கல்வி அறக்கட்டளை ? கல்வி கனெக்சன் ? யார் பொறுப்பு

Facebook Cover V02
கல்வி அறக்கட்டளை ?  கல்வி கனெக்சன் ? யார் பொறுப்பு
‘ஓநாய்க்கு கருணை காட்டுவோர் மறைமுகமாக
ஆட்டுக்குட்டிக்கு தீங்கு செய்கிறார்கள்’. என்று அரேபியப் பழமொழி ஒன்று உள்ளது.
கனடாவில் நடைபெறும் சில நிகழ்வுகளையும் அதன் பின்னால் உள்ள கசப்பான உண்மைகளையும் பார்க்கும் போது இந்த பழமொழி நினைவிற்கு வந்த தொலைகின்றது.
யுத்தத்தின் பின்னரான சூழலில் தாயக மாணவர்களின் உயர் கல்வி செயல்பாடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி அறக்கட்டளை அமைப்பிற்கு கனடாவில் இருந்து உதவிகளை கடந்த 6 வருடங்களாக  வழங்கி வந்த கல்வி கனெக்சன் என்ற அமைப்பு  நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதான தகவல்  பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி விட்டுள்ளது.
கல்வி அறக்கட்டளை மூலம் பொருளாதார உதவிகளை பெற்று தமது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வரும் 185 மாணவர்களின் கல்வி எதிர் காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த மாத இறுதியில் கனடாவிற்கு வருகை தந்திருந்த கல்வி அறக்கட்டளை அமைப்பின் தலைவர் மருத்துவ கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன.
2011ம் ஆண்டு மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் கனடாவிற்கு வருகை தந்த போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களும் குணா நாகலிங்கம் அவர்களும் கல்வி அறக்கட்டளைக்கான உதவிகளை வழங்குவதற்கான கட்டமைப்பை கனடாவில் உருவாக்குவது குறித்து ஆராய்ந்துள்ளதாகவும்  இதன் அடிப்படையில் கல்வி கனெக்சன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதகவும் இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக கல்வி கனெக்சன் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதி சேர் நிகழ்வின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி உதவி மூலம் பொருளாதார உதவிகளை கடனாக பெற்றுக் கொண்ட மாணவர்களில் 280 பேர் தமது பல்கலைக்கழக கல்வியினை நிறைவு செய்துள்ளதாகவும் அவர்களில் 14 பேர் தாம் பெற்றுக் கொண்ட கடனை முற்றாக செலுத்தி முடித்துள்ளதாகவும்     57 பேர் தமது கடனை மீளச் செலுத்தி வருவதாகவும் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஏனையவர்கள் வேலை வாய்பினை பெற்றுக் கொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் ஏனைய பொருளாதார சுமைகள் காரணமாக இதுவரை தமது கடனை மீளச் செலுத்தவில்லை என்றும் எனினும் அவர்கள் சில மாத காலத்தின் பின்னர் தமது கடனை மீளச் செலுத்துவதற்கு தயாரா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தற்போதுள்ள வாழ்க்கைச் சூழலில் 100 வீதம் கடனை மீளப்பெறுவது என்பது சாத்தியமற்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் அந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தியிருந்தார்.
பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு  செய்த அனைவரும் உடனடியாக நிரந்தர வேலைவாப்பினை பெற்றுக் கொள் முடியாது என்ற யதார்த்தமும் அவ்வாறே வேலைவாய்ப்பினை பெற்றுக் கொண்ட அனைவரும் முதல் மாத சம்பளத்தில் இருந்து கடனை திருப்பிச் செலுத்தும் அளவிற்கு வசதிபடைத்த நிலையில் இல்லை என்ற உண்மையினையும் நாம் உணர வேண்டும் என்பதே அவரின் கருத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது.
கல்வி கனெக்சன் அமைப்பு 5 வருட காலத்திற்கு கல்வி அறக்கட்டளைக்கு உதவிகளை வழங்குவதற்கு இணங்கியதாகவும் அதனை தொடர்ந்து தாம் வழங்கிய நிதியினை பயன்படுத்தி அது ஏனைய மாணவர்களுக்கு கடன் உதவிகளை வழங்க வேண்டும் என்பதே தமக்கும் கல்வி அறக்கட்டளை அமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு என்றும் கல்வி கனெக்சன் அமைப்பின் சார்பில் பேசிய சசி குணரட்ணம் குறிப்பிட்டிருந்தார்.
கல்வி அறக்கட்டளையுடான கல்வி கனெக்சனின் ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான உதவிகளை வழங்க வேண்டியதில்லை என்பது அவருடை வாதம்.
எனினும் கல்வி கனெக்சன் சார்பில் வேறு சில திட்டங்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கான நிதி உதவிகளை தாம் தொடர்ந்து வழங்கப்போவதாகவும் அவர் கூறினார்.
ஐந்து வருடாகலத்திற்கான ஒப்பந்தம் கடன் பெற்றவர்கள் மீளச் செலுத்தத் தானே வேண்டும் என்ற வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவை தான். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமற்றது என்பதை இலங்கைக்கு இரண்டு தடவை  சென்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களால் உணர முடிகின்ற நிலையில்  ஏனையவர்கள் அதனை உணர முடியாமல் இருப்பது ஏன் என்பது தான் முக்கியமானது.
கல்வி அறக்கட்டளையினர் இன்னமும் வினைத்திறனுடன் செயல்பட வேண்டும் கடன் கொடுப்பவர்களை இனம் காண்பதில் காண்பிக்கும் அக்கறையை கடளை மீள பெறுவதிலும் காண்பிக்க வேண்டும். அதற்கான உரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்கள் கல்வி அறக்கட்டளையினால் கவனதித்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமானது.

6 முழு நேரப் பணியாளர்களுடன் இயங்கி வரும் கல்வி அறக்கட்டளை யாழ் போதனா வைத்தியசாயலையின் பணிப்பாளர் என்ற மிகக் கடினமான பொறுப்பினை வகிக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி என்ற தனி மனிதரின் மீது முழுச் சுமையினையும் ஏற்றி வைப்பதும் பொருத்தமற்றது. இந்த நிலையை மாற்றி மருத்தவர் சத்தியமூர்த்தியின் சுமையினை பகிர்வதற்குரிய ஆழுமைகள் கல்வி அறக்கட்டளையோடு இணைய வேண்டியதும் அவசியமானது.

மறுபுறம் கல்வி கனெக்சன் என்ற அமைப்பு கல்வி அறக்கட்டளையுடனான தொடர்புகளை நிறுத்திக் கொள்வது குறித்து அதற்கு இதுவரை காலமும் உதவிகளை வழங்கியவர்களுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தனது இலங்கை விஜயத்தின் போதான அனுபவங்கள் கடன் பெற்ற அனைவரும் அதனை மீளச் செலுத்தும் நிலை உருவாகதமை குறித்து விளக்கமளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி கனெக்சன் என்ற அமைப்பின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கல்வி கனெக்சன் இந்த திட்டத்தில் இருந்து விலகியது குறித்த காரணங்கள் எதனையும் குறிப்பிடவில்லை.

 

கல்வி கனெக்சன் என்ற அமைப்பு கல்வி அறக்கட்டளைக்கான உதவிகளை வழங்கி தாயகத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவே உருவாக்கப்பட்டதாக கூறும் அவர் அந்த அமைப்பு அதன் பிரதான நோக்கத்தில் இருந்து விலகி வேறு திட்டங்களை கையில் எடுப்பதற்கும் இந்த திட்டத்தை நம்பி தமது கல்வியை தொடரும் நூற்றுக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியமைக்கும் காரணம் என்ன என்பது தெளிவுபடுத்த தவறியுள்ளமையும் வருத்தத்திற்குரியது.
மே மாதம் 20ம் திகதி கல்வி கனெக்சனில் உருவாக்கத்தில் பங்கு வகித்த குணா நாகலிங்கமும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி அவர்களும் இணைந்து மருத்தவர் சத்தியமூர்த்தியுடன் ஒரு சந்திப்பினை நடத்தியிருந்தனர். அந்த சந்திப்பின் போது தான் இந்த விடயங்கள் குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
மே மாதம் 25ம் திகதி கல்வி அறக்கட்டளைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் கல்வி கனெக்சன் சார்பில் ஏற்பாடு செய்துள்ள நிதி சேர் Bowl a thon நிகழ்வும் இங்கே நடைபெற்றது
ஒரே வாரத்தில் நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளும் தாயக மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நன்கொடையாளர்கள் மத்தியில் தேவையற்ற கேள்விகளை ஏற்படுத்தி நிற்கின்றது.
இது போன்ற முரண்கள் தாயக மாணவர்களுக்கும் மக்களுக்கும் உதவிகளை செய்ய விரும்புகின்ற நன்கொடையாளர்களுக்கு சலிப்பினையும் வெறுப்பினையும் ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டும் ஏன் இவர்கள் இவ்வாறு செயல்படுகின்றார்கள் என்பது தான் புரியவே இல்லை.
இது போன்ற நடவடிக்கைகள் கால ஓட்டத்தில் உதவி புரிவதற்கு முன்வருபவர்களின் எண்ணிக்கையிலும் உதவித் தொகையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலமாக திட்டங்களை முன்னெடுப்பதும் பின்னர் அந்த திட்டங்களை பாதியில் கைவிட்டு வேறு திட்டங்களை கையில் எடுப்பதும் ஆரோக்கியமற்றது என்பதை இவர்கள் ஏன் உணர மறுக்கின்றார்கள்.
அமைப்புகளை உருவாக்கி திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் போது அவற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தேவைப்படும் ஊடகங்கள் அந்த திட்டங்களை கைவிடும் போது அதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கான உரிமையை கொண்டுள்ளதை இவர்கள் இலகுவாக மறந்த விடுவது ஏன் ?
உண்மையில் ஐந்து வருடங்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது தான் இந்த விலகலுக்கு காரணமா ? கடன் பெற்ற மாணவர்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை அல்லது அதனை மீளப் பெறுவதற்கு கல்வி அறக்கட்டளை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் தான் இந்த விலகலா ? அல்லது இதனையும் அதனையும் தாண்டி தனிமனித முரண்பாடுகள் காரணமா என்பதெல்லாம் சாதரணமாவே எல்லோருக்கும் தோன்றும் சந்தேகங்கள். இதனை தீர்க்க வேண்டிய தார்மீகப் பொறுப்புடையவர்கள் உதாசீனமாக நடந்து கொள்வது உண்மைகளை மறைத்துக் கொண்டு கடந்த செல்வது என்பது மேலே சொன்ன பழ மொழி போல் தமது உயர் கல்வியை தொடர்வதற்கு உதவிகளை எதிர்பார்த்துள்ள நம் தாயக மாணவர் சமூகத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய தீங்கு.

எங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது இது நாங்கள் உருவாக்கிய அமைப்பு எமக்கு நெருக்கமானவர்கள் எம்மை நன்கு தெரிந்தவர்கள் தான் உதவி செய்கின்றார்கள் நாம் விரும்பியதை செய்யும் அதிகாரம் இருக்கின்றது என்று நீங்கள் வீரம் பேசினால் காலம் தான் அதற்கான பதிலை சொல்ல வேண்டும்.

உதாரணமாக கடனாக நிதி உதவியை பெற்ற மாணவர்கள் உண்மையில் அதற்கான தகுதியுடையவர்கள் என்பதை கல்வி அறக்கட்டளை உறுதிப்படுத்திய பின்னரும் அவர்கள் தம்மிடம் உதவி பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை எழுதிய அட்டைகளுடன் அவர்களை நிற்க வைத்து புகைப்பட ஆதாரங்களை பெற்றுக் கொள்ள முயல்வது சரியானதா என்று இந்த திட்டத்தின் மூலமாக உதவி பெற்ற ஒரு மாணவர் அண்மையில் எம்மிடம் கேள்வி எழுப்பினார். அதற்கான பதில் எம்மிடம்; இல்லை ஆனால் அந்த மாணவனின் கேள்வியில் இருந்த வலி மிகக் கொடுமையானது.

தம்மை புனிர்களாகவும் கொடையாளிகளாகவும் உருவகப்படுத்தி தம்மைப் பற்றிய பெரிய விம்பங்களை ஏற்படுத்துவதற்கானதா இது போன்ற திட்டங்கள் என்ற கேள்வியும் இதன் தொடர்ச்சியாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தாயகத்திற்கு உதவிகளை வழங்குவது என்பது தார்மீக அடிப்படையிலானது அதனை முன்னெடுக்கும் போது முற்று மழுதாக சேவை மனப்பாங்குடன் அதனை அணுக வேண்டியது மிகவும் முக்கியமானது.
இறுதியாக நடைபெற்ற கல்வி கனெக்சன் நிதி சேர் இரவு நிகழ்வில் , அமைப்பாளர்களில் ஒருவர் அங்கு சென்று ஏழை மக்களுக்கு ஊட்டி விடுவது போன்றும் , அவர்களோடு நின்று உணவு  உண்பது போன்றும், பல விம்பங்களில் LED திரைகளில் படம் காட்டியது ,நிகழ்வில் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
அங்கு சேவைகளை செய்வதாக இங்கு படம் காட்டுவதும் சமூகத்தின் காவலர்கள் என்று மார்தட்டிக் கொண்டு தமக்கு தாமே மகுடங்களை சூட்டிக் கொள்வதும் ஏற்படையதல்ல. தமக்கு வழங்கப்படும் உதவிகள் சந்தைப் படுத்தப்படுவதை பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி அறக்கட்டளையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு IMHO Canada,  IMHO USA,  ஆகியவற்றுடன் யாழ் பரியோவான் கல்லூரியின்  87ம் ஆண்டு உயர்தரம் கற்ற பழைய மாணவர்களும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளமை வரவேற்பிற்குரியது. குறிப்பாக IMHO அமைப்பானது நதி சேகரிப்புகள் மற்றும் தமது நிர்வாக செயல்பாடுகளுக்கான செலவீனங்களை மிகவும் குறைந்தளவில் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதி உதவியின் பெரும் பகுதி பாதிக்ப்பட்ட மக்களை சென்றடைவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது.

இதனை விடுத்து சேகரிக்கப்படும் நிதியின் அரைப்பங்கினை பிரம்மாண்டமான நிகழ்வுகளை நடத்துவதற்கு செலவிடுவது சரியானது தானா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த பின்னரான சூழலிலும்; சகல விதமான பாதிப்புகளையும் தொடர்ந்து எதிர் கொள்ளும் சமூகத்திற்கு புலம் பெயர் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் காத்திருக்கின்றன.

ஒரு சில தனிநபர்களும் அமைப்புகளும் விடுகின்ற தவறுகளால் இங்கிருந்து முன்னெடுக்கப்படும் பல்வேறு விதமான காத்திரமான உதவித் திட்டங்கள் குறித்தும் உதவி வழங்குவோர் சந்தேகம் கொள்ளும் சந்தர்ப்பங்களும அவர்கள் வழங்கி வரும் உதவிகளை நிறுத்தும்; நிலையும் ஏற்படும். இவ்வாறான ஒரு துர்பாக்கிய சூழல் உருவாவதை தடுப்பதற்கு இது போன்ற விடயங்களை கேள்விக்குட்படுத்துவதும் பொதுமக்களின் கவனித்திற்கு கொண்டு வருவதும் அவசியமானது என்று நாம் கருதுகின்றோம்.

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

 

Share This Post

Post Comment