவில் சர்வதேச விசாரணை வேண்டும்-வடக்கு மக்கள்

ekuruvi-aiya8-X3

unnamed1-720x480போர்க்காலத்தின் போது படையினரால் கொல்லப்பட்டவர்கள், போர் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின் கொல்லப்பட்டவர்கள், கொத்துக்குண்டுப் பயன்பாடு, விஷ ஊசிக் கொலைகள் மற்றும் இன அழிப்பு என்பன தொடர்பில் சர்வதேச நீதிபதிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நல்லிணக்க செயலணியால் வடக்கில் மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றன.

இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மக்கள் இவ்வாறு கூறியுள்ளனர். மக்கள் நம்பியது – அலைந்தது போதும். நம்பிக்கைதான் எப்போதும் கேள்விக்குறியாக உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக் கண்டறியும் அலுவலகம் உறுதியானதாக – பலமானதாக அமைக்கப்பட வேண்டும்.

இரகசியத் தடுப்பு முகாம்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர் விவரங்கள் உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

கடத்தியவர்கள் – கடத்தலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். சர்வதேச தரத்துடன், சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.

குற்றம் இழைத்தவர்கள் அனைவரும் சர்வதேச சட்டப்பிரிவுகளின் கீழ் கட்டாயம் தண்டனைக்குள்ளாக்கப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் சாத்தியமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வரக்கூடிய அளவுக்கு, அவர்களின் வாழ்க்கை கட்டியெழுப்பப்படவேண்டும்.

இறுதிப் போருக்கு முன்னரும் இறுதிப் போர் முடிவுற்ற பின்னரும் என்ன நடந்தது என்ற உண்மை மக்களுக்குத் தெரியும்.

உறவுகள் யாரால் கடத்தப்பட்டவர்கள் – யாரிடம் கையளிக்கப்பட்டார்கள் – யாரிடம் அவர்கள்சரணடைந்தார்கள் என்ற உண்மை மக்களுக்குத் தெரியும்.

எல்லாவற்றுக்கும் இராணுவமும், பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினருமே பொறுப்பாளிகள். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடித் கண்டறியும் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணையை ஒத்த அழைப்பாணை அனுப்பும் அதிகாரங்கள்வழங்கப்படவேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக் கண்டறியும் அலுவலகத்திலும் சர்வதேச பொறிமுறையின் கீழ் சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும்.

இலங்கை நீதிபதிகளை நம்புவதற்குத் தமிழர்கள் ஒரு போதும் தயாரில்லை. போர்க்காலத்தின் போது படையினரால் கொல்லப்பட்டவர்கள், போர் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின் கொல்லப்பட்டவர்கள், கொத்துக்குண்டுப் பயன்பாடு, விஷ ஊசிக் கொலைகள் மற்றும் இன அழிப்பு என்பன தொடர்பில் சர்வதேச நீதிபதிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

தடுப்பில் இருந்தவர்களுக்கு ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் ஊசி தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்துடன் கூடிய மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டுச் சோதனை இடம்பெறவேண்டும்.

புலிகளின் பயங்கரவாதம் பற்றி கதைத்தால், அரச பயங்கரவாதம் பற்றியும் கதைக்க முடியும். நல்லிணக்கம் என்ற பெயரில் இலங்கை தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைவதற்கு தமிழர்கள் தயாராகவில்லை.

நீதி நிலை நாட்டப்பட்டால் மாத்திரமே அப்படியான நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆழக்கூடிய கூட்டாட்சி உரிமையும் அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும்.

சர்வதேச சமூகத்தின் மூலமே இவை சாத்தியமாகும்” -என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment