காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒருபோதும் தீர்வினைப் பெற்றுத் தராது

ekuruvi-aiya8-X3

praba_ganesanபல வருடங்களுக்கு முன் காணாமல் போனவர்களின் பற்றிய விபரங்களை அறிவதற்கான அல்லது கண்டுபிடிப்பதற்கான அலுவலகங்கள் அமைப்பது பிரச்சினையை திசை திருப்புவதற்கு சமமானதாகும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் ஊடாக காணாமல் போன உறவினர்களுக்கு எவ்விதமான தீர்வினையும் பெற்றுக் கொடுக்க முடியாது எனவும் முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பு பல உறுதிமொழிகளை தேர்தல் காலத்திலே வழங்கினார்கள். குறிப்பாக இவ் அரசாங்கத்தை உருவாக்க முன் வந்த தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளான சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றம் காணாமல் போனவர்களை கண்டறிவது, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தினரிடமிருந்து நிலங்களை உடனடியாக மீட்டெடுத்தல், இராணுவ பிரசன்னத்தை வடகிழக்கிலிருந்து குறைத்தெடுத்தல் போன்ற பல விடயங்களை தமிழ மக்கள் முன் வைத்து தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் இதுவரை காலம் இவற்றில் ஒன்றை கூட அதுவரை காலமும் இவர்கள் பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இன்று இன ஐக்கியத்தை வலியுறுத்தும் வேலைத்திட்டத்தில் முனைந்துள்ளனர். தமது உறுதிமொழிகளை ஏற்று வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாத காரணத்தினாலேயே கடந்த உள்ளுராட்சிசபை தேர்தலிலே தமது வாக்கு வங்கினை இழந்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து அரசியல் இலாபம் ரூடவ்ட்டிக் கொண்டவர்கள் காணாமல் போனவர்கள் பற்றிய அக்கறை இன்றி நடமாடி வருகின்றனர். காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடாத்தும் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. அதே நேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனதாக யாரும் இல்லை எனவும் அவர்கள் இறந்து போயுள்ளனர் அல்லது வெளிநாட்டுக்கு தஞ்சம் கேட்டு சென்றிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக தமிழ் தலைமைகள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்களை அமைப்பதில் கூட இவர்கள் தலையிடுவதில்லை. இவ் அலுவலகத்தின் ஊடாக காணாமல் போன உறவினர்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை. இவர்களது தொடர் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நாடகமாகவே நான் இதனை நோக்குகின்றேன். காணாமல் போன உறவினர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு இவர்களது வாக்குகளை வடக்கிலும் தெற்கிலும் பெற்றுக் கொண்டவர்கள் முன் வர வேண்டும். இல்லாவிட்டால் இனி எதிர்வரும் தேர்தல்களில் முழுமையான ஒரு பாடத்தினை மக்கள் வழங்குவார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment