கருணாநிதியுடன் வைகோ ‘திடீர்’ சந்திப்பு

ekuruvi-aiya8-X3

Vaiko-sudden-meeting-with-Karunanidhiதி.மு.க. தலைவர் கருணாநிதியை, வைகோ நேற்று சந்தித்தார். இது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு என்று வைகோ பேட்டி அளித்தார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேற்று மாலை 7 மணியளவில் சென்றார். அவரை வீட்டின் வாசலுக்கு வந்து மு.க.ஸ்டாலின் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். வீட்டுக்குள் வைகோவும், மு.க.ஸ்டாலினும் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடினர்.

அதனைத்தொடர்ந்து வைகோவும், மு.க.ஸ்டாலினும் இரவு 8 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்கு ஒரே காரில் சென்றனர். வைகோவை பார்த்த உடன் கருணாநிதி புன்முறுவலுடன் சிரித்தார்.

‘இவர் யாரென்று தெரிகிறதா?’, என்று அருகில் உள்ளவர்கள் கருணாநிதியிடம் கேட்டனர். ‘தெரியும், அது வைகோ’, என்று கருணாநிதி சைகையால் உணர்த்தினார்.

இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நீடித்தது. பின்னர் கோபாலபுரம் இல்லத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

என்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய ஆருயிர் அண்ணன் கருணாநிதியை பார்த்தேன். அவர் நலமாக இருக்கிறார். ‘நான் வந்திருப்பது தெரிகிறதா?’, என்று கேட்டதற்கு, புன்னகை பூத்தவாறு ‘வைகோ’ என்று என்னை சுட்டிக்காட்டினார். அவரிடம் ‘தி.மு.க.வுக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும், உறுதியாகவும் செயல்படுவது என்று ம.தி.மு.க. ஒரு மனதாக முடிவு செய்துள்ளது’ என்று கூறினேன்.

அதற்கு அவர் மகிழ்ச்சியோடு தலையசைத்து ஏற்றுக்கொண்டார். அவருடன் நடந்த இந்த சந்திப்பு உணர்ச்சிப்பூர்வமாகவும், மனதை நெகிழச்செய்யும் விதமாகவும் இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment