கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு கட்டுமான நிறுவன அதிகாரிகள் 6 பேர் கைது

ekuruvi-aiya8-X3

india988கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இது தொடர்பாக கட்டுமான நிறுவன அதிகாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புர்ரா பஜார் பகுதியில் 2009-ம் ஆண்டு முதல் 2.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது.

இங்கு, ரவீந்திர சாரணி-விவேகானந்தா ரோடு இடையே சுமார் 200 அடி தூரத்துக்கு பாலத்தின் ஒருபகுதி நேற்று முன்தினம் அப்படியே இடிந்து விழுந்தது. இதனால் அந்த பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள், பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர். இதன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியாயினர். 90-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும் முயற்சியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை, நகர போலீசாரின் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அவர்கள் மேலும் 5 உடல்களை மீட்டனர். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. அதே நேரம் இடிந்து விழுந்த மேம்பால இணைப்பு பகுதிகள், இரும்புத் தூண்கள், கான்கிரீட்டுகள் ஆகியவற்றை அகற்றும் பணி படிப்படியாக நடந்து வருகிறது.

பாலம் இடிந்து விழுந்த பகுதியில் பாலத்தையொட்டி பழைய வீடுகள், கட்டிடங்கள் அதிகம் இருப்பதால் அவற்றின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை அகற்றும் பணி சற்று மெதுவாக நடந்து வருகிறது.

பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக பாலத்தை கட்டி வரும் ஐதராபாத்தைச் சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். கட்டுமான நிறுவனத்தின் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்ட கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் கூறுகையில், ‘‘இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனத்தின் மீது கொல்கத்தா கிளை அலுவலகத்தை போலீசார் சீல் வைத்து மூடினர். இதுபற்றி அந்த நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கொல்கத்தாவில் இருந்து 4 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை நேற்று ஐதராபாத் வந்தனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Share This Post

Post Comment