கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?

மருத்துவர் போல் ஜோசேப் அவர்கள் – கடந்த சில மாதங்களாக மரியுவானா என்ற கஞ்சாவுக்கு தனது எதிர்ப்புக்குரலை காட்டி பத்திரிகைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் ஊடாக ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்து தொடுத்த வினாக்களுக்கு அவர் அளித்த பதில்கள்…

கேள்வி : போதைக்கு எதிரான போராட்டம்!  எப்படி ஆர்வம் வந்தது?

பதில் : 1979 என்று நினைக்கிறேன், ஒருமுறை நானும் எனது சில நண்பர்களும் சேர்ந்து ஊரின் மூலையில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கள்ளுத்தவறணைக்கு தீமூட்டி அழித்து எதிர்ப்பை காட்டினோம். அப்போது எனக்கு வயது பதினாறு. அதன் பின்பு பொலிஸ் விசாரணையிலிருந்தும் தப்பவில்லை. கல்லூரி முதல்வராக இருந்த ஒரு ஃபாதர் எங்களுக்கு மிக ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தினார்.

அதன் பின்பு ஊரில் என் வயது இளைஞர்களை ஒன்று திரட்டி புனித டொன்பொஸ்கோ கழகம் என்ற சமூகநல அமைப்பை உருவாக்கினேன். அதனூடாக ஆலயம் சார்ந்த ஆன்மீகப்பணி, நூல் நிலையம் கட்டியது, ஊர் துப்புரவு சிரமதானப் பணி, கலை கலாசார நிகழ்வுகள், மாணவர்களின் கல்வி முன்னேற்றப் பணிகள் என்று பல. ஏறக்குறைய முப்பது இளைஞர்களுடன் இணைந்து இந்த அமைப்பில் இருப்பவர்கள் எப்போதும் மது அருந்துவதில்லை என்ற உறுதிமொழி எடுத்தோம். இப்போதும் அந்த அமைப்பு ஊரில் செயற்படுகிறது. ஆனால் மது அருந்துகிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப்போது இருந்தவர்களில் பலர் புலம்பெயர்ந்து பல தேசங்களிலும் வாழ்கிறார்கள். சிலர் மாவீரர்களாகி விடுதலைக்கான விதைகளானார்கள். சிலர் புலம் தேசங்களில் பல பணிகளிலும் ஈடுபட்டு வந்தாலும், ஊரிலுள்ள உறவுகளுக்கு எப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அதன்பின்பு நான் தமிழகம் சென்று மருத்துவரான பின்பு அன்னை தெரsmokingசா போதை மறுவாழ்வு மையம் தொடங்கி பல ஆண்டுகளாக இது தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளை செய்து வந்தேன்.

பல நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் யாரோ பதிவேற்றம் செய்த வீடியோவில் ஒருவர் சில குரங்குகளுக்கு மதுவைக் கொடுத்து விட்டு அவை செய்யும் அட்டகாசங்களை வீடியோ பதிவு செய்து போட்டிருந்தார். நகைச்சுவையுடன் கூடியதாக வியப்பூட்டுவதாக இருந்தாலும் அது முற்றிலும் தவறானது; கண்டிக்கப்பட வேண்டியது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இங்கே Party Hall களில் Bar Open என்று சொன்ன சில மணிநேரத்தின் பின்பு நம்மவர் செய்யும் செயல்களை அது நினைவூட்டியது. ஆம்… இங்கும் இது தொடர்பான விழிப்புணர்வு அவசியம்.

கேள்வி: மதுவும், புகையும், போதையும் கனடாவில் சட்டபூர்வமானது தானே?

பதில் : ஆம். மது, போதை, புகைப்பழக்கமென்பது மனித வரலாற்றில் நாகரீகம் வளர்வதற்கு முந்திய காட்டுமிராண்டிகளாக நிர்வாணிகளாக இருந்த காலம் முதல் இருந்து வந்துள்ளது.

கனடாவில் மது விற்பனையும், குடித்தலும் சட்டத்திற்கு முரணானது அல்ல. கடைகளில் சிகரெட் போன்றவை காட்சிப்படுத்தாமல், விளம்பரங்கள் செய்யாமல் மறைத்து வைத்துத் தான் விற்பனை செய்யப்படுகிறது. சிகரெட்டை மூடி வைத்து சாராயத்தை திறந்து வைத்தும் விற்பனை செய்கிறார்கள். நம்ம ஊர்களில் சாராயக்கடையில் பணிசெய்வது கொb6a8f9d53771adfa1ff9fb765019751ccf7cca1e.jpg_1200x630ஞ்சம் தரம் தாழ்ந்தது. ஆனால், இங்கு Bar Man என்று பெருமையாகச் சொல்கிறார்கள். அங்கு கஞ்சா என்றால் மிகக் கேவலம். ஆனால், இங்கு விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதுவா நாகரீகம்?

இனி கனடாவில் “கஞ்சா வாங்கலயோ, கஞ்சா” என்று தெருத்தெருவாய் கூவிக்கூவி விற்பனை செய்யப் போகிறார்களாம் என்று நான் ஒருவரிடம் சொன்ன போது, அரசாங்கம் தானே விற்கச் சொல்லி அனுமதித்திருக்கிறார்கள். அதிலென்ன பிழை என்றார். அரசாங்கம் தானே வீடுகளுக்கு மின்சாரம் தருது. ஒருக்கா அதில தொட்டுப் பாருங்கோ என்றேன்.

ஆம். மேற்குலம், மேலத்தேய நாகரீகம், வளர்ந்த நாடுகள், கல்வி அறிவில் சிறந்த நாடுகள், பணக்கார நாடுகள் என்று பெருமை பேசும் வெறும் வங்கியின் கார்டுகளில் வாழும் இந்தக் கூட்டம் அடுத்த தலைமுறையை எவ்வாறு இந்த கஞ்சா பாதிக்கப் போகிறது என்பதை உணராமல் அமெரிக்காவை உதாரணம் காட்டி அங்கே கறுப்புச் சந்தையை ஒழித்து விட்டோம் என்றும், அதனால் இதன் விற்பனையால் அரசின் வருமானப் பெட்டகம் நிறைந்து கொழிக்கிறது என்றும், குற்றச் செயல்கள் குறைந்து விட்டது என்ற ஒரு போலி முன் மாதிரியை பின்பற்றத் தொடங்கி விட்டனர்.

கேள்வி: ஏன் இதற்கு பெரிதாக எதிர்ப்புக் குரல்கள் எழும்பவில்லை?

பதில்: ஆம். இதற்கு எதிராக, பெரிதாக எந்த எதிர்ப்புக்குரலோ, போராட்டங்களோ எதுவும் நடக்காதது வருந்தத்தக்கது. ஆனால் ஒரு சில ஊடகங்களில் சில மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் அவ்வப்போது குரல் கொடுத்தார்கள். ஊடகங்களில் அவ்வப்போது ஊறுகாய் போல ஏதோ குறுஞ்செய்திகள் பத்தோடு பதினொன்றாக தொட்டுச் செல்லப்படுகிறது. பல விடயங்களுக்காக போராடும் முற்போக்கர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இதற்கு எதிராக இன்னும் குரல் எழுப்பாமல் தங்கள் வார்த்தைகளை குரல்வளைப் பெட்டிக்குள்ளே அடைத்து ஆணிகளால் அறைந்து விட்டது போல மௌனம் காப்பது தான் இன்னும் விளங்கவில்லை. இதற்கு பின்னால் இருக்கும் மாஃபியாக்களால் ஆபத்து வந்து விடுமோ என்ற பயமாக இருக்கலாம்.

இனிமேல் மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம் கண்டிப்பாக குறையப் போகிறது. ஏனென்றால், பலர் கஞ்சாவை அடித்துவிட்டு சிரித்த முகத்தோடும், புரியாத புன்னகையோடும் வலம் வரப்போகிறார்கள், “புகையுங்கள், நன்றாகப் புகையுங்கள், இனி யாருக்கும் முதுமையே வராது! ஏனென்றால், இளமையிலேயே இறந்து விடுவதால்”.

மன அழுத்தம் வராதாம், பல வலிகளுக்கும், நோவுகளுக்கும் நிவாரணியாக அமையப் போகிறதாம், குற்றச்செயல்கள் குறைந்து விடுமாம், இப்படி கஞ்சாவைப் பற்றி மிகைப்படுத்திக் கதை கட்டப்படுகிறது.

கேள்வி: ஆம்! டாக்டர் அப்ப நல்லது தானே?

பதில்: ஆம். இவையெல்லாம் நடக்கத்தான் போகிறது, எப்படியென்றால் கஞ்சாவை அடித்ததும் மூளையிலுள்ள நரம்பு மண்டலங்களில் பாரிய மாற்றத்தை உண்டாக்கி, சுயமாக சிந்திக்கும் ஆற்றலைக் குறைத்து செயற்கையான ஒரு மனமகிழ்ச்சியை தருவது போன்ற உணர்வினை உண்டாக்கி விடுகிறது. அதனால் சில மணிநேரங்கள் தன்னை மறந்து, கவலைகளை மறந்து, தனது பிரச்சினைகளுக்கான காரணங்களை புரிந்துக் கொள்ளவிடாமல் கஞ்சாவிலுள்ள THC என்ற Delta – 9 – Tetrahydro Canna Binol என்ற வில்லன் மூளையை தனது கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து விடுவான். தன்னிச்சையான ஒரு பைத்தியச் சிரிப்பினை உருவாக்கும். இந்த THC இன் தாக்கம் நரம்புக்கலங்களுக்குள்ளே இருக்கும் வரை வலியினை உணர முடியாது. புற்றுநோய் போன்ற நோய் நிர்ணயம் செய்யப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக வலியைப் போக்கும் நிவாரணியாகப் பயன்படலாம்.

வழக்கமாக எடுத்துக் கொள்பவர்க்கு அவர்களுக்கு வரும் வயிற்றி வலிக்கோக, நெஞ்சு வலி மற்றும் தலைவலியின் போது ஏன் இந்த வலியுணர்வு வருகிறது, உள்ளே உள்ள நோயின் பரிணாமம் என்ன, எந்த அளவுக்கு நோய் முற்றியுள்ளது, மாரணடைப்புக்கான நெஞ்சுவலியா அல்லது கான்சருக்கான வயிற்று வலியா? போன்ற எல்லா அறிகுறிகளையும் இந்த THC மறைத்து விடுவதால் இதனால் உயிர் ஆபத்தான நிலைகளுக்கும் வாய்ப்புள்ளது.

ஏன் மதுபானம் கூட ஒரு அங்கீகரிக்கப்பட்ட போதை தரும் பொருள். விற்பனை செய்யப்படுகிறது தானே?

ஆமாம்! உலக சுகாதார ஸ்தாபனம் (W.H.O) வருடந்தோறும் வெளியிடும் அறிக்கைகள், ஆய்வுகளின் முடிவுகள் புலி வாலைப்பிடித்த கதையாக அச்சுறுத்துகின்றது. இவற்றை யார் படிக்கிறார்கள், ஏன் மருத்துவர்களே படிப்பதில்லை.

நீங்கள் நினைக்கலாம், ஏதோ இயற்கை அழிகளால், விமான விபத்துகளால், யுத்தங்களால் எங்கோ ஒரு இடத்தில் சிலர் இறந்துப் போனாலே சில நாட்கள் அது தலைப்புச் செய்தியாகிறது. இதோ இதைப் படியுங்க….

மதுபானத்தை அருந்துவதால் உண்டாகும் நோய்களின் பட்டியலில் ஈரல் அழற்சி, ஈரல் சுருக்கம் (Hepatitis and Liver Cirrhosis) மதுப் புற்றுநோய்கள், மது விபத்துகள் போன்றவற்றால் ஆண்டுதோறும் உலகில் 3.3 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. இதில் 25% இறப்புகள் 20 முதல் 40 வயதுடையோருக்குத் தான் நிகழ்கிறது என்பது அதிர்ச்சியான செய்தியல்லவா!

ஏன் கனடாவும் இதற்கு விதிவிலக்கல்ல. Chief Officer Public Health Canada – Alohol Consumption – Canada – 2015 – Report இன் கணிப்பின் படி கனடாவில் 35 மில்லியன் மக்கள் தொகையில் 22 மில்லியன் பேர் ஆண்டுதோறும் மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். இவர்களில் 4.4 மில்லியன் பேர் ஆண்டுதோறும் மதுபானத்தினால் உண்டாகும் பல பாதிப்புகளால் சிகிச்சை எடுக்கிறார்களாம்.

மருத்துவமனைகளின், மருத்துவர்களின், ஆராய்ச்சியாளர்களின் புள்ளி விபரங்களில் எல்லாம் விளக்கமாக விலாவாரியாக இருந்தாலும், மனிதனின் பலவீனத்தைப் பணமாக மாற்றி விரைவில் பிணமாக்கி இதன்மூலம் ஆளும் அரசுகளுக்கு வரும் வருமானத்தை மீண்டும் மருத்துவ சேவைக்கும், கல்விப்பணி மேம்பாடுகளுக்கும், பல நலத்திட்டங்களுக்கும் செலவிடும் சுழற்சி முறைதான் இன்னும் விளங்கவில்லை.

இதன் பின்னணியில் ஏதோ சதிவலை பின்னப்பட்டிருப்பதும் எல்லாமே ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறதோ என்று எண்ணத் தோறுவது மட்டுமல்ல, இவற்றை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் மதுபானங்கள் பெயரளவில் வெவ்வேறு பிராண்ட்களாக இருந்தாலும் பணம் மட்டும் போய்ச் சேருமிடம் ஒருசில குறிப்பிட்ட நபர்கள் என்பது உண்மையாகும். இதே போலத்தான் கஞ்சாவை விற்பனை செய்ய பல பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிற்பதும் கண்கூடு. ஏனென்றால் ஒரு புள்ளி விபரம் சொல்கிறது இதை மொத்த விற்பனைக்கு எடுக்கும் நபர் சில மாதங்களிலேயே நம் பில்கேட்ஸ்சை முந்தி விடுவாராம் என்றால் பாருங்களேன்.

கேள்வி: டாக்டர் அவர்களே! உங்கள் அனுபவத்தில் நமது தமிழ்ச் சமூகத்தில் இதன் பாதிப்புகள் எப்படி இருக்கப் போகிறது?

பதில்: சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு உண்மை நிகழ்வினை நகரிலுள்ள ஒரு Party Hall அருகிலுள்ள கடைக்கு செற் போது, அந்த மண்டபத்தின் அருகிலே சத்தமாக இருந்தது. சரி என்ன தான் நடக்கிறது என்று வேடிக்கைப் பார்க்க எனக்கும் ஆசை இருக்காதா?

பெரும்பாலும் 17, 18 வயதுடைய இளசுகள், ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விழா. பலருக்கு ஏற்கனவே போதை தலைக்குமேல், சில மாணவிகள் வாந்தியெடுத்து அரை மயக்கத்திலிருக்க, சிலர் முழுமயக்கத்தில் பரிணாமத்தை நினைவூட்டும் வகையில் தவழ்ந்து கொண்டிருந்தனர். மேலும் சில அசம்பாவிதங்கள் நடைபெற, சில நிமிடங்களில் பொலிசாரும் வந்து சேர்ந்தனர். சில மாணவர்களை பொலிசார் மண்டபத்தின் வாசலில் தடுத்து நிறுத்தி வெளியே பிடித்து வைத்திருந்தனர்.

கடுமையான குளிரின் தாக்கம் அவர்களில் யாருக்கும் தெரியவில்லை. எவருமே ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. ஏனென்றால் அந்த இரவுக் குளிரின் இதமான காற்றால் அப்பகுதியில் அவர்கள் விடும் கஞ்சாப்புகையின் வாசனையை உணர முடிந்தது. இதில் என்ன கொடுமையென்றால், அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் நம்ம தமிழ் இளசுகள்.

கேள்வி: கஞ்சா சட்டம் வரும் முன்னரே இப்படியென்றால், எமது வருங்கால தலைமுறையை எண்ணிப் பார்க்க பயமாக இருக்கிறது?

பதில்: கொஞ்சம் பொறுங்கோ! பல்கலைக்கழகங்களில் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே இந்த மரியுவானா பழக்கம் ஏற்பட்டு அதற்கு அடிமையாகி மீள முடியாத மனநோயாளிகளாய் நம்மவர் மத்தியில் இருக்கும் தமிழ் இளையோர் சில நூறுபேர் என்று சொன்னால் புருவத்தை உயர்த்தாதீர்கள். ஆம்.. கசப்பான உண்மையிது. கடந்த பத்தாண்டுகளாக எனது கனடிய புலம்பெயர் அனுபவத்தினால் கஞ்சாவால் பாதிக்கப்பட்டு செயற்கைச் சிரிப்புடன் தற்போது மனநோயாளிகளாக வாழுகின்ற நூற்றுக்கணக்கான இளையோரின் பெற்றோரின் இயற்கையான கண்ணீரைக் கண்டவன் என்ற முறையில்தான் இதைச் சொல்கிறேன்.

என்னிடமே இத்தனைபேரின் ஆதாரம் இருக்குமென்றால், மற்ற குடும்ப மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் போன்றவர்களிடம் எத்தனை பட்டியல் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

கேள்வி: ஒரு அனுபவத்தையாவது நம் வாசகர்களோடு பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

பதில்: பொதுவாக நோயாளிகளின் விபரங்களை வெளியிடுவது இல்லை. அது நல்லதுமல்ல. ஆனால் பெயர்களைக் குறிப்பிடாமல் ஒருவரின் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். ஏனென்றால், அவர்தான் நான் செய்யும் இந்த விழிப்புணர்வுக்கு தூண்டுதலாக இருந்தவர், எங்கு, எப்போ, எந்த மேடையிலும் என் அனுபவத்தை வந்து பகிர தயாராக இருக்கிறேன், அதன் மூலம் பல இளையோர் காப்பாற்றப்பட உதவியாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் தன் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நடந்த அனுபவத்தை கண்ணீரோடு பதிவு செய்தார்.

தான் இருபத்தாறு வயது வரை கஞ்சா அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி பின் அதையும் தாண்டி பல போதை மருந்துகள், போதை தரும் ஊசி மருந்துகள் என்று ஒரு நீண்டப்பட்டியலையும், பின்பு அதிலிருந்து மீண்டு வந்த கதையையும் சொன்னார். அதனால் தனது கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டு, நண்பர்களோடு பல தவறான பழக்கங்களில் ஈடுபட்டு, சில நோய்களுக்கும் ஆளாகி, அது மட்டுமல்ல, அவ்வப்போது குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்த கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டார்.

மேலும், போதையினால் வாகன விபத்துகளிலும் இருந்து தப்பவில்லை என்று தன்னுடலில் இருந்த தழும்புகளையும் காண்பித்தார். கனடாவில் பிறந்து இது எப்படி என்று கேட்டபோது, தமிழின் மீதான, விடுதலையின் மீதான அவருக்குள்ளேயிருந்த ஆர்வத்தை சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

தற்போது ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாய் தான்படும் வேதனைகளையும், தற்போது அவருக்கு இருக்கும் குணமாக்க முடியாத ஒரு நோயையும் பற்றிச் சொன்ன போது ஒரு கணம் நானே அதிர்ந்து போனேன்.

இத்தனை கதைகளையும் தாண்டி அவரை தற்போது மனிதனாய் மாற்றிய அவரின் பெண் தோழியும் அவர் அருகில் அமர்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து ஒருதுளி கண்ணீர் கூட வரவில்லை. ஆம். அவளுக்குள்ளே அவ்வளவு தன்னம்பிக்கையும், தைரியமும் வேர் விட்டிருந்ததை கண்டேன்.

கேள்வி: நீங்கள் சொல்வதெல்லாம் சரி, ஆனால் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதால் கறுப்புச்சந்தை, கள்ளச்சந்தையெல்லாம் ஒழிந்து விம் என்று தானே அரசு சொல்கிறது?

பதில்: ஆம்! நீங்கள் சொல்வது ஒருபுறம் சரியாகத் தோன்றினாலும் இதன் இன்னொரு புறமும், முகமும் எதிர்விளைவுகளைத் தான் உண்டாக்கப் போகிறது. அது எப்படியென்றால், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் கடத்தல் மாஃபியாக்களின் அட்டகாசங்கள் குறைந்துவிடும், கறுப்புச்சந்தை ஒழிந்து நல்ல தரமான கஞ்சா கிடைக்க வழி செய்யப்படும். தீவிரவாதிகளுக்கு செல்லும் பணம் தடுக்கப்படும் என்று திட்டமிட்டு அரச இயந்திரங்களினால் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

அமெரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே இது சட்டப்பூர்வமாக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. அதன் பின்பு மாஃபியாக்களின் வருமானம் குறைந்து இப்போது அரசின் வருமானப் பெட்டகம் அளவுக்கு மிஞ்சி நிறைந்து வழிகிறதாம். உதாரணமாக கொலராடே நகரத்தில் மட்டும் 2015இல் சட்டபூர்வ கஞ்சா வியாபாரத்தால் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. கலிபோர்னியாவில் மட்டும் வருடந்தோறும் சுமார் 14 பில்லியன் டொலர் லாபம் கிடைக்கிறதாம்.

அடுத்தவன் தலையில் மிளகாய் அரைத்து, யார் குடியையும் கெடுத்தாவது தங்களின் கஜானா என்ற அரசின் வருமானப் பெட்டகம் நிரம்பினால் போதும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.

பெரிய மாஃபியாக்கள் செய்த வேலையை இனி அரசும், முதலாளிகளும், நிறுவனங்களும் சட்டபூர்வமாகச் செய்யப் போகிறார்கள். ரொம்பவும் படுகேவலமாக இல்லை? இனி முன்பிருந்ததை விட சில்லறை கள்ளச்சந்தை வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கப்போகிறது என்கிறார்கள் குற்றவியல் நிபுணர்கள். அமெரிக்காவில் இந்த சில்லறைக் கள்ளச் சந்தையை ஒழிக்கவே முடியவில்லையாம்.

அதென்னவென்றால், 19 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் நேரடியாகவும், ஆன்லைன் (Online) மூலமாகவும் வாங்க முடியும். அப்படி வாங்கி 19 வயதிற்கு குறைந்த வளரிளம் (Teenage) பருவத்தினருக்கு விற்பனை செய்வது இலகுவாகி விடும். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது நம் இளைய தலைமுறையே என்பது மட்டும் உறுதி.

கேள்வி: வீட்டிலேயே வளர்க்கலாம் என்று அனுமதிக்கப்படும் போது எப்படியும் கள்ளச்சந்தையும் ஒழிந்துவிடும் தானே?!

பதில்: நம்ம நடிகர் வடிவேல் பாணியில் சொன்னா, இவனுக அடிச்சாலும் ரொம்ப நல்லவனுங்கப்பா, வச்சு வச்சு ரொம்ப நேரமாக அடிச்சாங்க…. ஆனாலும், இடையில (Gap) கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு அடிச்சாங்கப்பா…. ரொம்ப நல்லவனுக மாதிரி தெரியுது! என்பது போல……

கஞ்சா சட்டம் Bill C-45 பல விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும் தனிநபர் ஒருவர் 30 கிராம் காய்ந்த கஞ்சாவை தன்னுடன் எப்போதுமே வைத்துக் கொள்ளலாம். இன்னும் அதிகமாக வீட்டில் வைத்திருக்கலாம். மேலும், தனது வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு நான்கு கஞ்சா செடிகளை வளர்க்கும் தோட்டமும் அமைத்துக் கொள்ளலாம் என்கிறது சட்டம்.

இது வீட்டிலுள்ள சிறுவர்களுக்கும், வளரிளம் பருவத்தாருக்கும் ஒரு பாதுகாப்பற்ற செயலாகும். அது மட்டுமல்ல. பொது இடங்களில் புகைக்க அனுமதியில்லை. தங்களின் வீடுகளிலே புகைக்கலாம். இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. ஏனென்றால், இதன் மணத்தை நுகரும் சிறுவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மூளையில் ஒருவிதமான இராசயன மாற்றங்களை உண்டாக்கும். இதனால் தம்மை அறியாமலேயே விரைவில் அருகிலிருப்போரும் அதை புகைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தன்னிச்சையாக உருவாக்கி விடும் என்பது நூறுவீதம் நிரூபணமான அதிர்ச்சியான விடயமாகும்.

அது மட்டுமல்ல, தற்போது 680 AM வானொலி உட்பட பல ஊடகங்களிலும் அடிக்கடி சொல்லப்படும் விடயம், ஒருவர் புகைப்பதால் அருகிலிருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் கருவிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் உடல் ஊனமாகலாம் என்றும் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்படுகிறது.

…..இன்னும் தொடரும்.

aug 22,2018

Dr .போல் ஜோசேப்643953_4819359007799_1259715935_n


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *