காவல்துறையின் தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர!

ekuruvi-aiya8-X3

pujithaயாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையில் காவல்துறையினர் தவறிழைத்துள்ளதாக காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தாது குறைந்தளவு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையை காவல்துறையினர் கையாண்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவம் இடம்பெற்றவுடனும் அதனை அறிக்கையிடாது இழுத்தடித்தமை காவல்துறையிரின் பெருந் தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காக் காவல்துறையினரின் 150ஆண்டு நிறைவுதினம் இன்று அனுராதபுரத்தில் நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் வினவியமைக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

‘மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளக்கூடிய அளவிற்கு அவசியம் ஏற்பட்டதா என்பது குழப்பமான விடயமாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தமக்கான ஒழுக்க விதிமுறைகளை மீறியுள்ளமை தெளிவாக புரிகின்றது. தமது பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரை சென்று கல்விகற்பதற்கு பெற்றோர் செய்கின்ற தியாகம், கஷ்டங்கள் மற்றும் பெறுமதியான இரண்டு உயிர்கள் பிரிவு என்பவற்றை நினைத்துப்பார்க்கின்ற போது கவலை ஏற்படுகிறது. இந்த சம்பவத்தை கேட்டபோதே விரைந்து நடவடிக்கை மேற்கொண்டேன்’ எனத் தெரிவித்தார்.

Share This Post

Post Comment