கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

ekuruvi-aiya8-X3

karunanithiமூச்சு விடுவதில் பிரச்னை காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை (டிச. 15) இரவு 11 மணி அளவில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

தொண்டை-நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக, அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த் தொற்றுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டு அவர் நலமாக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.அரவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து, நீர்ச் சத்து குறைபாடு காரணமாக, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியன்று காவேரி மருத்துவமனையில் 92 வயதாகும் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஒவ்வாமையால் ஒரு மாதம் அவர் பாதிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். அவரது வீட்டுக்கு டாக்டர்கள் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) அதிகாலை கருணாநிதியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி (புதன்கிழமை) இரவு வீடு திரும்பினார். எனினும் வீட்டில் முழுமையாக அவர் ஓய்வு எடுப்பது அவசியம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். மேலும் கருணாநிதி முழுமையான குணம் அடைவதற்குத் தேவையான மருத்துவம், செவிலியர் பராமரிப்புகளை காவேரி மருத்துவமனை பணியாளர்கள் அவரது கோபாலபுரம் வீட்டிலேயே மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தொண்டை-நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Share This Post

Post Comment