நமது கலாச்சாரத்தில் அறுபதாம் கல்யாணம் எதற்காக?

Facebook Cover V02

Shastipoorthi-Celebrations-aruvatham-kalyanam-in-cultureநம் கலாச்சாரத்தில் ஒரு குழந்தை பிறந்து 12 வயது ஆகும் வரை, அந்த பருவத்தை, பாலாவஸ்தா என்பார்கள். அப்பருவத்தில், குழந்தை செய்வதெல்லாம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் மட்டுமே. 12 வயது நிறைவுற்றதும் அவனுக்கு பிரம்மோபதேசமும் அதன்பின் கல்வி கற்பித்தலும் நடக்கும். பிரம்ம உபதேசம் என்பது இது எனது, இது எனதில்லை என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்திலும் பிரம்மனைக் காண்பது.

இந்தத் தன்மை இல்லாத மனிதருக்கு கல்வி கற்பிக்கக் கூடாது. ஏனெனில், கல்வி என்பது ஒரு பெரும் சக்தி. அவர்-இவர், எனது-எனதில்லை, வேண்டும்-வேண்டாம் என்று பிரித்துப் பார்க்கும் மனிதருக்கு சக்தியைக் கொடுத்துவிட்டால் அவரால் பிரச்சனைகள்தான் ஏற்படும். எனவே, 12 வயதில் பிரம்மோபதேசம் கொடுத்து அதன்பின் அடுத்த 12 வருடங்கள் அதாவது 24 வயது வரை கல்வி கொடுத்தார்கள்.

அவன் தன் வீட்டில் இருக்கக்கூடாது.ஒரு குருவுடன் தங்கி, கற்றுக் கொள்வான். அவனுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு போதிக்கப்படும். இந்த நிலையை பிரம்மச்சரியம் என்றார்கள். 12 வருடங்கள் குருவிடம் தேவையான கல்வி கற்று தன் 24வது வயதில் தேவையான அறிவு பெற்றவராக இருப்பார். இப்போது அவருக்கு ஆர்வம் இருக்கும்பட்சத்தில் பிரம்மச்சரிய நிலையிலிருந்து துறவுநிலைக்கு நேரடியாகச் செல்லலாம். அல்லது திருமணம் செய்துகொண்டு அடுத்த 24 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை வாழலாம்.

அந்த 24 வருட தாம்பத்திய வாழ்க்கைக்கு பிறகு, அதாவது அவருடைய 48வது வயதில், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பின், கணவன், மனைவி இருவரும் பிரிந்து சன்னியாசம் எடுப்பார்கள். ஓரிடத்திற்கு சென்று 12 வருடம் ஆன்மீக சாதனை செய்து தன்னை உணர்ந்த நிலையில் திரும்பி வருவார்கள். 12 வருடங்கள் தனித்தனியாக இருந்த கணவனும் மனைவியும் இப்போது அவருடைய 60வது வயதில் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

அவர்களுக்கு முதல்முறை திருமணம் நடந்தபோது உடல் ஆர்வம் முக்கியமாக இருந்தது. ஆனால், இப்போது கணவனுடைய 60வது வயதில், அவர்கள் இருவரும் உடல் ஆர்வத்தினால் ஒன்று சேரவில்லை. வேறு ஒரு ஆழமான தன்மையை உணர்ந்த நிலையில் ஒன்று சேர்வார்கள். காட்டிற்குச் சென்று மீதி வாழ்க்கையை வேறொரு தன்மையில் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள்.

இந்த வாழ்க்கையைத்தான் வானப்பிரஸ்தா என்றனர். வானப்பிரஸ்தா செல்லும் முன், அவர்கள் 12 வருடங்கள் பிரிந்தபின் கூடுவதால், அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து அனுப்பும் வழக்கம் நமது கலாச்சாரத்தில் இருந்தது. ஆனால், இப்போது வீட்டில் சேர்ந்து வாழ்ந்து கொண்டே 60வது வயதில் மீண்டும் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். இது வெறும் சடங்காகத்தான் இருக்கிறது.

Share This Post

Post Comment