“கபாலி” ஒரு ஈழத்தமிழனின் பார்வையில்…

7/30/2016

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாலேயே மனித வரலாறு முன்னகர்த்தப்பட்டுவருகிறது. அதுதான் வரலாற்றுக்கு அதிக அழகும் கம்பீரமும் சேர்த்திருக்கிறது. இந்த நூற்றாண்டில், உழைக்கும் மக்களை ஒரு கோமாநிலையில் வைத்து அந்த வரலாற்று வடிவை மாற்ற முற்படும் வேலைதான் தீவிரமாக நடக்கிறது.

விரைவாக அசுர பலம்பெற்று வரும் முதலாலித்துவத்திற்கும் பலம் குன்றிவரும் சாமாணிய மக்களுக்குமான இறுதி யுத்த காலமே இந்த நூற்றாண்டு எனலாம்.

அந்தவகையில் இந்த நூற்றாண்டில் வருகின்ற பாதிக்கப்படும் மக்கள் சார்ந்த படைப்புகள் அதிக முக்கியத்துவத்துடன் நோக்கப்படவேண்டியவை.

13640801_877351089037214_5840957575170327769_oஇதில் படைப்பாளிகள் குறிப்பாக இயக்குனர்களின் பங்கு முக்கியமானது. அதேநேரம் சவால்கள் நிறைந்தது. அதில் சமரசம் இல்லாது பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளைச் சொல்வதும் பொருளாதார ரீதியாக பெற்றிபெறுவதும் முக்கியமானவை.

இதில் சமரசம் இல்லாமல் படைப்பை உருவாக்குவதும் பொருளாதார ரீதியாக வெற்றிபெறுவதும் ஒன்றுக்கொன்று நேர்எதிரானவை என்பதே யதார்த்தம். இதை எமது படைப்பாளிகள் நிறையவே உணர்ந்தும் அனுபவித்தும் உள்ளார்கள். அந்த பட்டியல் மிக நீளமானது.

இதில் புதிதாக சேர்க்கப்படவேண்டியவர்தான் இயக்குனர் ரஞ்சித்.

————————————————–

படைப்புகளுக்கு மூலகாரணம் படைப்பாளிகளைப் பாதிக்கும் விடயங்கள்தான்.

உதாரணமாக, தூத்துக்குடி மண்ணின் மைந்தனான முதியவர் ஒருவர் கொழுத்தும் வெய்யிலில் நசித்த “பிளாஸ்டிக்” போத்தலைக் காலுக்கு செருப்பாகக் கட்டிக்கொண்டு நடந்து செல்கிறார். இன்று தூத்துக்குடியை ஆள்பவர்கள் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் செல்ல ஆண்டபரம்பரை நடந்துசெல்லும் கோலத்தைப் பார்க்கும் போது படைப்பாளிக்குள் எழுந்த கேள்வியும் மனக்கனமுமே 2013 ஆம் ஆண்டில் சாகித்திய அக்கடமி விருதுபெற்ற “கொற்கை” என்னும் நாவல்.

அது போல்தான் மலேசியாவின் தமிழர்கள் வாழும் ஒரு மாநிலத்தில் இன்றும் சிறுகுடிசையில் வாழும் ஒரு முதியவருக்கு நூறுகிலோமீற்றர்கள் அளவு தூரத்தில் இருக்கும் ஊர்கள் கூட தெரியாது என்பதை கேட்டபோது வந்த பாதிப்புதான் கபாலி உருவாகக் காரணமான பொறி.

ஆனால் இவர் நாவலாசிரியர் அல்ல. ஒரு இயக்குனர். படைப்பாக்கத்தில் சமரசமும் பொருளாதார இலாபமும் காட்டவேண்டிய சூழ்நிலைக்குள் நிற்பவர்.

இருந்தாலும் முன்னையவர்களைவிட ஒரு புது முயற்சியை செய்திருக்கிறார் அல்லது பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். அதாவது சமரசம் இல்லாப் படைப்பையும் பொருளாதார வெற்றியையும் ஒரு புள்ளிக்கு கொண்டுவர முயற்சித்திருக்கிறார். அதுதான் கபாலி

இந்த முயற்சி சாத்தியமா? இல்லையா? வெற்றியா? தோல்வியா? சரியா? பிழையா? என்பதைவிட அடக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை ஒரு “மாஸ்கீரோ” வை வைத்து பேசவைப்பதில் கபாலி இயக்குனர் வென்றிருக்கிறாரா? இல்லையா? என்று பார்ப்பதுதான் முக்கியமானது.

சம்பந்தப்படும் நாடுகளுக்கு நோகாமலும் ஒரு ஆவணப்பட சாயலில்போய் பொருளாதார தோல்வி அடையாமலும் ஒரு “மாஸ்கீரோ” வுக்குரிய பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவும் என பல நெளிவு சுழிவுகளுக்குள் நுழைந்து வருகிறது படம்.

ஆனாலும் ரஜனி என்ற பிரமாண்டத்தை வைத்து ஒரு தீப்பொறியைக் கக்கியிருக்கிறது கபாலி. அது சூழலில் உள்ள காற்று அருகிருக்கும் பொருட்கள் மனித இயந்திரம் என பல காரணிகளால் தொடர்ந்து எரியலாம் அல்லது அணைந்தும் போகலாம்.

ஆனால் கபாலி வரவுக்குப் பிறகு, கபாலியின் நெருப்புடா! நெருங்கடா பாப்பம்! “பஞ்ச்” வசனங்களைத்தாண்டி, பல தலைமுறைகளுக்கு முன் மலேசியா சென்ற தமிழ் மக்கள் நிலை பற்றி தேடவும் அறியவும் பேசவும் விவாதிக்கவும் தூண்டும்.

பொழுது போக்குக்காக படத்தை அனுபவித்துப்பார்த்தவர்கள் கூட பின்னொரு அமைதியான அசைமீட்டும் பொழுதில் மலேசியத்தமிழர்களின் வரலாறு பற்றி சிந்திக்கத்தூண்டும்.

பலமே வாழ்வை நிர்ணயிக்கும் உலகில் தமிழ்மக்களுக்கென்று ஒரு தேசம் உலக வரைபடத்தில் இல்லாததுதான் எல்லாச் சிதைத்தழிப்பிற்கும் அடிப்படைக்காரணம் என்ற விடயம்கூட மூளையைக்குடையலாம்.

தமிழ்நாட்டிலிருந்து பல தலைமுறைகளுக்கு முன் “கூலி”யாகச் சென்ற மக்கள் பல்வேறு தேசங்களில் வாழ்கிறார்கள். அவர்கள் நிலையும் எதிர்காலமும் பற்றிப்பேசும் உரிமையும் கடமையும் தமிழகத்திற்கும் தமிழ்சினிமாவிற்கும் உண்டா? இல்லையா? என்ற வாதம் வலுக்கும்.

இந்த அடிப்படையில் தமிழ் சினிமாவின் பார்வைபடவேண்டிவர்கள் அவர்களின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள். குறிப்பாக ஈழத்தீவின் மலையகத்தில் வாழும் தமிழர்கள் மிகமுக்கியமானவர்கள்.

அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அவர்கள் ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த காரணம் அவர்களின் இன்றைய நிலை எதிர்காலம் என நிறையவிடயங்கள் உள்ளன.

இயக்குனர் ரஞ்சித்திற்கு பொறிதட்டிய மலேசிய முதியவர்போல் வெளித்தெரிபவர்களைத்தாண்டி இன்றும் அடிமைப்படுத்தலுக்கும் கொடுமைப்படுத்தலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகியிருக்கும் மலையகத்தமிழர்களின் கதைகள் ஏராளம் உண்டு.
———————————————–
உதாரணமாக ஒரு உண்மைக் கதை. 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழப் போராட்டத்திற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படுகிறார் ஒரு மலையக இளைஞன். ஆண்குறிக்குள் கம்பி இறுக்குவது குதத்தில் போத்தலைச் செருகி உடைப்பது என மிக மிக கொடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி சிறையில் அடைத்துவிடுகிறார்கள்.

அவர் மூன்று பெண்குழந்தைகளுக்கு தகப்பன். அவருடைய இளம் மனைவி சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்கும் அலைவதிலும் தோட்டத்தில் வேலை செய்வதிலுமே தன் இளமைக்காலத்தை இழந்துவிட்டார்.

சிறையிலுள்ள கணவரோ சிறையில் உள்ள ஏனையவர்களுக்கு உடம்புக்கு “மசாச்” செய்துதான் குளிப்பதற்கான ஒரு துண்டு சவர்க்காரத்தைகூட பெறும் நிலையில்.

இன்றுவரை அவர்கள் நேரில் சந்தித்துப்பேசுவதற்கு கூட அனுமதியில்லை. அவர் சிறைக்குச் சென்று சில நாட்களில்தான் கடைசி மகள் பிறந்தாள். இப்ப அவளுக்கு எட்டு வயசாகிட்டுது. மகளை ஒருதடவை தொட்டுப்பார்க்கிறதுக்காகவாவது அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன் என்கிறார் அந்தப் பெண்.

இப்படியான மனிதர்களை தினமும் நன்கு மென்று தின்றுகொண்டுதான் ஒப்பனை மனிதர்களும் வெளிவேச அரசியல்வாதிகளும் நல்லிணக்கம் பேசிப் பல் இழித்துக்கொண்டு நம்முன் உலவுகிறார்கள்.

—————————————————-

சினிமா என்பது பொழுதுபோக்கென்று கூப்பிட்டு நல்லதும் கெட்டதும் என பாடம் கற்பித்து அனுப்பும் கவர்ச்சிமிகு கலைக்கூடம். வரலாறு நெடுகிலும் பொழுது போக்கையும் தாண்டி பார்வையாளனை சமூகத்துக்கு உழைப்பவனாக மாற்றித்தந்திருக்கிறது சினிமா.

ஒரு சமூக அக்கறையோடு செயற்படுபவன் எப்படி குற்றவாளியாக்கப்படுகிறான் என்றும் இறுதியில் சமூகத்துக்காக உண்மையாக உழைக்கும் தலைவனை துப்பாக்கிக்குண்டு எப்படியும் குறிவைத்தே தீரும் என்று ரஜனியை வைத்து சொல்வதற்கு பெரிய தைரியம் வேண்டும். அதுதான் ரஞ்சித்திற்குள் இருக்கும் படைப்பாளியின் வெற்றியும் கூட.

மற்றபடி காபாலி என்பது ரஜனி என்ற பிரமாண்டத்தின் வெற்றியாகவோ ரஞ்சித் என்ற இயக்குனரின் வெற்றியாகவோ தோல்வியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். தமிழன் வாழும் தேசமெங்கும் இருக்கும் மறைக்கப்படும் வரலாற்றை கிளறிஎடுத்துக்கொண்டு இன்னும் கபாலிகள் வரட்டும். மகிழ்ச்சி.

குறிப்பு: இக்கட்டுரை கபாலி திரைப்படம் வெளியாகிய அன்று (21.07.2016) எழுதப்பட்டது. அதன்பின் ஒருவாரமாக கபாலி சாதியப் பிரச்சனைக்குரிய படமாக சித்தரிக்கப்படுவது துரதிஸ்டவசமானது அல்லது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவது. இன அடையாளத்துடன் தம்மைத் தேடும் பயணத்தில் இருந்து அம்மக்களை சாதிய அடையாளத்திற்குள் பிரித்தாளும் காலம் காலமாக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியில் இருந்து தமிழுழகம் விழித்துக்கொள்ளட்டும்.

இந்திரன் ரவீந்திரன்
31.07.2016


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *